Friday, April 15, 2016

வெளிநாட்டினர்கள் ஜேர்மன் மொழியை கற்றுக் கொள்ளாவிட்டால் தண்டனை !


ஜேர்மனி நாட்டில் குடியேறியுள்ள மற்றும் புகலிடத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டினர்கள் ஜேர்மன் மொழியை கற்றுக் கொள்ளாவிட்டால் தண்டனை விதிக்கும் புதிய சட்டம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் தன்னுடைய ஆளும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் நேற்று பெர்லினில் ஒரு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஜேர்மனியில் குடியேறியுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் ஜேர்மன் மொழியை கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்க கூடாது என்பதற்கு அனைத்து தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

அதேசமயம், புகலிடத்திற்காக காத்திருக்கும் வெளிநாட்டினர்கள் அரசாங்கம் உருவாக்கும் சுமார் 1,00,000 வேலை வாய்ப்புகள் மற்றும் இதர சலுகைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், வேலை வாய்ப்புகளை தேடிக்கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்யும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்களில் பங்கேற்க வேண்டும்.

புகலிடம் பெற்று அகதிகள் அந்தஸ்த்துடன் இருப்பவர்கள் நிச்சயமாக அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள குடியிருப்புகளில் தங்க வேண்டும்.

இதனை மீறுபவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கப்படும். இவை அனைத்திலும் முக்கியமானதாக, ஜேர்மன் மொழியை கற்றுக்கொள்ளும் வகுப்பிற்கு நிச்சயமாக அகதிகளும் புலம்பெயர்ந்தவர்களும் வர வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் செயல்படுத்த ஒரு புதிய சட்டத்தையும் நடைமுறைப்படுத்த உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


http://news.lankasri.com/germany/03/101256

No comments:

Post a Comment