Tuesday, August 4, 2015

உரிமைக்காகவே போராடுகின்றோம்- இரா. சம்பந்தன்!

நாடு பிளவுபடாத சுயாட்சி ஒன்றையே த.தே.கூட்டமைப்பு கோருவதாகவும் தமிழர்களின் அபிலாஷைகளை சிலர் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவது கவலைக்குள்ளாக்குவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, முன்னாள் நகர சபைத் தலைவர் க. செல்வராசா, வேட்பாளர் க. ஜீவரூபன், வேட்பாளர் துரைரட்ண சிங்கம், வேட்பாளர் சரா. புவேனஸ்வரன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரா. சம்பந்தன் தொடர்ந்தும் பேசுகையில்,

அபிவிருத்தி அடைந்து வருவதில் எனக்கு ஒரு வீதமும் திருப்தியில்லை. அபிவிருத்தியை விடவும் உரிமைப் போராட்டமே பெரிது. மத்திய அரசில் இருந்து நிதி வருகிறது. அதிலிருந்து சில வேலைகளை செய்கின்றோம். அதைவிடவும் அதிகமானது எமது உரிமை. இதற்காகவே போராடுகிறோம்.

எமது கருமங்கள், காணி, பாதுகாப்பு, சட்டம், ஒழுக்கம், கல்வி, உயர் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, விவசாயம், கால் நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம் அதிகாரங்கள் எமது கையில் இருக்க வேண் டும். இந்த கருமங்களை கையாண்டால் நிறைய தொழில்வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம்.

நான் ஒரு அமைச்சராக வருவதென்றால் 10 முறைகள் வந்திருக்கலாம். அமைச்சராக வந்திருந்தால் இரண்டு தொழிற்சாலையை அமைத்து 300 - 400 பேருக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். 5 வருடத்திற்குப் பிறகு அமைச்சர் பதவி இல்லாமல் போனால் எமது போராட்டம் முழுவதும் இல்லாமல் போகின்றது.

அதிகாரங்கள் உங்கள் கைக்கு வந்தால் நீங்கள்தான் எஜமானர்களாவீர்கள், அதற்காகத்தான் போராடி வருகிறோம். எமது பிரச்சினை சர்வதேச மயப்பட்டுள்ளன. எமது மக்களின் பிரச்சினைகள் இந்திய பிரதமர் லண்டன் அமெரிக்கா மனித உரிமை ஆணைக்குழுக்கள் வரை சென்றுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உங்கள் நலன் தொடர்பாகவே தேர்தல் விஞ்ஞா பனத்தை தயாரித்துள்ளது. இதில் அரசியல் தீர்வு நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளோம். காணி, இராணுவ மயமாக்கல், விதவைகள், குழந்தைகள் போராளிகள், மறியலில் உள்ளோர், காணாமல் போனோர், தொழில்வாய்ப்பு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு போன்றவை தொடர்பான பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் எமது விஞ்ஞாபனத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட் டிருக்கின்றது. ஒரு புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். எமது மக்களை இந்த நாட்டிலிருந்து விரட்டி அடித்து கலைக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிய ஜனாதிபதி தோற்கடிக் கப்பட்டுள்ளார்.

எனவே எமது பிரச்சினைகள் இனி தீரலாம்.

சர்வதேச சமூகம் எமக்கு ஆதரவளிக்கும். ஏனெனில் நாங்கள் நியாயமான தீர்வுத் திட்டத்தினையே முன்வைப்போம்.

அதுதான் ஒருமித்த இந்த நாட்டுக்குள் எவ்விதமான பிளவுகளும் ஏற்படாமல் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் பல்வேறு இனங்கள் பல்வேறு மதங்கள், பல்வேறு மக்கள் வாழ்கின்ற இடங்களில் எந்தவிதமான ஆட்சியினை பெற்று அந்தந்த மக்கள் தாங்கள், தாங்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் எந்தவிதமான சுயாட்சியை பெற்று செயல்படுகின்றார்களோ அந்த விதமான சுயாட்சியைத்தான் நாங்கள் கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment