தொலைக்காட்சி!!

Tuesday, August 4, 2015

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பிய விவகாரம்: ஐரோப்பிய யூனியனின் கண்டனத்திற்குள்ளான சுவிஸ் அரசு

இலங்கை அகதிகள் உட்பட வெளிநாட்டு நபர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதில் சுவிஸ் அரசு நியாயமான நடைமுறைகளை பின்பற்றவில்லை என ஐரோப்பிய யூனியன் கண்டனங்கள் தெரிவித்துள்ளது.
சுவிஸின் ஜெனிவா மண்டலத்தில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த சுமார் 10 மனித உரிமை நிபுணர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய நிபுணர்கள் சுவிஸ் அகதிகளின் மனித உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் விதத்தில் அந்நாட்டு அரசு செயல்படவில்லை என கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் அகதிகளின் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையின் சுவிஸ் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், இலங்கை மற்றும் சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அவர்களின் தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பியதில் சரியான நடைமுறைகளை பின்பற்றவில்லை.
அதுமட்டுமல்லாமல், தாய் நாடுகளுக்கு திருப்பி அனுப்பும்போது அந்நாடுகளால் அகதிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற எந்த ஒரு உத்தரவாதத்தையும் அளிக்காமல் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றியது கண்டிக்கத்தக்கது என்றனர்.
மேலும், அகதிகளை திருப்பி அனுப்பும் போது அவர்கள் பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாவதையும் தடுக்க சுவிஸ் அரசு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.
அகதிகளுக்கு அளிக்கப்படும் சித்ரவதைக்கு எதிரான மனித உரிமை குழுவில் இடம்பெற்று இருக்கும் சுவிஸ் அரசு, அந்நாட்டில் அகதிகளின் உரிமைகளை சரிவர பின்பற்றாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
எதிர்காலத்தில் அகதிகளை திருப்பி அனுப்பும்போது அவர்களின் மனித உரிமைகள் காக்கப்படுவதுடன், அவர்களது நாடுகளில் எந்தவித ஆபத்தும் அவர்களுக்கு ஏற்படாது என்ற உத்தரவாதத்தை சுவிஸ் அரசு முன்கூட்டியே அளிக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் சுவிஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment