Saturday, June 20, 2015

இலங்கை- இந்திய பேரூந்து-ரயில் போக்குவரத்து வரலாற்று ரீதியானது!- இந்திய நாளிதழ்!

இந்திய இலங்கை நாடுகளுக்கு இடையிலான வீதிப் போக்குவரத்து தொடர்பில் தற்போது செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன
இந்திய பேரூந்துத்துறை அமைச்சர் நிட்டின் கட்காரி, அண்மையி;ல் 2300 கோடி ரூபா செலவில் பாம்பன்- தலைமன்னார் கரைகளுக்கு இடையில் இந்த பாதை அமைக்கப்பட திட்டம் வரையப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா, இது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கு இடையிலும் பேச்சுவார்த்தைகள் எதுவும் இதுவரை இடம்பெறவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இந்த வீதி அமைப்பு திட்டம் வரலாற்று ரீதியானது என்று இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
இராமாயணத்தில் இராமர் தமது படைகளை இலங்கைக்கு நகர்த்துவதற்காக இந்த பாலத்தை அமைத்ததாக கூறப்பட்டுள்ளது.
19வது நூற்றாண்டில் பிரித்தானியர்கள், இந்த பாலம் அமைப்பு குறித்து தீவிர கலந்தாலோசனைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தியாவில் இருந்து இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களுக்கு தமிழ் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்கு இந்த 35 கிலோமீற்றர் பாலம் உதவும் என்று அவர்கள் சிந்தித்தனர்.
இதனையடுத்து மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வில்லி மெண்டிஸ், இந்த பாலம் அமைப்பு தொடர்பாக வரைபு ஒன்றை முன்வைத்திருந்தார்.
இதன்படி 1894ம் ஆண்டு சென்னையில் உள்ள ரயில்வே பொறியியலாளர் ஆலோசனைக்குழு இந்த திட்டத்தை முன்வைத்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த திட்டப்படி 1913-1914ம் ஆண்டு மண்டபம் ரயில்வே பாதையின் மூலம் பாம்பனுடன் இணைக்கப்பட்டது. இதன் தரிப்பிடம் தனுஸ்கோடியில் அமைக்கப்பட்டது.
இலங்கைத்தரப்பில் 1914ம் ஆண்டு மன்னார், தலைமன்னார் இறங்குதுறையுடன் ரயில்வே பாதை மூலம் இணைக்கப்பட்டது.
எனினும் அகலமான ரெயில் வீதியை அமைக்கவேண்டும் என்று இலங்கை தரப்பும், குறுகிய ரெயில் வீதியை அமைக்கவேண்டும் என்று இந்திய தரப்பும் கருத்துக்களை கொண்டிருந்த நிலையில் பாலம் அமைப்பு ஆரம்பிக்கப்படவில்லை.
இதன் பின்னர் போர் உட்பட்ட பல்வேறு காரணிகளால் இந்த வீதி அமைப்பு இடம்பெறவில்லை.
2002-2004ஆம் ஆண்டு சமாதான காலத்தின்போது இலங்கையின் பிரதமமந்திரியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, அனுமான் பாலத்தை அமைக்க உதவுமாறு இந்தியாவிடம் கோரியிருந்தார்.
இதன்படி, இந்த வீதி நான்கு ஒழுங்கைகளை கொண்ட பேரூந்து வீதியாகவும் ஒருபக்க ஓரத்தில் ரயில் வீதியும் அமைக்கப்படலாம் என்று இலங்கை யோசனை தெரிவித்திருந்தது.
இதற்காக இலங்கையின் முதலீட்டு சபை 88 பில்லியன் ரூபாய்களை உத்தேச மதிப்பீடாக அறிவித்திருந்தது. இதற்காக 2002ம் ஆண்டு இரண்டு தரப்பிலும் பல ஆவணங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
எனினும் அன்றைய தமிழக அரசாங்கம் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டமை காரணமாக இந்திய மத்திய அரசாங்கம் இந்த வீதி அமைப்பு திட்டத்தை கைவிட்டது என்று பேராசிரியர் மெண்டிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் பின்னர் 2009ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற சார்க் போக்குவரத்து துறை அமைச்சர்களின் மாநாட்டின் போது இந்த விடயம் மீண்டும் பேசப்பட்டதாக இந்திய நாளிதழ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment