Friday, May 8, 2015

பிரித்தானிய பொது தேர்தல் – 2015: தனிபெரும்பான்மையை நிரூபித்து 2வது முறையாக அமோக வெற்றி பெற்றார் டேவிட் கேமரூன் (வீடியோ இணைப்பு)

பிரித்தானிய நாடாளுமன்ற பொது தேர்தலில் ஆளும் கட்சி பிரதம வேட்பாளரான டேவிட் கேமரூன் தனி பெரும்பான்மையை நிரூபித்து 331 ஆசனங்களை வென்று இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளார்.
650  ஆசனங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய நாடாளுமன்ற பொது தேர்தல் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே நேற்று தொடங்கியது.
மாலை தேர்தல் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இரவு 10 மணிக்கு தொடங்கியது.
இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவர தொடங்கிய நிலையில், நாட்டின் இரண்டாவது முக்கிய கட்சியான தொழிலாளர் கட்சி தான் முன்னிலையில் இருந்தது.
ஆனால், வாக்குகள் எண்ணும் பணி தொடர்கையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சியை பின்னால் தள்ளி முன்னேற தொடங்கியது.
பிற்பகல் வேளையில், கன்சர்வேடிவ் கட்சி அசைக்க முடியாத ஆசனங்களை வென்று, எதிர்க்கட்சியை நிலை குலைய வைத்தது.
பின்னர், வாக்குகள் எண்ணிக்கை ஆளும் கட்சிக்கு சாதகமாக தொடர, டேவிட் கேமரூன் இரண்டாவதாக ஆட்சி அமைக்கப்போகிறார் என ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
தற்போது பொது தேர்தலின் 650 ஆசனங்களின் வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்துள்ளதால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 331 ஆசனங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 650 ஆசனங்களில் 232 ஆசனங்களை பெற்றுள்ளது.
தற்போது வரை பிரித்தானிய நாடு முழுவதும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 11,334,920 வாக்குகள் கிடைத்துள்ளன.
எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கு 9,344,328 வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்த பொது தேர்தலில் எந்த கூட்டணியின் ஆதரவின்றி தனி பெரும்பான்மையை நிரூபித்துள்ளதால், கன்சர்வேடிவ் கட்சி இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவின் அங்க நாடுகளில் கன்சர்வேடிவ், தொழிலாளர் மற்றும் இதர கட்சிகள் வென்றுள்ள ஆசனங்களின் பட்டியல்:
இங்கிலாந்து
ஆசனங்கள் – 533
கன்சர்வேடிவ் கட்சி – 319
தொழிலாளர் கட்சி – 206
சுதந்திர ஜனநாயக கட்சி – 6
ஸ்கொட்லாந்து
ஆசனங்கள் – 59
எஸ்.என்.பி – 56
கன்சர்வேடிவ் கட்சி – 1
தொழிலாளர் கட்சி – 1
சுதந்திர ஜனநாயக கட்சி – 1
வடக்கு அயர்லாந்து
ஆசனங்கள் – 18
ஜனநாயக ஒன்றிய கட்சி – 8
Sinn Fein கட்சி – 4
சமூக ஜனநாயக &தொழிலாளர் கட்சி – 3
Ulster ஒன்றிய கட்சி – 2
இதர கட்சிகள் – 1
வேல்ஸ்
ஆசனங்கள் – 40
தொழிலாளர் கட்சி – 25
கன்சர்வேடிவ் கட்சி – 11
Plaid Cymru கட்சி – 3
சுதந்திர ஜனநாயக கட்சி – 1
பொது தேர்தல் தோல்வியின் எதிரொலி
பிரித்தானிய பொது தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளதால், அந்த கட்சியின் பொறுப்பிலிருந்து எட் மிலிபாண்டி விலகுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
எட் மிலிபாண்ட் கட்சியிலிருந்து விலகும் பட்சத்தில், அவரது இடத்திற்கு தொழிலாளர் கட்சியின் ஆண்டி பர்ன்ஹம்(Andy Burnham) வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இரண்டாவதாக, துணை பிரதமரும் சுதந்திர ஜனநாயக கட்சி தலைவருமான நிக் கிலெக் (Nick Clegg) இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்ததால், தோல்விக்கான பொறுப்பை ஏற்று சுதந்திர ஜனநாயக கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மூன்றாவதாக, UK Independence கட்சியின் தலைவரான Nigel Farage, தெற்கு தானெட் ஆசனத்தில் தோல்வியை சந்தித்ததால், அதற்கான பொறுப்பை ஏற்று கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரித்தானிய ராணியை சந்திக்கும் கேமரூன்
தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளதால், பிரித்தானிய ராணியான இரண்டாம் எலிசபெத், டேவிட் கேமரூனை அரண்மனைக்கு அழைத்து வாழ்த்துக்களை தெரிவிக்கவுள்ளார்.
ராணியுடனான இந்த சந்திப்பில், அமைச்சர்களை நியமித்து ஒரு வலுவான அரசை உருவாக்குங்கள் என டேவிட் கேமரூனிற்கு ராணி ஆலோசனை வழங்குவார்.
தற்போது பக்கிங்ஹம் அரண்மனைக்கு வந்துள்ள டேவிட் கேமரூன், ராணியை சந்திக்கும் அனுமதி பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment