Wednesday, April 29, 2015

நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 10,000 ஆக உயரும்: நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா தகவல்

நேபாளத்தில் நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயரக்கூடும் என்று அந்த நாட்டு பிரதமர் சுஷீல் கொய்ராலா அச்சம் தெரிவித்தார்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளும், கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகின. அங்கு மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா செய்தியாளர்களிடம் நேற்று செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக உயரலாம். தொலைவிட கிராமங்களில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ' என்றார்.
மீட்புப் பணியில் தொய்வு: முன்னதாக, காத்மாண்டில் திங்கட்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் சுஷீல் கொய்ராலா பேசியதாவது:
நிபுணர்கள், நிவாரணப் பொருள்கள் பற்றாக்குறையால், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளப் பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.
இருப்பினும், நிலநடுக்கத்தால் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிப்பவர்களுக்கு தாற்காலிக முகாம்கள் அமைக்கவும், அவர்களுக்கு குடிநீர், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தொடர்ந்து கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பேரழிவிலிருந்து மீள, அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று சுஷீல் கொய்ராலா வலியுறுத்தினார்.
இதேவேளை, பிரதான பூகம்பத்தைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் சிறிய அளவான பூமியதிர்ச்சிகள் காரணமாக மக்கள் தொடர்ந்து திறந்த வெளிகளிலேயே முகாமிட்டுள்ளனர்.
இந்த பூகம்பத்தால் அந்நாட்டின் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 7 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பிரதான பூகம்பம் மற்றும் அதைத் தொடர்ந்து இடம்பெற்ற பூமியதிர்ச்சிகளில் சிக்கி 8,000 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் நிலவும் சீரற்ற காலநிலை மண்சரிவுகள் என்பன நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பூகம்ப அனர்த்தத்தில் பலர் தமது சொத்துக்களையும் கால்நடைகளையும் இழந்துள்ளதால் தமது வாழ்வை தொடர்ந்து முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேபாளம் வெளிநாட்டு உதவிகளை கோரியுள்ளது.
பூமியதிர்ச்சி இடம்பெற்று மூன்று நாட்களாகின்ற நிலையிலும் பல சடலங்கள் இடிபாடுகளின் கீழிருந்து மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment