Wednesday, February 18, 2015

அமெரிக்க கோவிலில் “வெளியே போ” என எழுதப்பட்ட வாசகம்: இந்தியா கண்டனம்

அமெரிக்க நாட்டில் உள்ள இந்து கோவிலின் சுவரில் “வெளியே போ” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் மாகாணத்தின் சியாட்டில் துறைமுக நகரில் பிரசித்தி பெற்ற இந்து கோவில் ஒன்று உள்ளது.
இந்த கோவில் சுவரில் ‘வெளியே போ’ என பெயிண்டால் எழுதி, இனவெறி, மதவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை இந்தியாவில் பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறுகையில், அமெரிக்கர்கள் எப்போதும் தங்களை பன்முகத்தன்மை கொண்டவர்கள், அனைத்து தரப்பினரையும் உள்ளடங்கிய சமூகத்தை கொண்டவர்கள் என்று கூறுகிறார்கள்.
அப்படிப்பட்ட அமெரிக்காவில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருப்பது ஏற்கத்தகுந்தது அல்ல.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அறிக்கையும் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாரதீய ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது, ஒரு இந்தியரை அமெரிக்க பொலிசார் மூர்க்கத்தனமாக தாக்கி உள்ளனர். ஒரு இந்தியரை (மதுக்கடை அதிபர்) சுட்டுக்கொலை செய்துள்ளனர். ஒரு கோவிலில் விஷமிகள் விஷமத்தனமான செயல் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மார்ட்டின் லூதர் கிங் இருந்திருந்தால், இந்த சம்பவங்களால் உண்மையாகவே வருத்தப்பட்டிருப்பார் என கூறி உள்ளார்.
தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர் உமர் அப்துல்லாவும் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார். இது பற்றி அவர் டுவிட்டரில், அமெரிக்காவில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வாசகத்துடன் இந்து கோவிலில் விஷமத்தனம் செய்துள்ளனர் என கூறியுள்ளார்.
வாஷிங்டன் இந்து கோவில் மற்றும் கலாசார மையத்தின் அறங்காவலர் குழு தலைவர் நித்யா நிரஞ்சன் கூறியதாவது, அமெரிக்காவில் இப்படி ஒரு காரியம் நடக்கக்கூடாது.
வெளியே போகச் சொல்வதற்கு நீங்கள் யார்? இந்த நாடு, குடியேறியவர்களின் தேசம் அல்லவா? என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment