Sunday, January 11, 2015

கனடா வாழவைப்போம் அமைப்பு முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றவர்களுக்கு கிளிநொச்சியில் உதவி!



பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா வாழவைப்போம் அமைப்பு கனடாவில் வாழும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் கருணை உள்ளங்களுடன் இணைத்து மாற்றுவலுவுள்ள போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி வருகின்றது.
கனடாவாழவைப்போம் அமைப்பின் உதவியின் மூலம் ஏராளமான உறவுகள் வாழ்வின் ஆதாரத்தை பெற்றுக் கொண்டுள்ளன. இந்த உதவிகளின் தொடர்ச்சியாக 2015ம் ஆண்டின் கிளிநொச்சியில் முதல் உதவி வழங்கலாக கனடாவாழ் புலம் பெயர் உறவுகளான பாகிதா சங்கரலிங்கம் பொ.குணதாசன் பயஸ் மரியதாஸன்(ம.ஜெபக்சன் ம.றொசான்) ஆகிய கருணையுள்ளங்களின் மூலம் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்று குடும்பமாக இருப்பவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி கருதி கற்றல் உபகரணங்களை உயிரிழை அமைப்பின் ஊடாக இன்று வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வு இன்று கிளிநொச்சி கனகாம்பிகைகுளம் அன்னை இல்லத்தில் உயிரிழை அமைப்பின் தலைவர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் குடும்ப நல மையத்தின் வடக்கு பிராந்திய இணைப்பாளர் பிறேம்குமார் கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர் பொன்னம்பலநாதன் உயிழை அமைப்பின் செயலாளர் இருதயராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் கலந்துகொண்ட முள்ளந்தண்டு பாதிப்புற்ற குடும்பங்களை சேர்ந்த பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இங்கே கலந்துகொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றுகையில் இந்த மண்ணில் பல அடையாளங்கள் இன்றும் எமது அபிலாசைகளுக்காக இனத்துக்காக கொடுக்கப்பட்ட தியாகத்தை காட்டி நிற்கின்றன.
அதில் உன்னதமான ஒன்றான முள்ளந்தண்டு பாதிப்புற்றவர்களின் வாழ்வு நம் கண்முன்னே இருக்கின்றது.விழுப்புண்ணடைந்து பாதிப்புற்றவர்களை 2009க்கு முன்னர் எத்தகைய உயந்த எண்ணங்களுடன் அரவணைத்து அவர்களுக்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தார்கள் என்பதை இந்த மண் மறந்துவிடவில்லை.
ஆனால் போருக்கு பின் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் தம் வாழ்வை மீள கட்டியெழுப்பு எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டார்கள் என்பது வார்த்தைகளில் வடிக்கமுடியாதது.
ஆனாலும் இத்தகைய பாதிப்புற்றவர்களுக்குள் இருந்த உறுதி தன்னம்பிக்கை விடாமுயற்சி கனடா வாழவைப்போம் போன்ற புலம் பெயர் உள்ளங்களின் உதவிக்கரம் உள்ளுர் தொண்டு அமைப்புக்களின் ஆதரவும் இன்று வாழ்வை கொண்டு நகர்த்த ஊன்றுகோலாக அமைந்திருக்கின்றது.
முள்ளந்தண்டு பாதிப்புற்றவர்களின் எதிர்காலம் அவர்களின் பிள்ளைகளின் கையிலும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவிலும் தங்கியிருக்கின்றது.அதற்காக கல்வி வளர்ச்சிக்கான இந்த உதவி வழங்கப்படுகின்றது.
இதை நெறிப்படுத்த உயிரிழை என்ற அமைப்பு உதயமாகி செயற்பட்டுவருவதும் அதை முள்ளந்தண்டு பாதிப்புற்றவர்களே நிர்வகித்து வருவதும் மகிழ்ச்சிக்கு உரியது.தொடர்ந்தும் உங்கள் வாழ்வின் வளர்ச்சியில் உயர்ச்சியில் எம் பங்கு இருக்குமென தெரிவித்தார்.

No comments:

Post a Comment