Friday, November 21, 2014

வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது: அதிர்சியில் இருந்து இன்னும் மீளாத நிலையில் மகிந்த ராஜபக்ஷ !


புலிகளிடம் இருந்து கருணாவைப் பிரித்து, புலிகள் பகுதிக்குள் கருணாவின் ஆட்களை அனுப்பி ஆள ஊடுருவும் படையணி என்று சொல்லி அதிர்சி கொடுத்த மகிந்தராஜபக்ஷ குடும்பத்திற்கு, போறாத காலம் நெருங்கிவிட்டது. வளர்த்த கடா மார்பில் பாய்கிறது என்பார்களே ! சரியாகச் சொல்லப்போனால் அந்த நிலை தான் இன்று ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது என்று விவரமாகப் பார்ப்போம்... இந்த சுவாரசியமான விடையத்தை !
மகிந்தர் அங்கம் வகிக்கும் மற்றும், அவரது சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியியோடு, சில கொசுறுக் கட்சிகள் கூட்டுச்சேர்ந்து, "ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு" என்ற கட்சியின் கீழ் இலங்கையை ஆட்சிசெய்து வருகிறார் மகிந்தர். மகிந்தர் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன, இதுவரை காலமும் முன் நாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரோடு நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். சகல துறைகளிலும் வேவுபார்கும் ஆட்களை வைத்து வேவுபார்த்துவரும், மகிந்தர் அன் கோ முதலில் இந்த இடத்தில் தான் கோட்டை விட்டுவிட்டார்கள். முன் நாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரை இவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. காலில் போட்டு மிதித்தார்கள். அதனால் அவர் எதிர்கட்சி தலைவரான ரணில் பக்கம் மெல்ல மெல்ல சாய ஆரம்பித்தார். இதுவே தற்போது வினையாக முடிந்துள்ளது எனலாம்.
எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள, ஜனாதிபதி தேர்தலில் யாரை வேட்பாளராக அறிவிப்பது என்பதில் பெரும் குழப்பத்தில் இருப்பதாக கதைகள் வெளியாகியது. அதுபோலவே அவர்கள் வேட்ப்பாளரை அறிவிப்பதை வேண்டும் என்றே இழுத்தடித்தார்கள். அவர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று மகிந்தருக்கு முதலில் புரியவில்லை. இம் முறை எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு, முன் நாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் கட்சியும், சந்திரிக்காவின் மற்றும் இதரகட்சிகளின் ஆதரவும் உள்ளது. இதனால் தான் இவர்கள் பொது வேட்பாளர் ஒருவரை தேர்ந்து எடுப்பதில் இழுபடுகிறார்கள் என்று தான் எல்லோரும் நினைத்து வந்தார்கள். ஆனால் கதை வேறுமாதிரியாக திரும்பியுள்ளது. மகிந்தரின் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேனவே தமது பொது வேட்பாளர் என்று திடீர் என, எதிர்கட்சிகள் சேர்ந்து அறிவித்து மகிந்தருக்கு பெரும் அதிர்சி வைத்தியம் கொடுத்துள்ளார்கள்.
அவர்கள் இந்த அறிவித்தலை வெளியிடும் வரை(இன்று), மைத்ரிபால சிறிசேன அமைச்சராகவே இருந்துள்ளார். இது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அனைத்து தலைவர்களையும் அழைத்த மகிந்தர், மைத்ரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள், அவரது நண்பர்கள் என பலரை கட்சியில் இருந்து விலக்குவதாக அறிவித்துள்ளார். அது மட்டும் அல்ல அமைச்சு பதவிகளையும் பறித்துள்ளார். இலங்கை அமைச்சரவையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வழமையாக மகிந்தரோடு உட்கார்ந்து "ஜொனி வோக்கர்" என்னும் விஸ்கியை அருந்தி ஊர் கதைகள் பேசிவரும் நபர் தான் இந்த மைத்ரிபால சிறிசேன. ஆனால் இன்று வளர்த்த கடா மார்பில் பாய்ந்துள்ளது. அட அது மட்டும் அல்ல, இவர் எதிர்கட்சியில் போய் இணைந்தாலும் பரவாயில்லை, ஆனால் சனிப் பிணம் சும்மா போகாது என்பது போல இவர், அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் உட்பட 20ற்கும் குறையாத முக்கிய உறுப்பினர்களுடன் எதிர் கட்சியில் இணைய உள்ளார் என்ற செய்தியும் கூடவே வெளியாகியுள்ளது. இதுதான் மகிந்தவுக்கு இயத்தை பிளக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
நேற்றுவரை துள்ளித் திரிந்த மகிந்தர் இன்று பெட்டிப் பாம்பாக அடங்கவேண்டிய சூழ் நிலை உருவாகியுள்ளது. துரோகம் என்றால் என்ன ? நயவஞ்சகம் என்றால் என்ன ? கழுத்தறுப்பது என்றால் என்ன ? மகிந்தருக்கு புரிந்திருக்கும். இதுவரை காலமும் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் துரோகங்களையும், நம்பிக் கழுத்தறுப்புகளையுமே மகிந்தர் செய்து வந்தார். இப்போது அவருக்கு அது திரும்பவும் வருகிறது. மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்களிடையே மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர். இம்முறை நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தல், மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. இதில் வட கிழக்கு தமிழர்கள் என்ன முடிவை எடுக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. மகிந்தரை வீட்டுக்கு அனுப்ப இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் இணைந்து எதிர்கட்சிக்கு வாக்களித்தால் மகிந்தரின் நிலை கேள்விக்குறியாகும் என்பதில் தற்போழுது சிறிதளவேனும் சந்தேகமில்லை எனலாம்.
ஆனால் முடிவுகள் ஈழத்தில் உள்ள தமிழர்களின் கைகளில் தான் இருக்கிறது என்பது போக, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன முடிவை எட்டும் என்பதும் இதுவரை தெரியவர வில்லை.
http://www.athirvu.com/newsdetail/1486.html

No comments:

Post a Comment