Wednesday, August 20, 2014

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் வெறியாட்டம்!

இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினருக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் எகிப்தின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் காஸா பகுதி மீது இஸ்ரேல் மும்முனைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.
கடந்த பல வாரங்களாக இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினருக்கிடையிலான மோதல் தீவிரமடைந்து வந்தன. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர்.
இந்நிலையில் இரு தரப்பினருக்கிடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வரும் எகிப்து நாட்டின் ஆலோசனைக்கு இணங்க 72 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இருதரப்பினரும் சம்மதித்தனர்.
இந்த போர் நிறுத்தத்துக்கு இடையில் இரு தரப்பினரையும் கெய்ரோவுக்கு வரவழைத்து நிரந்தர சமாதானத்தை உண்டாக்கும் வகையில் சமரச பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் ஏதும் முன்னேற்றம் ஏற்பட்டதா? என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
கடந்த 14ம் திகதியோடு தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடையவிருந்த நிலையில் பேச்சுவார்த்தை தொடர்வதற்கு வசதியாக மேலும் 120 மணி நேரத்துக்கு போர் நிறுத்தத்தை நீட்டிக்கும்படி எகிப்து அரசு கேட்டுக் கொண்டது.
அதற்கிணங்க, 120 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
சமாதான பேச்சுவார்த்தையில் சாதகமான போக்கு தென்பட்டதால் இரு தரப்பினரும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் 24 மணி நேரம் நீட்டித்துள்ளதாக நேற்று கெய்ரோவில் அறிவிக்கப்பட்டது.
எனினும் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் மீண்டும் ரொக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டிய இஸ்ரேல் அரசு கெய்ரோவில் நடைபெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தையை ரத்து செய்து விட்டதாக அறிவித்துள்ளது.
காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது 10 ரொக்கெட்கள் வீசப்பட்டதாகவும், அதனையடுத்து, இஸ்ரேல் விமானப்படைகள் காஸா மீது இரு முறை நடத்திய ஆவேச தாக்குதலில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் பலியானதாகவும், 24 பேர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னதாக, காஸா பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் இரண்டாயிரம் பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 429 பேர் அப்பாவி குழந்தைகள் மற்றும் 1,354 பேர் பெண்கள் என்று ஐ.நா. சபை கணக்கிட்டுள்ளது.

No comments:

Post a Comment