ஓவ்வொரு மனிதனின் வாழ்விலும் விதி எவ்வாறு அமைந்துள்ளதோ அவ்வாறு தான் மரணங்களும் நிகழ்கின்றன. அவ்வாறான விதியின் ஒரு விளையாட்டு தான். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை தலாங்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இளங்கோவனின் பரிதாப மரணமுமாகும்.
இவருடைய மனைவி ஜமுனாராணி தனது குடும்ப வறுமையின் காரணமாக சவூதி அரேபியாவிற்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளார். நான்கு பெண் பிள்ளைகளின் நு. சரஸ்வதி த. ம. வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றனர்.
வீட்டில் அம்மா இல்லாவிட்டாலும் தனது பிள்ளைகளின் பராமரிப்பில் கூடிய அக்கறை செலுத்தி வந்தார் இளங்கோவன். சம்பவம் நிகழ்ந்த தினமும் வழமை போலவே தனது பிள்ளைகளுடன் சந்தோசமாக பேசிக் கொண்டு பகலுணவை சாப்பிட்டுவிட்டு, வீட்டுத் தேவைக்காக விறகு வெட்டுவதற்காக தனது விவசாய காணியிலிருந்த மரம் ஒன்றின் கிளைகளை வெட்டுவதற்காக முற்பட்டார்.
அவ்வேளையில் இவர்களுடைய நண்பர்களும் இவருக்கு உதவி செய்வதற்காக வந்திருந்தார்கள். வந்தவர்களில் ஒருவர் மரம் ஏறுவதில் நன்கு பரிட்சயம் என்றபடியால் அவர் மரத்திலேறி கிளைகளை வெட்டியதோடு, ஏனையோர் மரக்கிளைகள் லயன் கூரைகளில் விளாதவாறு கயிறுகளின் மூலம் கட்டி நான்கு பக்கமும் உறுதியாக பிடித்திருந்தனர்.
பல மணிநேர போராட்டத்தின் பின் மரத்தின் நுனி பகுதி வெட்டப்பட்டு முறிந்து விழ கயிறுகளை பிடித்திருந்த மூவர் பிடியை விட்டுவிட, இறுதியாக இளங்கோவனின் கைகளில் மாத்திரம் கயிறு சிக்கிக் கொண்டது. இதன்போது, வெட்டப்பட்ட மரத்தின் நுனி பகுதி எதிர்பாராத விதமாக சுழன்று விழுந்ததால் மரக்கிளைகளோடு கயிற்றை பிடித்திருந்த இளங்கோவனும் தூக்கி வீசப்பட்டு மரத்தடியில் இருந்த மலசலகூட கட்டிடத்தின் மீது மிகப் பலமாக அடிப்பட்டு கீழே விழுந்தார்.
வேகமாக மோதுண்டதால் முகம் மற்றும் நெஞ்சுப்பகுதியில் மிக பலமான காயங்கள் ஏற்பட்டிருந்ததோடு, அயலவர்கள் உடனடியாக லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த 25 ஆம் திகதி பரிதாபகரமான நிலையில் இளங்கோவன் உயிரிழந்தார்.
இவருடைய இழப்பானது இவரது குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் பாரிய ஒரு இழப்பாகும். இவருடைய சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் உறவனர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இவரது மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இளங்கோவனின் மரணம் ஏனையவர்களும் ஒரு தொழிலில் ஈடுபடும் போது மிக அவதானமாக பாதுகாப்புடன் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதற்கு சிறந்த முன்னுதாரணமாகும்.Saute-FamileSaute-Famile-01Saute-Famile-02Saute-Famile-03