Tuesday, July 29, 2014

ரம்ஜான் கொண்டாட வந்த கேமரூன் துணைப் பிரதமர் மனைவியைக் கடத்திய தீவிரவாதிகள் !


கேமரூன் நாட்டு துணைப் பிரதமர் மனைவியை போகோஹரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். நைஜீரியாவின் ஒரு பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவிக்கக் கோரி போகோஹரம் தீவிரவாத அமைப்பு போராடி வருகிறது. சமீபத்தில் பள்ளி மாணவிகள் 200க்கும் அதிகமானவர்களைக் கடத்திய தீவிரவாதிகள் சிறையில் உள்ள தங்களது இயக்கத்தவர்களை விடுதலை செய்யக் கோரி நிர்பந்தித்து வருகின்றனர்.
இதனால் நைஜீரியாவில் பதற்ற சூழல் காணப்படுகிறது. இதற்கிடையே, உலக நாடுகளின் முயற்சியை தொடர்ந்து நைஜீரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் போகோஹாரம் தீவிரவாதிகளை ஒடுக்க கேமரூன் அரசு தங்கள் நாட்டு ராணுவத்தை அனுப்பியது. நைஜீரியாவின் அண்டை நாடான கேமரூனின் இச்செயல் போகோஹரம் தீவிரவாதிகளை கோபமடையச் செய்துள்ளது. தங்களது கோபத்தை வெளிக்காட்டும் விதமாக நேற்று கேமரூன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள நகரமான கொலொபத்தாவில் நுழைந்த தீவிரவாதிகள் அந்நாட்டின் துணை பிரதமர் அமாதாவ் அலியை தாக்கியுள்ளனர்.
பின்னர் அவரது மனைவியை கடத்திச்சென்றனர். மேலும், அந்நகரின் மேயராக உள்ள செய்னி பவ்கர் லாமெய்ன்னையும் தீவிரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர். இத்தாக்குதலின் போது 3 பேர் கொல்லப்பட்டதாக கேமரூன் நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தனது குடும்பத்துடன் ரம்ஜான் கொண்டாட வந்த துணை பிரதமரை தாக்கிய தீவிரவாதிகள், அவரது மனைவியை தீவிரவாதிகள் கடத்தியதால், அந்நாடு சோகத்தில் மூழ்கியுள்ளது. தற்போது அங்கு நெருக்கடியான நிலைமை காணப்படுவதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment