Thursday, May 29, 2014

உத்தரப் பிரதேசத்தின் இரு இளம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு மரத்தில் தொங்கவிட்ட கொடூரம் (வீடியோ இணைப்பு)

இந்தியாவின் வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் கிராமமொன்றில் இரு இளம் பெண்கள் பலரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு மரத்திலிருந்து தொங்கவிடப்பட்டுள்ளனர்.
இந்த கோரமான சம்பவம் தொடர்பில் இதுவரை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பெண்கள் காணாமல் போனது தொடர்பிலான முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தின் படவுன் என்ற மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த பதின்ம வயதுப் பெண்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் காலை படவுன் மாவட்டத்தின் கட்ரா ஷஹாடட்கஞ் என்ற கிராமத்தில் இந்த இரு இளம் பெண்களும் ஒரு மரத்திலிருந்து தொங்கவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேரை பொலிசார் தேடி வருகின்றனர். பிரேதப் பரிசோதனைகள் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளன. பரிசோதனையின் முடிவுகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பெண்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பது பற்றியும், எவ்வாறு அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டார்கள் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் தேசியப் பெண்கள் ஆணையம் இது தொடர்பில் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வேறு ஒரு பாலியல் வல்லுறவு சம்பவத்தில் ஒரு கிராமப் பெரியவர்களின் உத்தரவின் பெயரில் ஒரு இளம் பெண்ணை, அந்த கிராமத்தினர் பலர் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெண் வேறு சமூக ஆணை காதலித்தமைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment