Sunday, May 26, 2013

போர் விமானங்கள் சூழ தரையிறங்கியது



பாகிஸ்தானில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த விமானத்தை, பிரித்தானிய போர் விமானங்கள் 2 சுற்றிவளைத்து ஸ்டான்ஸ்டென் விமானநிலையத்தில் தரையிறக்கிய சம்பவம் ஒன்று நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. பயணிகள் விமானத்துக்கு வானில் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் தான், விமானப்படை போர் விமானங்கள் எஸ்கார்ட் செய்ய அனுப்பப்படுவது வழக்கம். இதனால், இந்தச் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் இது. தட இலக்கம் PK709 விமானம், 297 பயணிகளுடனும் 11 விமான சிப்பந்திகளுடனும் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து பிரிட்டனின் மான்செஸ்டர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

மான்செஸ்டரில் அதிகளவு பாகிஸ்தானியர்கள் வசிப்பதால், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்துள்ள நேரடி விமானசேவை இது. ஆனால், இந்த விமானம் சென்றுகொண்டிருந்த பாதையை லைவ்வாக (ராடரில்) பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கும். காரணம், விமானம் பிரிட்டிஷ் வான்பகுதிக்குள் வராமல், வெளியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தின்பின் பிரிட்டிஷ் விமானப்படையின் டைபூன் ரக போர் விமானங்கள் இரண்டு, பாகிஸ்தான் விமானத்தின் பின்புறமாக வந்து, அருகே பறக்கத் தொடங்கின. அதையடுத்து மூன்று விமானங்களும் பிரிட்டிஷ் வான்பகுதிக்குள் பிரவேசித்தன. ஆனால், பாகிஸ்தான் விமானம் செல்லவேண்டிய மான்சஸ்டர் நோக்கி செல்லாமல், லண்டன் நோக்கி பறந்தன.

லண்டனில் உள்ள பெரிய இரு விமான நிலையங்களான ஹீத்ரோ மற்றும் கேட்விக் நோக்கி செல்லாமல், லண்டன் புறநகரப் பகுதியில் உள்ள ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் ஒதுக்குப்புறமான ரன்வே ஒன்றில் பாகிஸ்தான் விமானம் தரையிறங்கியது. பிரிட்டிஷ் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தமது பெயரை வெளியிடாமல் தெரிவித்த தகவலின்படி, விமானத்துக்குள் இருந்த இரு பயணிகள் விமானத்தை அழித்து விடுவதாக கூறியுள்ளனர். அதையடுத்து பாகிஸ்தான் விமானி, அந்த தகவலை பிரிட்டிஸ் ஏர்-ட்ராபிக் கன்ட்ரோல் டவருக்கு தெரிவித்திருக்கிறார். அவர்கள் கொடுத்த ஆலோசனை, “விமானம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதால், பிரிட்டனுக்குள் வரவேண்டாம். பிரிட்டிஸ் வான் பகுதிக்கு வெளியே சுற்றிக்கொண்டு இருங்கள். நாங்கள் ஆளனுப்புகிறோம்”

இதையடுத்து, விஷயம் பிரிட்டிஷ் விமானப்படைக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தமது போர் விமானங்கள் இரண்டை அனுப்பினார்கள். அந்த விமானங்கள், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தின் இருபுறமும் பாதுகாப்பு கொடுத்தபடி, பிரிட்டனுக்குள் அழைத்துச் சென்றன. விமான நடமாட்டம் அதிகமுள்ள மான்செஸ்டருக்கு அழைத்துச் செல்லாமல், லண்டன் புறநகரப் பகுதியில் உள்ள ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தை நோக்கி பாக். விமானத்தை எஸ்கார்ட் செய்து அங்கே தரையிறங்க வைத்தன பிரிட்டிஷ் போர் விமானங்கள். இந்த நடைமுறை அதற்காக என்றால், ஒருவேளை விமானத்தின் அச்சுறுத்தலாக உள்ள நபர்கள் விமானத்தின் கட்டுப்பாட்டை தமது கைகளில் எடுத்துக்கொண்டு (செப். 11-ல் நடந்தது போல), பிரிட்டனில் உள்ள இலக்கு எதையாவது தாக்குவதற்கு விமானத்தை திருப்பினால், பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்காக!

ஆனால், பாகிஸ்தான் விமானம், இறுதிவரை பாக். விமானிகளின் கைகளிலேயே இருந்தது. அவர்கள் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் நேற்று மதியம் 2.15க்கு விமானத்தை தரையிறக்கினார்கள். விமானத்தில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரும் ஆண்கள். உருது பேசக்கூடிய பிரிட்டிஷ் பிரஜைகள் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து பிரிட்டனுக்கு குடியேறியவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. “விமானத்தை அழிப்போம்” என்று சும்மா வாயால் சொன்னால், அதற்காக இவ்வளவு பெரிய ஆபரேஷன் (ஏகப்பட்ட செலவாகியிருக்கும்) செய்திருக்க மாட்டார்கள். இதில் வேறு ஏதோ விவகாரம் உள்ளது. ஓரிரு நாட்களில் தெரியவரும் என நாம் நினைக்கிறோம் !





No comments:

Post a Comment