Friday, February 1, 2013

மரண தண்டனை விதிக்கப்பட்ட சுதேஸ்கரை காப்பாற்ற முயற்சி !


கத்தார் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கையை சேர்ந்த 22 வயதான வெங்கடாச்சலம் சுதேஸ்கர் அவர்களை விடுவிப்பதற்கான குருதிப் பணத்தை வழங்குவதற்கான நிதி உதவிக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த சுதேஸ்கர், ஒரு கைகலப்பில் கேரளாவை சேர்ந்த மற்றுமொரு இளைஞரை கொலை செய்ததாக அவருக்கு கத்தாரில் மரண தண்டனை டிசம்பர் 31 ஆம் திகதி விதிக்கப்பட்டது. ஆயினும் இறந்தவரின் குடும்பத்தோடு செய்யப்பட்ட சமரசத்தை அடுத்து இலங்கை ரூபாய் 35 லட்சம் குருதிப்பணமாகப் பெற்று சுதேஸ்கரை மன்னிக்க இறந்தவரின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆயினும், இந்தப் பணத்தை திரட்ட முடியாத வறிய நிலையில் உள்ள சுதேஸ்கர் குடும்பத்தினர் இது தொடர்பாக இலங்கை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பலன் கிட்டவில்லை என்று கூறியிருந்தனர். இது குறித்து சுதேஸ்கரின் தாயார் இன் செவ்வியை பிபிசி தமிழோசை முன்னர் ஒலிபரப்பியிருந்தது. அதனை அடுத்து தாமும் இலங்கை அரசாங்கத்திடம் இது குறித்து தொடர்புகொண்டதாகக் கூறும் ஆசிய மனித உரிமைகள் ஆணைய செயல் இயக்குனரான பசில் பெர்ணாண்டோ அவர்கள், ஆனால் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திடம் இருந்தோ அல்லது ஜனாதிபதியிடம் இருந்தோ இந்த பணக்கொடுப்பனவுக்கான எந்தவிதமான உறுதி மொழியையும் பெற முடியாது போனதால், தாமே இந்தப் பணத்தை சேகரிக்க முன்வந்ததாக தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment