Friday, June 29, 2012

ஆபாசமாக ஆடை அணிய வேண்டாம்: புதிய விதிமுறைக்கு எதிராக பெண்கள் போராட்டம் !



பாலியல் ரீதியான தொல்லையில் இருந்து தப்பிக்க, பெண்கள் ஆபாசமாக ஆடை அணிய வேண்டாம் என்று சீன அதிகாரிகள் கூறியதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் மெட்ரோ ரயில் போக்குவரத்து கழகம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அதில் மெட்ரோ ரயில்கள், ரயில் நிலையங்களில் இளம்பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. அரைகுறை ஆடைகள் அணிவதால்தான் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.
ஆண்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க, பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ரயில் போக்குவரத்து கழகத்தை கண்டித்து, கறுப்பு துணியை முகத்தில் சுற்றிக் கொண்டு மெட்ரோ ரயிலில் ஏராளமான பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நான் அப்படிதான் ஆடை அணிந்து வருவேன். அதற்காக என்னை சித்ரவதை செய்ய முடியாது என்ற வாசகம் அடங்கிய அட்டைகளுடன் இளம்பெண்கள் கோஷமிட்டனர்.
எனினும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகளின் அறிக்கையை பெண்கள் பலர் வரவேற்றுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்காக நல்ல எண்ணத்துடன்தான் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
உடல் முழுக்க ஆடை உடுத்தி வந்தால் மட்டும், ஆண்கள் திருந்தி விடுவார்களா? சில்மிஷத்தில் ஈடுபடுவதை நிறுத்தி விடுவார்களா? என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளம்பெண்கள் கோரசாக கோஷமிட்டனர்.

No comments:

Post a Comment