Wednesday, June 20, 2012

வெளிநாட்டு மோகமும் பரிதாபமான கட்டார் வாழ்க்கையும்!!



அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் டோஹாவிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிலாளர் நல அலுவலராகப் பணி புரிந்தார். இந்த நிறுவனத்தின் தொழிலாளர் குடியிருப்பில் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதைப் புலன் விசாரணை செய்த நமது நண்பர் பல அதிர்ச்சியூட்டும் விடயங்களைக் கண்டுபிடித்தார். இதைப் போன்ற தற்கொலைகள் பல நடைபெறுகின்றன என்ற தகவல் அவற்றிலொன்று.

இவர் தமது விசாரணை அறிக்கையில் நிறுவனத்தின் பல மனிதாபிமானமற்ற செயல்களைக் குறை கூறி எழுதியிருந்ததால் நிறுவன முதலாளிகள் கோபமடைந்தனர். தமது அறிக்கையில் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதால் அவரை வேலையிலிருந்து நீக்கத் தீர்மானித்தனர். முதலாளிகள் அளித்த விளக்கம் தொழிலாளர் நல அலுவலர் என்ற பதவி அரசாங்கம் வலியுறுத்துவதனால் உருவாக்கப்பட்டது. அதாவது கண் துடைப்புக்காக. மனித உரிமை மீறல் குறித்து எதையும் நீ பேசக் கூடாது என்றனர். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை.

இங்கு பணி புரியும் பல தொழிலாளர்களின் நிலை பரிதாபமானது. ஏறத்தாழ 90 வீதத்தினர் வறுமையில்தான் வாழுகின்றனர். காலையில் இரண்டு குபூசை டீயில் தொட்டுச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் தொழிலாளர் பலர் உள்ளனர். தங்கள் வசதிகளுக்கென்று மிகக் குறைவாக செலவழித்து மீதிப்பணத்தை ஊரில் காத்து நிற்கும் மனைவி பிள்ளைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலோர் ஒப்பந்த ஊதியத்தில் வருபவர்கள். ஆசியாவின் பல நாடுகளிலிருந்தும் வருகிறார்கள். வேலைக்கு ஆளெடுக்கும் பல ஏஜெண்டுகள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். இவர்கள், கட்டார் நாட்டில் வேலை, கை நிறையச் சம்பளம், குளிர்விக்கப்பட்ட வீடுகள், நல்ல உணவு, போக வர வாகன வசதி என்று அள்ளி விடுவார்கள். சொந்த நாட்டில் போதுமான அளவிற்குச் சம்பாதிக்க முடியவில்லை, பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பலர் இந்த ஏஜெண்டுகள் விரிக்கும் மாய வலையில் சிக்கி விடுவார்கள். கடவுச்சீட்டுக்காக, விசாவிற்காக இரண்டு இலட்சம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று ஏஜெண்டுகள் வற்புறுத்துவார்கள். நிறையச் சம்பளம்தான் கிடைத்து விடுமே என்ற நம்பிக்கையிலும் கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்ற ஆர்வத்திலும் கையிலிருக்கிற சேமிப்பு, மனைவி, பிள்ளைகளின் தங்க நகைகள் அனைத்தையும் அடகு வைத்து வருகிற பணம், சொந்தக்காரர், நண்பர்களிடம் வாங்கிய கடன் அனைத்தையும் கொண்டுவந்து ஏஜெண்டுகளிடம் கொடுப்பார்கள். கண்களில் கனவுகளுடன் – மனதில் நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் மனைவி மக்கள் விடை கொடுத்து அனுப்புவர்.

இங்கு வந்து இறங்கும்போதுதான் தெரியும், எவ்வளவு ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று. இவர்களின் கடவுச்சீட்டு ஏஜெண்டுகள் கையில் இருக்கும். தப்பிக்க இயலாது. தஙகுவதற்கு கோழிக்கூண்டு போன்ற ‘போர்ட்டாகேபின்’ கள், ஒரே அறையில் அடுக்குக் கட்டில்களில் பலர், வேலை செய்யாத ஏர் கண்டிஷன்கள், வேலைக்குச் செல்ல குளிர்விக்கப்படாத பேருந்துகள் – இவர்கள் படும் அவதி சொல்லக்கூடியவை அல்ல. இந்தத் துன்பங்களை எல்லாம் தாண்டி பெருந்துன்பம் ஒன்று காத்துக்கொண்டிருக்கும். அதுதான் மிகக் குறைந்த ஊதியம். சாதாரணமாக ஒருவருக்கு ஆயிரம் ரியாலுக்கும் மிகக் குறைவாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது. அறுநூறிலிருந்து எண்ணூறு ரியால் ஊதியமே கொடுக்கப்படுகிறது. இதில்தான் வேலை வாங்குவதற்கென்று பட்ட கடன்களை அடைக்க வேண்டும், நகைகளை மீட்க வேண்டும், குடும்பத்தினர் சாப்பிட வேண்டும், பிள்ளைகள் படிக்க வேண்டும். என்ன செய்ய இயலும்? சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லவும் முடியாது. நிர்ப்பந்தமான நிலை. தங்களையே மாய்த்துக்கொள்ளத் துணிந்து விடுகின்றனர் பலர்.

இந்நிலை மாற என்ன செய்ய முடியும்? இந்த நாட்டின்(கட்டார்) ஆட்சியாளர்களைக் குறை சொல்ல இயலாது. பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்தாலும் தொழிலாளர்களை அழைத்து வரும் ஒப்பந்த ஏஜெண்டுகள் 75 வீதத்தை தங்களுக்கென்று எடுத்துக் கொள்கின்றனர். இதில் மிகப்பெரிய குற்றவாளிகள் ஏஜெண்டுகள்தாம். ஆசை காட்டி மோசம் செய்கிறவர்கள்.

பல நாடுகளில் அரசாங்கமே வேலைவாய்ப்புகளுக்கான ஒப்பந்தங்களை மேற்பார்வையிட்டு இடைத்தரகர்கள் இல்லாமல் பணிகளைப் பெற்றுக்கொள்ள உதவுகின்றன. இங்கு பணிகளுக்கு வரத் துடித்துக் கொண்டிருப்பவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.

ஜெபராஜ் தேவசகாயம்

No comments:

Post a Comment