Friday, June 29, 2012

ஜேர்மனியில் சொந்த நாட்டின் குடியுரிமையை விட்டுத்தர மறுக்கும் புலம்பெயர்வோர்கள் !



ஜேர்மனியில் OECD என்ற பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சில தீர்க்கப்படாத பிரச்னைகள் இருந்தாலும், புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கையிலும், வேலையிலும் பாகுபாடு காணப்படவில்லை.
புலம்பெயர்வுக்கு ஊக்கமளிக்கக் கூடாது என்பது ஜேர்மனியின் திண்ணமான முடிவாக இருப்பினும் கடந்த வருடம் புலம்பெயர்ந்தோரின் வருகை பத்து சதவீதம் அதிகரித்துள்ளது.
2008 – 2011 வரையிலான நான்காண்டுகளில் 4% அதிகரித்து இப்போது மொத்த வேலையில் இவர்களின் பங்கு 66.5% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் உலகளவில் புலம்பெயர்ந்தோர் சதவீதம் 3% குறைந்திருப்பதாக OECD அறிக்கை குறிப்பிடுகிறது.
ஜேர்மானியருக்கு சமமான வேலை வாய்ப்பு புலம்பெயர்வோருக்கு தரப்படாவிட்டாலும் இவர்களுக்கு வேலை கிடைப்பதில் தடை ஏதும் இல்லை என்று வெளிநாட்டவருக்கான ஜேர்மன் ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தோரில் வேலை இல்லாதோரின் எண்ணிக்கை கடந்த 2010ம் ஆண்டில் 18.2 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு 16.9% குறைந்துள்ளது. ஜேர்மனியரில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 7.2% ஆக உள்ளது.
பலர், தாங்கள் வேலை செய்யுமிடத்திலும் வசிக்குமிடத்திலும் பாகுபாடு எதனையும் உணரவில்லை என்று கூறுவதாக புலம்பெயர்வு மற்றும் ஒருங்கிணைப்புக்கான ஜேர்மன் அறக்கட்டளையின் ஆய்வு தெரிவிக்கிறது. இதில 20% பேர் வேலைத்தளங்களில் பாகுபாடு இருப்பதாகத் தெரிவித்தனர்.
புலம்பெயர்ந்தோர் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்கின்றனர். எனினும் ஜேர்மானிய மாணவர்களை விட புலம் பெயர்ந்த மாணவர்களின் இடைநிற்றல் இரண்டு மடங்கு கூடுதலாக உள்ளது. 2010ம் ஆண்டில் 12.8% பேர் பள்ளியை விட்டு இடையிலேயே நின்றுவிட்டனர்.
ஜேர்மன் மக்கள்தொகையில் 20% பேர் புலம்பெயர்ந்தோர் ஆவர். இவர்களின் பாதிப்பேரிடம் மட்டுமே ஜேர்மன் கடவுச்சீட்டு உள்ளது. புலம்பெயர்ந்தோர் பலர் குடியுரிமை வாங்க முயலவில்லை.
ஸ்டட்கார்டு மற்றும் பெர்லினில் உள்ள 1220 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், துருக்கி, ஆசியா, பால்கன் நாடுகளைச் சேர்ந்தவர்களும் முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 61.5% பேருக்கு குடியுரிமை பெறும் எண்ணம் கிடையாது.
சோவியத் யூனியனிலிருந்து வந்தவர்களில் 41% பேர் குடியுரிமை பெற விரும்புகின்றனர். ஆசியா, பால்கன் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் 21% பேரும் துருக்கி நாட்டவரில் 15% பேரும் குடியுரிமை பெற ஆர்வமாக உள்ளனர். மொத்தத்தில் இவர்களில் பாதிப்பேர் கூட தங்களின் சொந்த நாட்டின் குடியுரிமையை விட்டுத்தரத் தயாராக இல்லை.
பாதிக்கும் மேற்பட்டோர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க விரும்புகின்றனர். 20% பேர் தங்கள் வாக்குகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை என்கின்றனர். மூன்றில் இருவர் புலம்பெயர்ந்தோர் சார்பாக அரசியல்வாதிகளாக உருவாகி தங்களின் பிரச்னைகளுக்காக வாதாடவேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment