Friday, April 13, 2012

பூகம்பத்தின் எதிரொலி: இலங்கையை அண்மித்து உருவாகும் புதிய தகடு !


இலங்கையை அண்மித்து புதிதாக தகடொன்று உருவாகி வருவதாக புவியியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் கபில தஹாநாயக்க தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும் நிலநடுக்கம் தொடர்பில் எதிர்வு கூறமுடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவின் வட பகுதியின் மேற்குக் கரைக்கு அப்பால் நேற்று பிற்பகல் 8.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேற்று பிற்பகல் 2.08 அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தினால் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மாலை 6.30 அளவில் தளர்த்தப்பட்டது.
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுவதற்கான காரணமாக அமைந்தது.
எனினும் இந்த நிலநடுக்கத்தின் போது, புவி சிறுத்தட்டுக்களில் அதிர்வு ஏற்பட்டிருந்த போதிலும், நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் சுனாமி அனர்த்தத்தை தோற்றுவிக்கவில்லை.
புவி சிறுதட்டு நேற்று நெட்டாங்கில் அதிர்வுற்றதாக பிரித்தானிய புவியியல் நிபுணரான ரொகர் மியூஸன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலத்தில் இந்தோனேஷியாவை அண்மித்து ஏற்பட்ட பெரும்பாலான நிலநடுக்கங்களால் அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளதுடன், புவித் தட்டுக்களில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பாரிய நீரலைகள் ஏற்படாதென்பது புவியியல் நிபுணர்களின் கருத்தாகும். இவ்வாறான சூழ்நிலைகள் சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை குறைவாகவே கொண்டிருப்பதாக பிரித்தானிய புவியியல் நிபுணர் ரொகர் மியூஸன் கருத்து தெரிவித்துள்ளார்.
புவி 12 தட்டுக்களை கொண்டமைந்துள்ளது என்பது விஞ்ஞானிகளின் நிலைப்பாடாகும். இந்திய - அவுஸ்திரேலிய புவித் தட்டே இலங்கையின் அமைவிடமாகவும் உள்ளது.
உலகில் வருடாந்தம் அதிகளவான நிலநடுக்கங்கள் பதிவாகின்ற ஜப்பான், பசுபிக் புவித்தட்டின் மீதே அமைந்துள்ளது.
தற்போது 13 ஆவது புவி தகடொன்று உருவாகி வருவதாக சிரேஷ்ட பேராசிரியர் கபில தஹநாயக்க சுட்டிக்காட்டுகின்றார்.
நேற்று பிற்பகல் 2.08 க்கு சுமாத்ராவின் வட பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து, இன்று மாலை 3 மணிவரை இந்து சமுத்திர வலயத்தில் 47 பின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
அவற்றுள் 30 அதிர்வுகள் சுமாத்ராவின் வட பகுதியிலும், ஏனைய 17 அதிர்வுகள் இந்து சமுத்திரத்தின் வட பகுதியிலும் ஏற்பட்டுள்ளன.




No comments:

Post a Comment