Tuesday, March 27, 2012

சிறுமி துஷா சுடப்பட்ட இறுதிநேர வீடியோ வெளியானது !


கடந்த வருடம் ஸ்டொக்-வெல் என்னும் லண்டன் புறநகர்ப் பகுதியில் வைத்து 5 வயது தமிழ் சிறுமி ஒருவர் சுடப்பட்ட சம்பவத்தை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கமாட்டார்கள். பிரித்தானியாவில் ஆகக் குறைந்த வயது சிறுமி ஒருவர் சுடப்பட்ட சம்பவமும் இதுவே ஆகும். தனது அமாவுடன் கடைக்குச் சென்ற இச் சிறுமி அங்கே விளையாடிக்கொண்டு இருந்தவேளை நெஞ்சில் சுடப்பட்டார். கோஷ்டி மோதல் காரணமாக இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலை நடத்திய அனைவரும் ஆபிரிக்க இனத்தவர் எனத் தெரிவித்துள்ள பொலிசார், துஷா சுடப்பட முன்னர் இறுது நேரத்தில் எடுக்கப்பட்ட CCTV வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

சுமார் 1 வருடமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த துஷா அவர்கள் சில வாரங்களுக்கு முன்னரே தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட 3 ஆபிரிக்க நாட்டவர்கள் மீது கடுமையான வழக்கை பொலிசார் தொடுத்துள்ளனர். கேடுவிளைவிக்கும் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தமை, துப்பாக்கியால் சுட்டமை, மற்றும் கொலைசெய்யும் நோக்குடன் இந்த ஆயுதங்களைப் பாவித்தமை என்பன இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆகும். இதன் அடிப்படையில் இவர்களுக்கு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உடல்நலம் தேறிவரும் சிறுமி துஷா, தனது வாழ் நாளில் நடக்கமுடியாத நிலை தோன்றியிருப்பதாக மருத்துவர்கள் கவலைதெரிவித்துள்ளனர். பல மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய நிலையும் தோன்றியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அறிவியல் வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வரும் நிலையில், நிச்சயம் அவரை சில வருடங்கள் கழித்தாவது குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.





No comments:

Post a Comment