Wednesday, September 28, 2011

நெதர்லாந்தில் புலிகளுக்கு நிதி திரட்டிய ஐவருக்கும் நீண்டகால சிறைத்தண்டனை வழங்குமாறு கோரிக்கை

[ புதன்கிழமை, 28 செப்ரெம்பர் 2011, 03:51.39 PM GMT ]

நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாக சந்தேகிக்கப்படும் ஐவருக்கு 10 முதல் 16 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை வழங்குமாறு டச்சு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சட்டவிரோதமான முறையில் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஐந்து இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இதில் மனிதாபிமான நோக்கங்களுக்காக நிதி திரட்டும் போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு குறித்த ஐந்து பேரும் நிதி திரட்டியதாகவும், நெதர்லாந்திலிருந்து இலங்கையின் பயங்கரவாத நடவடிக்கைக்கு உதவியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் சர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்பதால் நீண்ட காலத் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என சட்டத்தரணி வோர்ட் பெர்டின்டேஸன் ( Ward Ferdindessen) தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தண்டனை வழங்குவதால் எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் இடம்பெறாது தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், சந்தேக நபர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும், அதிர்ச்சியளிக்கும் வகையிலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி விக்டர் கோப் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் மாத நடுப்பகுதியளவில் சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு குறித்த தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ள நிலையில் குறித்த கோரிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment