Friday, September 23, 2011

இலங்கைப் படையின் போர்க்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமைதிப்படையே!- ''ராஜீவும் ராஜபக்சவும்” கூட்டத்தில் பேராசிரியர் மணிவண்ணன்

[ வெள்ளிக்கிழமை, 23 செப்ரெம்பர் 2011, 06:12.34 AM GMT ]
கடந்த செப்டம்பர் 19 நாளன்று, சேவ் தமிழ் இயக்கம் சார்பில், ”போர்குற்ற வரலாற்றில் ராஜீவும் ராஜபக்சவும்” என்னும் தலைப்பில் ஒரு அரங்கக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
பெருமளவானோர் கலந்துகொண்ட அரங்கக் கூட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் உரையாற்றுகையில்,
இலங்கை அதிபர் ஜெயவர்த்தன என்னும் சிங்கள இராஜதந்திரியின் சதிவலையில் விழுந்த ராஜீவ், இந்திய பாராளுமன்றத்தின் தீர்மானமும், ஒப்புதலும் இல்லாமல் அடுத்த நாட்டின் பிரச்சினைக்கு தனது நாட்டு இராணுவத்தை அனுப்பினார். இது இந்திய வெளியுறவுத்துறை செய்த மிகப்பெரிய தவறு.
ஆனால், இலங்கை சென்ற இரண்டு மாதங்களுக்குள்ளேயே இந்திய அமைதிப்படை தமிழர்களுக்கெதிரான தனது தாக்குதலை ஆரம்பித்தது. இந்த தமிழர்களுக்கெதிரான பல்முனைத் தாக்குதல் 87, 88, 89 என மூன்று வருடங்கள் நடந்தது.
போரின் பின்பு யாழ்ப்பாணம் சென்றிருந்த நான் 12 வயது சிறுமியிடம் பேசினேன்."அண்ணா, சிங்கள இராணுவம் பற்றி எங்களுக்குத் தெரியும், ஆனால் இந்திய இராணுவம் வந்தவுடன் சுதந்திரம் (பாதுகாப்பு) கிடைத்துவிடும் என்று நினைத்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இந்திய இராணுவமும் எங்களுக்கு கொடுமைகள் தான் புரிந்தது”என்றாள்.
இது இந்திய ஈழத்தமிழருக்கு செய்த சரித்திர துரோகம். ஈழத்தமிழருக்கு இந்தியாவுடன் பல்லாயிரமாண்டுகால உறவு உள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான வெளியுறவு கொள்கையை இந்தியா இலங்கையில் கடைபிடிக்கவில்லை.
வடகிழக்கு, காஷ்மீர், மத்திய மலைவாழ் மக்கள் என எங்குமே இந்தியா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால், தமிழகம் எப்படி அவர்களுக்காக போராடாமல் ஒதுங்கியது என்பதுதான் ஆச்சரியம்.
2009-ல் ஏற்பட்ட இழப்புக்கு 1987-ல் இந்தியா வித்திட்டது- 1987-ல் ஜெயவர்த்தன ஜே.வி.பி. கூட்டத்தில் பேசினார். “நாம் செய்ய வேண்டியதை இந்திய இராணுவம் செய்யும்” என்று அவர் திட்டமிட்டு இந்தியாவையும், புலிகளையும் மோத வைத்தார்.
ஈழம் என்பது பல்லாயிரமாண்டு கால சரித்திர உண்மை. அது 1940-களுக்கு பிறகு சிங்கள இனவாதிகளின் அடக்குமுறையால் வலுப்பெற்றது. அந்த இன அடக்குமுறைக்கு எதிராக நாம் குரல் கொடுப்பது தீவிரவாதம் ஆகாது. ஆனால், அரசாங்கம் தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் நாம் நமது அகிம்சையான பேராட்டங்களை கூட விட்டு விட்டு ஒதுங்கினோம்.
இந்தியாவுக்கு எப்போதும் சிங்களவரிடம் இருந்து பிரித்து தமிழர்களுக்கு உரிமை பெற்று தருவதில் விருப்பம் இல்லை. ஆனால், நமது எண்ணம் மாறுபட்டது. மனித உரிமைகள் எங்கே ஒடுக்கப்பட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். அதுவும் ஒடுக்குவது இந்தியா எனும்போது நாம் அதிகமாக குரல் கொடுக்க வேண்டும். நமக்கு அந்த உரிமையுண்டு.
2500 சிங்கள இராணுவ வீரர்கள் யாழ்ப்பாணத்தின் விடுதலைப்புலிகளின் முற்றுகைக்குள் சிக்கியபோது இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி சிங்கள இராணுவ வீரர்களை விடுவித்தது. அதே இந்தியாவிற்கு தங்களின் செயற்கைகோள் படங்களில் 3 லட்சம் மக்கள் உணவு, தண்ணீர், மருந்துகள் இல்லாமல் தாக்கப்பட்டது தெரியாதா? ஏன் அவர்களை காப்பாற்ற இந்திய நடவடிக்கை எடுக்கவில்லை?
சேவ் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் பேசுகையில்,
நான்காம் கட்ட ஈழப் போரில் சிங்களப் பேரினவாத அரசு புரிந்த இனக்கொலை குற்றத்திற்காக அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டு தமிழர்களும் போராட்டங்களைத் தீவிரப் படுத்திக் கொண்டிருந்தோம். 2009 லிருந்து இரண்டாண்டுகளைக் கடந்தும் ஆறாத காயங்களுடன், அடங்காத சினத்துடன் தமிழக அரசியல் வெளியைத் தமிழீழ ஆதரவு குரல் நிரப்பியிருந்தது. இனி இது ஈழத் தமிழர் பிரச்சனை அல்ல இது தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்குமான பிரச்சனை என்று வளர்ந்து கொண்டிருந்தது. ஈழ ஆதரவு இயக்கம். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இனக்கொலை குறித்த விவாதம் நடப்பதற்குப் பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்தச் சூழலில் தான் இந்திய அரசு பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் தூக்குத் தண்டனைக்கு நாள் குறித்தது. மூன்று தமிழர்களின் உயிரைப் பணயம் வைத்து இனக்கொலை விசாரணை கோருவதைவிட்டு தமிழகத்தை விலகச்  செய்தது மட்டுமின்றி ராசீவ் கொலையை மீண்டும் தமிழக மக்களின் நினைவுக்கு கொண்டுவந்து குற்றவுணர்ச்சியைத் தூண்டி வெற்றி கண்டுள்ளது.
மேலும் தெற்காசிய பிராந்தியத்தில் எந்த ஒரு மூலையிலும் போர்குற்ற விசாரணை என்ற ஒன்று நிகழாது தடுத்து நிறுத்த இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. இலங்கையை காப்பாற்ற மட்டுமின்றி தன் சொந்த நலனுக்காகவும் தெற்காசிய பிராந்தியத்தில் எந்த ஒரு தேசிய இனத்திற்கு எதிராக நடந்து வரும் போர்குற்றங்கள் குறித்த விசாரணையை இல்லாது செய்து வருகிறது இந்தியா.
இன்று தமிழக மக்களிடம் இலங்கைக்கு எதிரான போர்குற்ற விசாரணை தேவை என்ற முழக்கங்கள் தீவிரமடைந்திருப்பதை நன்கு உணர்ந்த இந்தியா, மக்களை போர்குற்ற விசாரணையில் இருந்து திசைதிருப்பும் நோக்கோடு மூவரின் தூக்குதண்டனைக்கான நாள் குறித்தது.
மூன்று தமிழர் உயிரை மீட்பதென்பதைத் தமிழகம் தன்னுடைய மானப் பிரச்சனையாக உணர்ந்தது. இந்த முறை போராட்டம் செங்கொடி தீக்குளிப்போடு ஒரு உயிரை இழந்து நின்று கொண்டுள்ளது. மக்கள் போராட்டத்தின் ஒரு பயனாக தமிழக சட்டசபை ’தூக்கை நிறுத்த வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. உண்மையில் சட்டப் போராட்டத்தின் மூலம் தூக்கு இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சிங்கள அரசுகள் அனைத்துலக அரங்கில் தங்களை இனக்கொலை குற்றத்திலிருந்து காத்துக் கொள்வதற்கான  அரச தந்திர கைவரிசைகளைக் கவலையின்றி செய்து கொண்டிருக்கின்றன.
ஒன்றரை இலட்சம் உயிர்கள் இந்திய அரசின் உதவியுடன் கொல்லப்பட்ட பின்பே தமிழக மக்கள் ’ராசீவ் கொலை’ என்ற குற்றவுணர்ச்சியிலிருந்து மீளத் துணிந்துள்ளனர். ஆனால் 2011 ல் நின்று கொண்டிருந்த நம்மை மீண்டும் 1991 க்கு தள்ளிவிட்டது இந்திய அரசு. மூன்று தமிழர் உயிர் என்றோம். பகைவர்கள் ’ராசீவோடு உயிரிழந்த 18 தமிழர்களின் உயிருக்கு என்ன பதில்?’ என்று நம் பக்கமே திருப்பி விடுகின்றார்கள். நாம் அரசியல் நியாயமற்றவர்கள் போல சித்தரிக்கப்படுகின்றோம். ஆனால் அதுவா உண்மை?
ராசீவ் கொலை என்பது இந்திய அமைதிப் படை ஈழத் தமிழர்க்கு எதிராக செய்த அட்டூழியங்களின் எதிர்வினையாகவே நடந்தது என்ற உண்மை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குள்ளேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
ராசபக்சேவை இனக்கொலை குற்றத்திலிருந்து காத்து தமிழீழ விடுதலைக்கு தடை போடத் தானே இந்திய அரசு நினைக்கின்றது. ராசபக்சே மட்டுமல்ல ராசீவ் காந்தியும் போர்க்குற்றவாளியே என்ற உண்மையைப் போட்டுடைப்போம். அது உண்மையில் மூன்று தமிழர் உயிர் காக்கும் மக்கள் போராட்டங்களை விரிவாக்கும்.
சிங்கள இராணுவம் இலட்சத்து ஐம்பதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்தது என்றால் ராசீவின் இந்திய இராணுவமும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது. சிங்கள இராணுவத்தைப் போலவே இந்திய இராணுவமும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறைக் கொடுமைகளை நிகழ்த்தியது.
ராசபக்சே வெள்ளை கொடி ஏந்தி வந்தவர்களைக் கொல்ல சொன்னது போல் ராசீவும் சமாதானம் பேசப் போன பிரபாகரனைக் கொல்ல உத்தரவிட்டார். ‘என் இராணுவம் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டது’ என்று ராசபக்சே சொன்னது போல் ‘இந்திய இராணுத்தினர் ஒரு கையைப் பின்னால் கட்டிக் கொண்டு ஒற்றைக் கையால் கவனமாக சண்டைப் போடுகின்றனர்’ என்று ராசீவும் அன்று சொன்னார்.
ராசபக்சே போல ராசீவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்க நினைத்தார். ஈழத் தமிழர்தம் தமிழீழ தாயக வேட்கை உலகத் தமிழர்களின் தாகமாக மாறும் என்று ராசபக்சே கருதியிருக்கவில்லை. அது போல் அன்று புலிகளின் தாகம் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் தாகமாக மாறி போராட்டம் புது வேகம் எடுக்கும் என்று ராசீவும் நினைக்க வில்லை.
எனவே, ராசீவும் ராசபக்சேவும் வரலாற்றின் அடுத்த அடுத்தப் பக்கங்களிலேயே நின்று கொண்டிருக்கின்றார்கள். இருபது ஆண்டுகளாக இருட்டடிக்கப்பட்ட உண்மைகளை ஊருக்கு உரக்க சொல்வதற்கு இது தான் தருணம். இதை நாம் முன்பே செய்திருக்க வேண்டும். இப்போதும் செய்யாமல் விட்டால் தான் அது பிழை.
இன்று போர்க்குற்றங்கள் பற்றிய பரவலான விழிப்புணர்வு மக்களுக்கு இருக்கின்றது. இப்போதாவது இந்திய அமைதி படையின் அட்டூழியங்களை அம்பலமாக்குவோம். நமக்கு வலியைக் கொடுக்க நினைக்கும் இந்திய அரசுக்கே வலியைத் திருப்பி தருவோம்.
20 ஆண்டுகளுக்கு முன் நடந்த ராசீவ் கொலை என்ற அரசியல் பிழையை  திருத்தி எழுத நமக்கு இருக்கும் ஒற்றை வழி ராசீவின் பிம்பத்தைத் தகர்த்தெறிவதே. ராசீவ் போர்க்குற்றவாளி ! இராசபக்சே இனக்கொலையாளி!
தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களின் உரை:
இன்று ராஜபக்சே நடத்திய இனப்படுகொலைகளுக்கு ‘முன்னோடி’ இந்திய இராணுவம் தான் என்பதை ஒப்பிட்டுக் காட்டுவதற்காக சில நிகழ்வுகளை மட்டும்  கூறுவது பொருத்தமாக இருக்கும்.
சாட்சிகளற்ற இனப் படுகொலைகளை’ நடத்தியது சிறீலங்கா அரசு. அதற்காக முதலில் ஆட்சிக்கு எதிராக எழுதிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதைத் தான் இந்திய இராணுவமும் ஈழத்தில் நடத்தியது.
1987 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் அதிகாலை யாழ்ப்பாணம் நகரத்துக்குள் நுழைந்த இந்திய இராணுவம், தமிழர்களின் குரலாக ஒலித்து வந்த ‘ஈழ முரசு’, ‘முரசொலி’ என்ற இரண்டு நாளேட்டின் அலுவலகர்களை துப்பாக்கி முனையில் கைது செய்தது. அதுமட்டுமல்ல அச்சு இயந்திரத்தையும், அலுவலகத்தையும் வெடி வைத்து தகர்த்தனர்.
அதே நாளில் கொக்குவில் என்ற இடத்திலிருந்த விடுதலைப் புலிகள் தொலைக்காட்சி சேவையான நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தில் இந்திய இராணுவம் புகுந்து, ஒளிபரப்புக் கருவிகளை பறித்துச் சென்று விட்டது.
‘ஈழ முரசு’இ ‘முரசொலி’ நாளேடுகள் இலங்கை அரசு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தமிழ் நாளேடுகள்; முதலில் மக்களுக்கு செய்திகளை அறிவிக்கும் ஊடகங்களை முற்றாக நசுக்கிய பிறகு, இந்திய இராணுவம் மக்களுக்கு எதிரான இராணுவ வேட்டையில் இறங்கியது. இதைத்தான் ராஜபக்சேவும், இறுதி கட்டப் போரில் செய்தார்.
மருத்துவமனைகளை ராஜபக்சேயின் இராணுவம் குண்டு வீசித் தாக்கி, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளையும் மறுத்த இரத்தக் கண்ணீர் வரவழைக்கும் அதிர்ச்சித் தகவல்களை இப்போது ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை கூறுகிறது.
அதைத் தான் இந்திய இராணுவமும் செய்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் இறங்கிய இந்திய இராணுவம் 1987 அக்டோபர் 21 அன்று யாழ்ப்பாணம் மருத்துவமனையைக் குறி வைத்தது. இதுபற்றி ‘நியூ சேட்டர் டே ரெவியூ’ என்ற கொழும்பு ஏடு வெளியிட்ட விரிவான செய்தி இது. (1987இ நவம்பர் 7)
அக். 21 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் யாழ்ப்பாண மருத்துவமனையை இந்திய இராணுவம் கைப்பற்றியது. அன்று தீபாவளி நாள். இராணுவத்தினர் உடனடியாக 50 நோயாளிகளை சுட்டுக் கொன்றனர். அவரது உடல்கள் அங்கேயே எரிக்கப்பட்டு, மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே தரையில் வீசப்பட்டன.
அடுத்த இரண்டு நாளில் அக்.23 ஆம் தேதி 83 நோயாளிகள் - ஊழியர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. இதற்கான உத்தரவுகளை பிறப்பித்தார் இந்திய இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரார். எல்லா நடவடிக்கைகளையும் யாழப்பாண கோட்டை தலைமை இராணுவ முகாமிலிருந்து கண்காணித்தவர் கேப்டன் பிஸ்ட். அவருக்கு (இந்தப் படுகொலைகளில்) உதவியாக செயல்பட்டவர்கள் டாக்டர் கனகராஜா, டாக்டர் பன்சாரி. இவர்களும் இந்திய “அமைதிப்படை” அதிகாரிகள்தான். கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்த உடல்களுக்கு பிரேத பரிசோதனைகள் செய்யப்படவில்லை; விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
இறந்தவர்களில் 20 பேர் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய ஊழியர்கள். மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்றவர்கள், அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் உடல் அழுகிய நிலையில் சவக்கிடங்கில் கிடந்தது. 12 பேர் உடல் அடையாளங்களை காண முடியவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் 20 பேரின் சடலங்கள் ஏனைய ஊழியர்களால் அடையாளம் காணப்பட்டன. 11 பேர் உடல்கள் அவர்களின் அடையாள அட்டைகளை வைத்து அடையாளம் காணப்பட்டன.
மருத்துவ மனையில் மின்சாரத்தை இராணுவத்தினர் துண்டித்ததால், மூச்சு சுவாசத்துக்கான ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்ட நோயாளிகளும் தீவிர மருத்துவ கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை உட்பட 3 நோயாளிகளும் இறந்தனர். யாழ்ப்பாண மருத்துவமனை முற்றிலும் நாசமடைந்தது. மின்சாரமோ தண்ணீரோ இல்லை. சவக்கிடங்கு நிரம்பி வழிந்தது. ஒரு வயதிலிருந்து 85 வயது வரையுள்ள 85 சடலங்கள் 3 நாட்களில் குவிந்து கிடந்தன. ‘நர்சு’களின் குடியிருப்புகள் ஷெல் வீச்சுக்கு உள்ளாயின.
தெல்லிப்பளையில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு மருத்துவமனையும் மூடப்பட்டது. மானிப்பாய் என்ற இடத்தில் இருந்த ‘கிரீன் மெமோரியன்’ என்ற தனியார் மருத்துவமனையையும், இராணுவம் மிரட்டி மூடச் சொல்லி விட்டது” என்று செய்தி வெளியிட்ட அந்த ஏடு, இறந்தவர்களின் நீண்ட பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டது. எந்த ஒரு யுத்தத்திலும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதை ‘போர்க் குற்றம்’ என்று சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன.
மருத்துவமனையில் - ஷெல் வீசியது மட்டுமல்ல; எவரும் சிகிச்சை பெறவும் கூடாது என்று செயல்பட்ட வேறு மருத்துவமனைகளையும் மிரட்டி மூடி விட்டார்கள். காந்தி தேசமான இந்தியாவிலிருந்து ராஜீவ் காந்தியால் அனுப்பி வைக்கப்பட்ட ‘அமைதிப்படை’ இந்தப் போர்க் குற்றங்களைத்தான் செய்தது. 
சர்வதேச உதவி அமைப்புகளை போர்ப் பகுதியிலிருந்து ராஜபக்சே வெளியேற்றியதுகூட இந்தியா காட்டிய வழியில்தான்! இந்திய இராணுவம் சர்வதேச மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச சட்டவியலாளர்கள் குழு போன்ற அமைப்புகள் தமிழ் ஈழப் பகுதிக்குள் நுழைவதற்கு ‘இந்திய அமைதிப் படை’ அனுமதி மறுத்தது. அவுஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் இதைக் கண்டித்தன.
இராணுவத் தாக்குதல் நடக்கும்போது மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், மின்சாரம் போன்றவை கிடைக்காமல் செய்துவிட வேண்டும் என்ற ‘போர்க் குற்றத்தை’ இலங்கை இராணுவத்துக்கு கற்றுக் கொடுத்ததும் இந்திய ராணுவம் தான்.
வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு, உணவு, மருந்து பற்றாக்குறை கடுமையாகி விட்டது. கடைகளில் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு கிடைக்காமல் போய்விட்டது. செஞ்சிலுவை சங்கம் உடனே தலையிட்டு தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்; தமிழ் மக்கள் மீது இந்திய இராணுவம் ஷெல் வீசிக் கொல்வதை உடன் நிறுத்த வேண்டும்” என்று தொலைபேசி வழியாக அவசர வேண்டுகோள் விடுத்தார் வடக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்.  
மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் என்றெல்லாம் ஐ.நா. குற்றச்சாட்டுகளைக் கூறினாலும் அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்ற அணுகுமுறையை இலங்கைக்கு கற்றுக் கொடுத்ததும் இந்தியா தான்!
இந்திய இராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா.வில் மனித உரிமை குழுவில் கடும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 1987 பிப்.1 மதல் மார்ச் 11 வரை ஜெனிவாவில் நடந்த ஐ.நா.வின் மனித உரிமைக் குழுவில் பேசிய பல பிரதிநிதிகள் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டிக் கண்டித்தனர். அந்தக் கண்டனங்களை ‘தமிழ் இன்டர்நேஷனல்’ விரிவாகப் பதிவு செய்தது; அதுபற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை இந்திய அமைதிப் படை! 
விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன், காவல்துறை பொறுப்பாளர் இளங்கோ, சமாதான செயலகப்  பொறுப்பாளர் புலித்தேவன், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுடன் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது சிங்கள இராணுவம் சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக சுட்டுக் கொன்றது நமக்குத் தெரியும். “வெள்ளைக் கொடியுடன் வந்தாலும் கவலைப்படாதே சுட்டுத் தள்ளலாம்” என்று இலங்கை இராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய அமைதிப் படைதான்.
வெள்ளைக் கொடிகளை இரத்தச் சிவப்பாக்கிய பல படுகொலைகளை இந்திய இராணுவம் செய்தது. உதாரணமாக 9.11.1987 அன்று சண்டிலிப்பாய் எனுமிடத்தில் இந்திய இராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் காயமடைந்த நான்கு பொது மக்களை காரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். காரில் வெள்ளைக் கொடி கட்டப்பட்டிருந்தது. ஆனாலும் இந்திய இராணுவம் நவாலி என்ற இடத்தில் காரை நோக்கி சுட்டது. காரில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். நான்கு பேர் காயமடைந்தனர் - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், ஐ.நா. பொதுச் செயலாளருக்கு 1987 நவம்பரில் எழுதிய கடிதத்தில் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 
அதே போல் போர் நிறுத்தம் அமுலில் இருந்த போது இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த ஹர்கிரத் சிங்கை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார். அப்படி ‘வெள்ளைக் கொடி’யுடன் பிரபாகரன் பேசவரும்போது அவரை சுட்டுக் கொன்று விடுமாறு இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த தீட்சத் என்பவர் ஹர்கிரந்த் சிங்கிடம் கூற, அதற்கு, அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார்.
இது டெல்லியிலிருந்து மேலிடத்திலிருந்து வந்த உத்தரவு என்று தீட்சத் கூறினார். அப்போதும் அந்த நேர்மையான அதிகாரி மறுத்து விட்டார். இதை ஹர்சிரத் சிங் அவர்களே பணி ஓய்வு பெற்ற பிறகு தான் எழுதிய நூலிலும் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலும் கூறியுள்ளார்.
போரில்லாத பகுதி’ என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும் சுடலாம். ‘போர் நிறுத்தம்’ செய்யப்பட்ட காலத்திலும் மக்களை சுடலாம் என்று இலங்கை இராணுவத்துக்கு வழிகாட்டியதும் இந்திய இராணுவம் தான்.
21.11.1987 அன்று இந்திய இராணுவம் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. அந்த 48 மணி நேரத்தில் திருகோணமலையில் 7 அப்பாவித் தமிழர்களை இந்திய இராணுவம் சுட்டது. இதில் இரண்டு பேர் பிணமானார்கள்.
ராஜபக்சே இராணுவத்தைப் போலவே ராஜீவ் அனுப்பி வைத்த ‘அமைதிப் படையும்’ விடுதலைப் புலிகள் தலைவர், உலகத் தமிழினத்தின் தலைவர் பிரபாகரனுக்குத் தான் குறி வைத்தது.
ராஜீவ் காந்தி தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரான முரசொலி மாறனிடம், தரையை நோக்கி தனது காலைக் காட்டி இங்கு பிரபாகரன் தலை கொண்டுவரப்படும் வரை இந்திய இராணுவத்தின் இலங்கை தாக்குதல் தொடரும் என்று திமிருடன் கூறினார்.
பேராசிரியர் மணிவண்ணன்
சேவ் இயக்க உறுப்பினர் செந்தில்
தோழர் விடுதலை இராஜேந்திரன்

No comments:

Post a Comment