Wednesday, May 23, 2018

வவுனியாவில் மொழியுரிமை மீறப்பட்டு சிங்களமயமாக்கல் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு


வவுனியா - புளியங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி கிராமத்தில் மொழியுரிமை மீறப்பட்டு சிங்களமயமாக்கல் இடம்பெறுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 19ஆம் திகதி அன்று வீடமைப்பு நிர்மாண அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால் புளியங்குளம் பகுதியில் மாதிரி வீட்டுத்திட்டம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
பாரதி கோட்டம் என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்ட இந்த மாதிரி கிராமத்தில் நினைவு கல் ஒன்றும் நாட்டப்பட்டது.
குறித்த நினைவு கல்லடியில் சந்திர வட்டக்கல் போன்ற வடிவம் பதிக்கப்பட்டுள்ளது. அந்த நினைவு கல்லில் உள்ள எழுத்துக்கள் தமிழ் மொழி மூலமான அர்த்தத்தின் பிரகாரம் அமையவில்லை.

வீட்டுத்திட்ட செயற்திட்டமானது 'கம் உதாவ' மற்றும் 'செமட்ட செவண' என்ற பெயரிலேயே அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் தமிழ் அர்த்தமானது 'கிராமசக்தி' மற்றும் 'அனைவருக்கும் நிழல்' என்றவாறாக அமைய வேண்டும். ஆனால் இங்கு சிங்கள மொழி மூலமான அர்த்தத்தையே பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், இந்த கிராமத்தின் வீடுகளிற்கு பொருத்தப்பட்டுள்ள வீட்டு இலக்க தகட்டிலும் சிங்கள மொழியே காணப்படுகிறது.
இது அப்பகுதியில் வாழும் தமிழ் மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்திர வட்டக்கல் என்பது பௌத்த மதத்தின் அடையாளங்களில் ஒன்றாக காணப்படுகிறது. இதனை தமிழர் வாழும் பகுதியில் ஏன் அமைக்கவேண்டும்.

அரசாங்கம் நல்லிணக்கம் பேசிக்கொண்டு தமிழர் பகுதியில் பௌத்த மயமாக்கல் மற்றும் சிங்களமயமாக்கல் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த கிராமத்தில் 23 வீடுகள் வீடமைப்பு அதிகார சபையின் 90 வீத நிதியுதவியுடனும் பொது மக்களின் பங்களிப்புடனும் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.


http://www.tamilwin.com/community/01/183350?ref=recommended2

No comments:

Post a Comment