Sunday, May 27, 2018

துப்பாக்கி சூட்டில் இலங்கை அகதி பலி: தந்தை இறந்தது தெரியாமல் பரிதவிக்கும் மகன்


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தந்தை இறந்தது தெரியாமல் தந்தைக்காக காத்திருக்கும் மனவளர்ச்சி குன்றிய மகனால் அப்பகுதியே சோகமாய் காட்சியளிக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர், இதில் கே.கந்தையா(வயது 58) என்பவரும் ஒருவர்.
இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில் மனைவி செல்வமணியுடன் வசித்து வந்தார்.
இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்ற மகன் உள்ள நிலையில், கட்டுமான வேலை செய்து வந்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் முனைப்புடன் கலந்து கொண்ட கந்தையா, 100வது போராட்டத்தில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானார்.
வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த நிலையில் பிணமாக கணவர் கிடந்ததை தொலைக்காட்சியில் பார்த்ததும் துடிதுடித்து போன செல்வமணி கதறியுள்ளார்.
மேலும் அவர், இலங்கை ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து கடந்த 1981ம் ஆண்டு தமிழகம் வந்தோம், ராணுவத்தின் தோட்டாவுக்கு தப்பி பிழைத்தவர் துப்பாக்கி சூட்டில் பலியாகி விட்டாரே என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கணவரின் மரணமே இன்னும் மீளாத நிலையில் மகனின் நிலை கண்டு தினமும் கண்ணீர் வடிக்கிறார் செல்வமணி.
காரணம் மகன் ஜெகதீஸ்வரன் மனவளர்ச்சி குன்றியவர், தந்தை உணவு ஊட்டி விட்டால் மட்டுமே சாப்பிடுவாராம், தினமும் தந்தை கட்டியணைத்துக் கொண்டே உறங்குவது வழக்கமாம்.
தந்தை இறந்தது கூட தெரியாமல் ஐந்து நாட்கள் சாப்பிடாமல், உறங்காமல் இருக்கும் மகனை பார்த்து நொந்துக் கொண்டிருக்கிறார் செல்வமணி.
இந்நிலையில் இவர்களது குடும்பத்தினருக்கு அரசு உரிய சலுகைகள் செய்து தரவேண்டும், அரசாங்க வேலை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://news.lankasri.com/india/03/179755?ref=imp-news

No comments:

Post a Comment