Saturday, May 26, 2018

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அனுமதியுடன் பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை!


பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-
யாழ்ப்பாணத்திலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்களுக்கு அம்மா பகவான் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்பவர்களின் மாலை அணிவிக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் அனுமதியுடன் இது நடைபெற்று வருகின்றது.
வலி. கிழக்கிலுள்ள பாடசாலையொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (18.05.2018) காலைக் கூட்டத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அதிபரால் மேற்படி மாலை அணிவிக்கப்பட்டு ஒரு துண்டு பிரசுரம் வழக்கப்பட்டுள்ளது.
இதன் போது பாடசாலை அதிபரால் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.
21 நாட்கள் விரதம் அனுஷ்டிக்க வேண்டும்
சில மந்திரங்கள் ஒவ்வொரு நாளும் உச்சரிக்க வேண்டும் ( பாடசாலையில் காலையில் உச்சரிக்க கற்பிக்கின்றனர்)
இதனை அணிந்தால் மட்டுமே கல்வியில் சிறப்படைய முடியும்
என்று அதிபர் அறிவுறுத்தியுள்ளார்,
வீட்டில் பெற்றோர் இதனை கழற்ற முற்படும்போது ஆசிரியர்கள் அடிப்பார்கள் என்றும் கழற்றினால் பரீட்சையில் சித்தியடைய மாட்டேன் என்றும் பிள்ளைகள் கூறுகின்றனர்.
பாடசாலை அதிபரது இச்செயல் சரியானதா?
ஒரு பாடசாலை அதிபர் தனது சுயவிருப்பங்களை இளம் தலைமுறையிடையே ஊட்டுவது எந்த வகையில் நியாயம்?
ஆரியர்கள் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி அனைத்து மாணவர்களையும் புலமைப் பரிசில், க.பொ.த சாதாரணதர பரீட்சை , உயர்தரப் பரீட்சையில் சித்தியடைய வைப்பதை விடுத்து இப்படியான காரியங்களில் ஈடுபடுவது சரியானதா?
மாலை போட்டுத்தான் கல்வி கற்பீர்கள் என்று சொன்னால் மாணவர்களை பெற்றோர் எதற்கு பாடசாலை அனுப்ப வேண்டும்.
பாடசாலை அதிபருக்கு யார் நன்கொடை கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அவர்களது விருப்பங்களை பாடசாலையில் நிறைவேற்ற ஒத்துழைப்பு கொடுப்பாரா?
அம்மா பகவான் ஒரு மதம் என்ற போர்வையில் உயிரோடு இருக்கும் தங்களை வழிபடச்சொல்லி பரப்புகின்றார்கள். இதை யாழ் மண்ணில் காலூன்ற பாடசாலை மாணவர்களை ஒரு கருவியாக தேர்வுசெய்கிறார்கள்.
அதிலும் மாகாணக் கல்வி அமைச்சின் அனுமதியுடன் இது இடம்பெறுவதே வேதனைக்குரியது.


http://www.jvpnews.com/srilanka/04/173950?ref=home-jvpnews

No comments:

Post a Comment