Tuesday, May 29, 2018

விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசத்தால் உருவாக்கப்பட்ட விசேட படை! என்ன நடந்தது?


ஸ்ரீ லங்காவின் விசேட அதிரடிப் படை (STF) பிரிவானது தற்பொழுது பிரமுகர்களின் பாதுகாப்புக்கென ஒதுக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நாட்டில் தோன்றுகின்ற எந்தவொரு கலவரங்கள் கிளர்ச்சிகள் என்பனவற்றை முறியடிக்கவேண்டிய நிலையில் இருந்து செயற்படுகின்றது.
பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்குவதால் விசேட அதிரடிப்படை (STF) ஒன்றும் பொலிஸார் கிடையாது. இராணுவத் தளபாடங்களோடு இயங்குவதால் விசேட அதிரடிப்படை ஒன்றும் இராணுவமும் கிடையாது. ஆனால் இராணுவத்தின் சில முக்கியமான அதிகாரங்களும் பொலிஸாரின் முக்கியமான அதிகாரங்களும் ஒருங்கே பெற்ற ஒரு துணை இராணுவக் குழு என்றே சொல்லமுடியும். அவற்றை வைத்து சந்தர்ப்பத்திற்கேற்றமாதிரி இராணுவமாகவோ பொலிஸாராகவோ அதிரடிப்படையால் இயங்க முடியும்.
ஸ்ரீ லங்காவின் இறைமைக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி செய்வோரை அடக்கி ஒடுக்குவது மட்டுமன்றி உயிர் அச்சுறுத்தல் உள்ள கைதிகள் தொடக்கம் முக்கிய VIPக்கள்வரை சகலருக்கும் பாதுகாப்புக் கொடுக்கவேண்டியது STFஇன் தலையாய கடமை.
யுத்த பலமிக்க ஒரு வலுவான ஆயுதப்படையாக உள்ள விசேட அதிரடிப்படை, எதற்காக சிவில் சேவையான பொலிஸ் சேவைக்கு கீழ் இயங்குகின்றதெனில், நாட்டில் ஒரு இராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டால்கூட இராணுவத்தை அடக்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே.
இதன் தேவை கடந்த 2010 சனாதிபதி தேர்தலின்போதும் 2015 சனாதிபதி தேர்தலின்போதும் முக்கியமாக உணரப்பட்டது. 2010இல் சரத் பொன்சேகா ஆதரவான இராணுவக் கிளர்ச்சித் திட்டமும் 2015இல் கோத்தபாய ராஜபக்ச ஆதரவான இராணுவக் கிளர்ச்சித் திட்டமும் அதிரடிப்படை என்ற ஒன்றின் அச்சுறுத்தலால் செயற்பாடு இன்றியே அணைந்துபோனது.
2015 தேர்தலில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியாளராக இருந்தாலும் அவரது இராணுவச் சதித்திட்டம் தோல்வியில் முடிந்தமைக்கு காரணமாக இருந்தது இந்த விசேட அதிரடிப்படையே. ஏனெனில் அமைதியான தேர்தலை நடத்தி முடிப்பதற்காக பொலிஸ் சேவையின்கீழ் வரும் சகல பிரிவுகளுக்கும் (CID, TID,STF, Traffic, Police) உத்தரவு போடும் அதிகாரத்தை தேர்தல்கள் ஆணையாளர் கொண்டுள்ளார். இதற்கேற்ப உத்தரவும் அன்றைய தினம் அதிரடிப்படை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
சரத் பொன்சேகாவை விடுங்கள், ஒரு சர்வாதிகார ஆட்சியாளராக இருந்த மஹிந்தவால்கூட இராணுவக் கிளர்ச்சியை ஏற்படுத்த முடியவில்லையெனில் அதற்கு பெரும்பாலான காரணம் இந்த STFதான்.
இராணுவமும் அதிரடிப்படையும் ஒன்றல்ல, அதிரடிப் படையும் பொலிஸும் ஒன்றல்ல, ஆனால் சந்தர்ப்பத்திற்கேற்ப பலம்வாய்ந்த ஒரு இராணுவ அணியாகவும் ஒரு பொலிஸ் அணியாகவும் அதிரடிப்படையால் செயற்பட முடியும்.

படம்: தேடுதல் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படை
இலங்கையில் 1983 வரை STF இன் தேவை உணரப்படவில்லை. JVP கிளர்ச்சியும் தமிழ் ஆயுதக் குழுக்களின் கிளர்ச்சியும் அதிரடிப்படையை உருவாக்கவேண்டும் என்ற தேவையை ஏற்படுத்தியது. இப்பொழுது இரு சாரார் கிளர்ச்சிகளும் இல்லை என்பதற்காக அதிரடிப்படை கலைக்கப்படமாட்டாது.
அதை செயற்பாட்டு ரீதியில் வைத்திருக்கவேண்டுமெனில் சிவில் நிர்வாகத்துக்குள் கணிசமானளவு பங்களிப்பை செலுத்தவேண்டும் என்பதே ஆட்சியாளர் திட்டம்.
ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில்தான் STF உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் சந்திரிகா, மஹிந்த ஆட்சியில் இவர்களுக்கு பெரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கு இராணுவத்தில் விசேட பயிற்சி பெற்றவர்களையே அமர்த்தினர்.
பின்னர் இப்போதைய UNP அரசால் மீண்டும் இராணுவத்தை முகாம்களுக்கு அனுப்பிவிட்டு விசேட அதிரடிப் படையையே VIP, VVIPகளின் பாதுகாப்புக்கு பயன்படுத்துகின்றனர். உதாரணமாக கடந்த மஹிந்த ஆட்சியில் அலரி மாளிகைக்கு விசேட பயிற்சி பெற்ற இராணுவத்தினரே பாதுகாப்பு வழங்கினர். இப்பொழுது STF அந்த வேலையை செய்கின்றது. கொழும்பு-காலி வீதியில் பயணிப்பவர்களுக்கு இப்பவும் இதனைப் பார்க்ககூடியதாய் இருக்கும்.
பெரும்பாலான சனநாயக நாடுகளில் அரசியல் ஆதரவு கொண்ட இராணுவக் கிளர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பதற்கு காரணமும் சிவில் நிர்வாகத்தின்கீழ் பலமான படையாக இருக்கும் அதிரடிப்படைக் கட்டமைப்புத்தான்.
ஆனால் எந்தவொரு அநியாயத்தையும் சட்டபூர்வமாக செய்யவல்லது இது. Task Operation என்பதில் எதைச் செய்தாவது அவர்களின் Targetஐ அடைவதுதான் முதல் குறிக்கோள்.

படம்: கலகம் அடக்குவதற்காக
இலங்கையின் STF எனப்படும் விசேட அதிரடிப்படையானது பொலிஸ் சேவையின்கீழ் இயங்கினாலும் இதன் தோற்றத்திற்கு காரணமானவர்கள் விடுதலைப் புலிகளே.
இங்கிலாந்தின் SAS எனப்படும் Special Air Service பிரிவுதான் இலங்கையின் STFஐ உருவாக்கிவிட்டது. பயங்கரவாதத்தை அழிக்கின்ற நோக்கில் விசேட அதிரடி நடவடிக்கை (Special Task Operation) என்ற பெயரில் எந்தவித நாசகார வேலையையும் முன்னெடுக்கக்கூடிய ஒரு அதிபயங்கரமான துணை இராணுவக் குழுவாக உதயமானதே விசேட அதிரடிப்படை. 1983 இல் தர்மசிறி வீரக்கோன் தலைமையில் உருவாக்கப்பட்ட விசேட அதிரடிப்படை இன்று ஆறாயிரத்துக்கும் அதிகமான வீரர்களைக்கொண்டு தென்கிழக்காசியாவிலேயே ஒரு பலமிக்க பிரிவாக இயங்கிவருகிறது.

படம்: பிரித்தானிய SAS படைப் பிரிவால் பயிற்சியளிக்கப்பட்டபோது
இது ஒரு இராணுவப் பிரிவு கிடையாது, ஆனால் இராணுவத்தினர் போருக்கென்று பயன்படுத்துகின்ற கைத்துப்பாக்கியிலிருந்து, ரைபிள் வகைகள், சினைப்பர், கிரனேட் லோஞ்சர், ரொக்கட் லோஞ்சர், இயந்திரத் துப்பாக்கி என அனைத்தையும் கையாளத்தக்க அதி உச்ச பயிற்சியினைப் பெற்றிருக்க வேண்டும். உலக புகழ்பெற்ற அமெரிக்க நாட்டின் அறிமுகமான M16 தானியங்கி ரைபிள் இந்த அதிரடிப் படையினருக்கும் வழங்கப்பட்டது. சர்வதேச புகழ்வாய்ந்த இராணுவ அணிகளால் மட்டுமே பயன்படுத்தும் இந்த துப்பாக்கி ஸ்ரீ லங்கா விசேட அதிரடிப் படையினருக்கும் வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இவர்களுக்கு இலங்கை இராணுவம் பயிற்சி அளித்தாலும் தற்போது பொலிஸார் பயிற்சியளிக்கின்றனர். விசேட அதிரடிப்படையானது இலங்கையைப் பொறுத்தவரை தமிழ்மக்களை எழும்பவிடாமல் அடக்குவதற்கென்றே உருவாக்கப்பட்டது. அதன் போர்வைதான் பயங்கரவாதம். கிழக்கு மாகாணம் முழுவதும் இதன் முகாம்கள் இருப்பதோடு வடக்கே வவுனியாவிலும் மன்னாரிலும் உப பிரிவுகள் உள்ளன. கொழும்பில் தலைமைப் பிரிவு இயங்குகின்றது.
இதைவிட நாட்டின் வேறு பாகங்களில் இருப்தானால் VIPக்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்காகத்தான். கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதத்திடமிருந்து மீட்கிறோம் என்ற போர்வையில் எண்பது தொண்ணூறுகளில் தமிழ் மக்களுக்கு செய்த அட்டூளியங்கள் மறக்கமுடியாதவை. இறுதி யுத்தம் கிழக்கில் ஆரம்பித்து விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை கைப்பற்றியதில் STF இன் பங்களிப்பு அதிகம். கிழக்கில் புலிகளின் கரந்தடித் (கொரிலா) தாக்குதல்களால் அதிரடிப்படை சந்தித்த இழப்புக்களும் ஏராளம் என்றே சொல்லவேண்டும்.

கிழக்கில் STFக்கு எதிராக தாக்குதல் நடத்த செல்லும் விடுதலைப் புலிகளின் விசேட கமாண்டோ
http://www.ibctamil.com/srilanka/80/101243?ref=ls_d_ibc

No comments:

Post a Comment