Wednesday, May 16, 2018

பிரபாகரன் சரணடையவில்லை!! என்ன தான் நடந்தது? விளக்கும் முக்கியஸ்தர்...


முன்னாள் ஈரோஸ் போராளியும், முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பஷீர் சேகுதாவுத் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்
மேலும் தனது முகநுால் பதிவில்...
சாவேன், சரணடையமாட்டேன் என்பது வீரத்தமிழர் மரபு! பிரபாகரன் மேற்சொன்ன இந்தக் கொள்கைக்காகத்தான் செத்திருக்க வேண்டும்.சில போலிகள் சொல்வதைப் போல் சரணடையப் போய்க் கொல்லப்பட்டவரல்ல அவர் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
வெள்ளைக் கொடியுடன் பேச்சுவார்த்தைக்காகச் சென்ற நடேசன் குழு கொல்லப்பட்ட செய்தி செவி சேர்ந்த பின்பும் எந்தவொரு ஆயுதப் போராட்டத் தலைவனோ, விடுதலையை விரும்பியிருந்த மக்களோ சரணடையச் செல்வார்கள் என்பதை எதைக் கொண்டு நம்புவது?
இறுதிக் கட்டத்தில் இறந்தவரெல்லாம் சரணடையாது சாவைத் தழுவியோரே ஆவர். அகதி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களோ அல்லது புனர்வாழ்வு முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட போராளிகளோ தப்பிக்கும் முயற்சியின் போது கைது செய்யப்பட்டவர்களே அன்றி சரணடைந்தவர்களல்ல.
ஆயுதப் போராட்டத்தில் தன்னை எந்த வடிவத்திலும் ஈடுபடுத்திக்கொள்ளாதவர்கள், சனமும் போராளிகளும் சந்தித்த வேதனைகளில் ஏறி நின்று அரசியலில் உழக்குவதைத்தான் சகிக்க முடியவில்லை.
நினைவு கூர்தல் என்பது போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான உந்துசக்தி ஆகும்.
ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு என்பது மாகாண, நாடாளுமன்ற தேர்தலில் வெல்வதற்கான வேசி வீட்டு அழைப்பாக மாறியிருப்பது வெட்கக்கேடானது.
கடந்த ஆயிரம் வருட கால இலங்கைத் தமிழர் வரலாற்றில் பல்லாயிரம் பேர் தேர்ந்த போர் வீரர்களாக விளங்கியுள்ளனர்.
ஆனால் போர் நாயகர்களாக இருவரைத்தான் அடையாளம்காண முடியும் என்பது எனது நம்பிக்கை.
இவர்களில் ஒருவர் எல்லாளன், மற்றவர் பிரபாகரனாகும். வரலாறுகள் நாயகர்களால் நயந்துரைக்கப்பட்டாலும், அது நாயகர்களால் நிரூபிக்கப்படவோ அல்லது உண்மையாக்கப்படவோ இல்லை என்பது ஒருபுறமிருக்க,
இலங்கைத் தமிழினத்தின் ஆயுதப் போராட்டத்தினால் இலங்கையின் அரசியல் வரலாற்றை அசைத்தவர்களல்ல; ஆயுதப் போராட்டத்தை வேடிக்கை பார்த்த மேட்டுக்குடித் தமிழர்களே இன்று தமிழ்த் தேசிய அரசியலில் தலைமை தாங்கிக் கோலோச்சி வருகிறார்கள், ஒரிருவரைத் தவிர.
சாமானியர்களே உலகப் புகழ்பெற்ற ஈழ விடுதலைப் போராட்டத்தை முப்பத்தி இரண்டு ஆண்டுகளாய் சோர்வின்றியும் உயிர் அச்சமின்றியும் முன்னெடுத்தார்கள். இன்னுயிரைத் தற்கொடை தந்தார்கள்.
அன்று, போராட்டகாலத்தில் தம் பிள்ளைகளை வெளிநாடுகளில் கற்பித்து பட்டம் பெறவைத்த மேட்டுக்குடித் தமிழர்கள், போராடிச் செத்த வீரர்களுக்குத் தியாகிகள் எனும் பட்டத்தைச் சூட்டி அரசியல் அனுகூலம் பெற்றனர். இவர்களே இன்று துக்கம் அனுஷ்டிக்கத் தெரிந்த வீரர்களாக வடிவெடுக்கின்றனர்.
இனப்படுகொலையின் தெளிவான ஆதாரம் வெகுமக்கள் சவக்குழியாகும். அவை முள்ளிவாய்க்காலிலும் இன்னும் பல இடங்களிலும் உள்ளன.
இச்சவக்குழிகளை பாவித்து தமது சொந்த அரசியலில் மேடையமைக்க சிலர் முயல்வது, இறப்புகளுக்குப் பின் எஞ்சும் வீறார்ந்த போராட்டத்தின் அடையாளத்தை சிதைப்பதாகும்.
நினைவுச் சுடராக எரியவேண்டியது “தீ நாக்குகளல்ல” தீபங்களே!
பெடியன்களினதும், பெடிச்சிகளினதும் நெஞ்சங்களில் எரியும் சுவாலையை தீபச் சுடராக “இறக்கி ஏற்றுவதற்கு” முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
எந்த வாக்கு வசூலிக்கும் தலைவர்களும் ஏற்றுகிற நினைவுச் சுடருக்கு இருக்கும் பெறுமானம் எளியது.
இளைஞர்கள் ஏற்றும் சுடருக்கிருக்கும் பெறுமானம் வலியது. புதிய பரம்பரை ஏற்றும் சுடரானது, நினைவேந்தலை நிறைவேற்றும் அதே நேரம் சுடவும் தகுதி பெற்றதாகிறது.
அது சரி, முன்னாள் போராளிகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு நடைபெறும் மைதானத்தை துப்புரவு செய்து தயார்படுத்தும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறீர்களாமே? நல்ல பொறுப்பான பொறுப்பு அது. தலைமை தாங்கி மக்கள் மத்தியில் நினைவுகளைப் பகிரவேண்டிய பொறுப்புள்ளவர்கள் முன்னாள் போராளிகளல்லவா?
அரசியல் பதவிகளை வகிக்கும் இந்தத் தலைவர்களுக்கு இறுதிப் போர்காலத்தின் போது முள்ளிவாய்க்காலில் என்ன அனுபவங்கள் இருக்கின்றன பகிர்ந்துகொள்வதற்கு?

http://www.jvpnews.com/srilanka/04/172766?ref=home-jvpnews

No comments:

Post a Comment