Thursday, May 17, 2018

முன்னாள் போராளிகள் மூவரின் பகிரங்க அறிவிப்பு! முடிவுக்கு வருமா அதிகாரப் போட்டி


யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் தெரிவித்த விடயங்கள் .
தியாகங்களுக்கு மதிப்பளியுங்கள் மூத்த போராளிகளின் உருக்கமான வேண்டுகோள் !
தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் நீண்டகாலம் பங்களித்த பாலிப்போடி சின்னத்துரை (யோகன் பாதர் - மட்டக்களப்பு ) முத்துக்குமார் மனோகர் பசீர் காக்கா - யாழ்ப்பாணம் ) ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை ) ஆகிய நாங்கள் மூவரும் இன்றெழுந்துள்ள சூழலில் எமக்கான கடமையைச் செய்யாமலிருப்பது எம்மோடு நீண்டகாலம் பயணித்து மாவீரர்களான எமது நண்பர்கள், சகோதரிகளுக்கும் , விடுதலையை நேசித்து முள்ளிவாய்க்கால் வரை எம்மோடு பயணித்து கடல், வான் , தரை ஆகிய மும்முனைத் தாக்குதல்களால் இனப்படுகொலைக்குள்ளான எமது உறவுகளின் ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகம் எனக் கருதுகிறோம் .
கடந்த மாவீரர் நாள் தொடர்பாக எங்களில் ஒருவரான முத்துக்குமார் மனோகர் விடுத்த வேண்டுகோளை ஏற்று எவ்வித அரசியல் கலப்புமின்றி அமைதியான முறையில் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் மிகவும் கட்டுப்பாடாக அனைத்துப் துயிலுமில்லங்களிலும் நிகழ்வுகள் நடந்தேறின. ஒழுங்கான சரியான தமிழ்த் தலைமையால் 2009 மே 18 வரை வழி நடத்தப்பட்டோம்.
என்பதை முரசறைந்து கூறினார் எமது மக்கள். இதற்காக முள்ளிவாய்க்கால் வரை பயணித்த நாங்கள் மூவரும் எமது மக்களுக்குச் சிரம் தாழ்த்தி வணங்கி நன்றி கூறுகிறோம். இந்த அமைதிச் சூழலக் குழப்பும் விதமாக செயற்படாமல் இருந்தமைக்காக ஊடகங்களுக்கும் எமது சிறப்பான நன்றிகள்.
ஏற்கெனவே நினைவு கூரல் நிகழ்வுகளை வழி நடத்த சமூக , சமயத் தலைவர்கள் அடங்கிய குழுவொன்றை உருவாக்கி அந் நிகழ்வுகளின் நோக்கத்தையும், புனிதத்தினையும் சரியான முறையில் கொண்டுசெல்லவேண்டுமென இம் மண்ணினை நேசித்த பலரும் ஆலோசனை வழங்கி இருந்தனர். இன்றுள்ள பதற்றமான சூழலில் உடனடியாக இது பலரும் ஆலோசனை சாத்தியப் படாதென்றே எமக்குத் தோன்றுகிறது .
ஒற்றுமையாவோம் வாரீர் என்ற கோஷங்களுக்கு மத்தியில் வெவ்வேறு நோக்கங்கள் இருப்பதாக கருதுகிறோம். தாம் எதிர்பார்த்த ஒழுங்கில் நிகழ்வுகள் நடைபெறவிட்டால் குழப்பங்கள் ஏற்படும் என எச்சரிப்பது எம்மை வேதனையில் ஆழ்த்துகிறது. எமது உறவுகளுக்காக மட்டுமல்லாது இன்றைய நிலைமைகளுக்காகவும் சேர்த்து கண்ணீரைப் பங்கு போடுகிறது . மாவீரர் நாள் நிகழ்வுகளில் அமைதியைப் பேணிய எமது மக்களின் கட்டுப்பாட்டையும் மதிக்காததோடு எமது கடந்த கால பங்களிப்பை எச்சரிப்போர் நிராகரிப்பதாகவே கொள்ள வேண்டியுள்ளது.
இந்த விடுதலைப் போராட்டத்தில் யாழ்ப்பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக ஆற்றிய பங்களிப்பைப் போராட்டத்தின் பங்காளர்களான நாம் நன்கு அறிவோம். மாவீரர் நாள் தொடர்பான தனது வேண்டுகோளின் முதல் வரியிலேயே மனோகர் இதனை மறக்காமல் குறிப்பிட்டிருந்தார். என்பதையும் நினைவுபடுத்துகிறோம்.
கிழக்கு மாகாண சபை ஆட்சியில் தமிழரின் பிரதான கட்சி பங்காளராக இருந்தது. இக் கட்சியின் செயலர். உட்பட இருவர் அமைச்சர்களாக இருந்தனர். இவர்களில் எவரும் இனப்படுகொலை என்ற தீர்மானத்தைத் தமது சபையில் நிறைவேற்றக்கூடிய சாத்தியப் பாடுகள் குறித்து ஆராயவேயில்லை. இது தமது வரலாற்றுக் கடமை என்பதை உணரவுமில்லை. அங்கு நடந்தவைகள் இனப்படுகொலை என்ற வரையறைக்குள் அடங்க மாட்டா என்று வாதிடும் திறன் மிக்கோரால் தவறாக வழி நடத்தப்பட்டிருந்தனர்.
எது எவ்வாறிருந்தாலும் உலகத்தைப் பொறுத்த வரை வடமாகாண சபை நிறைவேற்றிய இனப்படுகொலை என்ற தீர்மானம் காத்திரமானது. எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்கு ஆணித்தரமாக எடுத்துரைத்தது. இதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் எவரும் செயலாற்றக் கூடாதெனக் கருதுகிறோம் .இத் தீர்மானத்தைக் கொண்டுவந்த வடக்கு முதல்வரின் பங்களிப்பை வேறொருவரினதும் தேவைகளுக்கோ, நோக்கங்களுக்கோ நிராகரிப்பது ஏற்புடையதல்ல.
மே 18 க்கு பின் நாம் எதிர் பார்க்கும் அரசியல் கலப்பற்ற மத குருமார் தலைமையிலான நினைவேந்தல் குழுக்களின் உருவாக்கம் குறித்து விடுக்கப்படும் பொது அறிவித்தலோன்றின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்றும் மாவீரர் நாள் , திலீபன் நினைவு, அன்னை பூபதி , மாமனிதர் சிவராம் உட்பட மே 18 நிகழ்வையும் கூட இந்த நினைவேந்தல் குழுக்களின் அறிவுறுத்தல் பிரகாரம் நடைமுறைப் படுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றோம். இப் போராட்டத்தில் தம்மை இழந்த மற்றும் பலியான அனைவரையும் மதிக்கும் அனைவரும் இவ்வேண்டுகோளைஏற்பார்கள் என நம்புகின்றோம்.
அன்னை பூபதி , மற்றும் சிவராம் நிகழ்வுகளில் தவறாக வழி நடத்தப் பட்டோரால் நிகழ்ந்த வேதனையான சம்பவங்கள் அத் தியாகங்களுக்கு மதிப்பளித்த எமது மக்களால் ஜீரணிக்க முடியாதவை எமது எதிர் பார்ப்புக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அனைத்துடனும் கலந்துரையாட ஆர்வமாக உள்ளோம். தயவு செய்து எமது வேண்டுகோளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென எதிர் பார்க்கின்றோம். இரு தலைமுறையினராக இந்தப் போராட்டத்தில் பங்களித்த எமது வேண்டுகோளை நிராகரிக்க மாட்டிர்கள் என நம்புகின்றோம் நன்றி
வேண்டுகோள் விடுத்த முன்னாள் மூத்த போராளிகளின் பற்றிய .......
பாலிப்போடி சின்னத்துரை – மட்டக்களப்பு
தந்தை செல்வா காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் காலம் வரை தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் சாட்சி இவர். தந்தை செல்வாவுடன் பழகியோரில் இவரைப் போன்று ஒரு சிலரே உயிருடன் கிழக்கில் உள்ளனர். தமிழ் இளைஞர் பேரவையின் ஆரம்ப காலச் செயற்பாட்டாளர்களில் ஒருவர், ஆரம்பகாலப் போராளிகளை (கருணா உட்பட) உள்வாங்கியவர்.
சிறந்த கவிஞர், தனது நண்பர் கிட்டுவின் மறைவின்போது “தென்றல் தவழ்ந்து வரும் மண்ணில்...” என்ற உணர்வுபூர்வமான பாடலை எழுதியவர். சுமார் இருபத்தைந்து எழுச்சிப் பாடல்களை இவர் எழுதியுள்ளார். 1976களில் “களமாடிய காசி ஆனந்தன்” என்ற கவிதைத் தொகுப்பை பாசி என்ற பெயரில் வெளியிட்டிருந்தார். மொழிப்போர் மற்றும் தடுப்புக்காவல் பற்றிய காசி ஆனந்தனின் பங்களிப்பே இந்நூலின் பேசுபொருள். நீதி நிர்வாகப் பிரிவிலும் அங்கம் வகித்தார்.
இறுதிப் போரின் பின் சிறிதுகாலம் தடுப்பில் இருந்த பின் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்ற பட்டியலின் அடிப்படையில் விடுதலையானவர். தற்போது விவசாயம் செய்து வருகிறார்.
முத்துக்குமார் மனோகர் (பசீர்காக்கா - யாழ்ப்பாணம்)
இறுதிப் போரில் இவரது மகள் சங்கீதா (அறிவிழி) 26.04.2009 அன்று வீரச்சாவெய்தியிருந்தார். முன்னதாக இவரது மகன் சங்கர் எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். (07.04.2009) இவரது சிற்றன்னை திருமதி மோட்சானந்தம் முத்துக்குமார் 10.02.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் பலியாகியிருந்தார். சகோதரி முறையான கோமளா, அவரது கணவர் இராசையா தனபாலசிங்கம், மகன் பாஸ்கர் (இரு பிள்ளைகளின் தந்தை) ஆகியோர் 31.03.2009 அன்று எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.
1986 முதல் ஊடகவியலாளராகவும் இனங்காணப்பட்டிருந்தார். ஈழமுரசில் அரசியற் தொடரான “குத்துக்கரணங்கள்” மாவீரரின் புகழை போராளிகளின் எண்ணத்தில் எடுத்தியம்பிய “ஒரு போராளியின் நாட் குறிப்பிலிருந்து” என்ற தலைப்புகளில் எழுதியவர்.
1990 இல் மட்டக்களப்புக்கு நடந்துபோனபோது அவதானித்து, உணர்ந்த விடயங்களை “உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்” மற்றும் “சிறைப்படாத சிந்தனைகள்” தொடர், மாவீரர் புகழை எடுத்தியம்பும் “விழுதுகள்” ஆனையிறவு மீட்பு உட்பட ஓயாத அலைகள் - 3 சமர்க்களம் தொடர்பான விடயங்களை நேரில் கண்டு விபரிக்கும் தொடர் “மீண்டும் யாழ். மண்ணில் கால் பதித்த எம் தடங்கள்” என்பனவற்றை ஈழநாதத்தில் எழுதியவர்.
இறுதிப் போரின் பின்னர் பூசா முதல் யாழ்ப்பாணம் வரை சுமார் 10 இடங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மேல் நீதிமன்றங்களில் மொத்தம் நான்கு வழக்குகள் இவருக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சுமார் ஐந்து ஆண்டுகள் தடுப்பின் பின் விடுதலையானவர். தற்போது ஆலயமொன்றில் தொண்டராக இருக்கிறார்.
ஆத்மலிங்கம் ரவீந்திரா (ரூபன் - திருமலை)
விடுதலைப் புலிகளால் 1987 இல் இடைக்கால நிர்வாக சபைக்குப் பெயரிடப்பட்டிருந்தோரில் இவரும் ஒருவர். பிரேமதாஸ அரசுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளிலும் பங்குகொண்டவர்.
இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கும் சமயத்தில் திருமலை மாவட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி மற்றும் அரசியற்றுறைப் பொறுப்பாளராக இருந்த இவர் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் மோசமாகக் காயமடைந்தார். 13.06.1990 அன்று தம்பலகாமத்துக்கும் பாலம் போட்டாறுக்கும் இடையிலுள்ள ஜெயபுரம் என்னுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சந்திரிகா அரசுடனான பேச்சுவார்த்தைக் காலத்தில் மாவட்ட மட்டத்தில் திருமலையில் நிகழ்ந்த படையினருடனான சந்திப்பில் கலந்து கொண்டார் . குச்சவெளிப் பகுதியில் 1995 ஜனவரியில் நிகழ்ந்த இச் சந்திப்பில் படையினர் தரப்பில் பின்னாளில் வடமாகாண ஆளுநராக இருந்த அப்போதைய பிரிக்கேடியர் சந்திரசிறி மற்றும் பிரிகேடியர் ஓம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளராகவும் விளங்கியவர். 2000 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் திருமலையில் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து இவரை மீண்டும் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்தார் தலைவர்.
இழக்கப்பட்ட தமிழரின் பிரதிநிதித்துவத்தை மீளப்பெறும் வகையில் வாக்களிப்பின் அவசியத்தை திருமலை மக்களுக்கு உணர்த்துவதே இவருக்கிடப்பட்ட முக்கிய பணி. இதனால் 2001 இல் இரா.சம்பந்தனை வரவழைத்து கட்டைபறிச்சானில் சந்தித்தார் இவர். அரசியல் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 2000 ஆம் ஆண்டு தேர்தலில் 14,000 வாக்குகள் பெற்ற தமிழரின் கட்சி 2001 இல் 59,000 வாக்குகள் பெற்று மீண்டும் பிரதிநிதித்துவம் பெற்றது.
35,000 வாக்குகளைப் பெற்ற சம்பந்தன் ஐயா மீண்டும் பாராளுமன்றம் சென்றார். தேசியப் பட்டியல் உறுப்பினரான மு.சிவசிதம்பரத்தின் மறைவைத் தொடர்ந்து 2001 தேர்தலில் 28,000 வாக்குகள் பெற்றிருந்த துரைரெட்ணசிங்கம் மாஸ்டருக்கு இப்பதவியை வழங்குமாறு இவர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாகத் தலைமைச் செயலகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார். இறம்பைக்குளம், பூசா, கொழும்பு 2 ஆம் மாடி என இரு வருட தடுப்பின் பின் விடுதலையானார்.

http://www.jvpnews.com/srilanka/04/172996

No comments:

Post a Comment