Thursday, May 17, 2018

மன்னார் பகுதியில் அசாதாரண நிலை: 8 பேர் அடங்கிய குழுவால் துப்பாக்கிச் சூடு - சம்பவ இடத்தில் முக்கியஸ்தர்கள்


புதுக்குடியிருப்பு - உயிழங்குளம், மன்னார் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினால் அந்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு பேர் அடங்கிய குழுவினால், இன்று இரவு ஒன்பது மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரில் இருந்து 10 கிலோமீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

அந்த பகுதியில் வசிக்கும் வர்த்தகரான ஜேசுதாசன் சுவாம்பிள்ளை என்பவரின் வீட்டிற்கு எட்டு பேர் அடங்கிய குழுவினர் சென்றுள்ளதுடன், சுவாம்பிள்ளையை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டையும் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் சாதுர்யமாக செயற்பட்ட சுவாம்பிள்ளை தற்பாதுகாப்பிற்காக துப்பாக்கிதாரிகளுடன் போராடியுள்ளார். இதன்போது கைத்துப்பாக்கியில் இருந்த தோட்டாக்கள் மூன்று சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வீழ்ந்துள்ளன.

இதனையடுத்து சந்தேகநபர்கள் தப்பிச்செல்ல முற்பட்டனர். விரைந்து செயற்பட்ட அவர்கள் தாம் வந்த காரில் தப்பிச் செல்ல முற்பட்ட போதிலும் அந்த நேரத்தில் குறித்த காரை இயக்க முடியாமல் போயுள்ளது.
இதேவேளை, சம்பவம் குறித்து சுவாம்பிள்ளை மன்னார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வு பொலிஸார் சந்தேகநபர்கள் வந்த காரை சரிசெய்து அனுப்பி வைத்துள்ளதாக சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சுவாம்பிள்ளையின் சாரதி தங்கதுரை கைது செய்யப்பட்டிருந்ததாகவும், பின்னர் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தங்கதுரை விடுவிக்கப்பட்டிருந்ததாகவும், அவர் கைது செய்யப்பட்டிருந்த போது பயன்படுத்திய கைவிலங்கு அந்த பகுதியில் விட்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர்களை தப்பிக்க வைத்த குற்றப் புலனாய்வு பொலிஸ் அதிகாரிகளில் மூவரை நன்கு தெரியும் எனவும், அவர்களை அடையாளம் காட்ட முடியும் என சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடியிருந்தார்.
இது குறித்து உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக 2006ம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சுவாம்பிள்ளை அதிஸ்டவசமாக உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாளை முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடக்கு, கிழக்கு பகுதியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




http://www.tamilwin.com/community/01/182909?ref=breaking-news

No comments:

Post a Comment