Friday, June 8, 2018

கனடாவில் வரலாறு படைத்த இரு ஈழத்தமிழர்கள்! முதன்முறையாக ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு தெரிவு

ஜூன் 7ஆம் திகதி கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடைபெற்ற 42ஆவது பாராளுமன்றத்திற்கான 124 தொகுதிகளிலான தேர்தலில் இரண்டு ஈழத்தமிழர்கள் விஜய் தணிகாசலமும் லோகன் கணபதியும் வரலாற்றில் முதற்தடவையாக தெரிவாகியுள்ளனர். மூன்றாவது தமிழர் ரோசன் நல்லரட்ணம் வெறும் 81 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அவர்கள் பெற்ற வாக்குகளின் விபரம் வருமாறு...
ஸ்காபரோ ரூச்பார்க் கட்சி வாக்குகள்
பெயர் கட்சிவாக்குகள்
விஜய் தணிகாசலம்பிசி16224
பெலிசியா சாமுவேல்என்டிபி 15261
சுமி சான் லிபரல்8785

மார்க்கம் தோன்கில்
பெயர் கட்சிவாக்குகள்
லோகன் கணபதி பிசி18943
ஜெனிற்றா நாதன்லிபரல்9160
சின்டி கக்கல்பேர்க்என்டிபி8010

ஸ்காபரோ கில்வூட்
பெயர் கட்சி வாக்குகள்
மிட்சி கன்டர்லிபரல்11965
ரோசன் நல்லரட்ணம்பிசி11884
ரொம் பக்வூட்என்டிபி9910

புலம்பெயர் தமிழர் வரலாற்றில் தம்மை ஒரு அரசியல் சக்தியாகவும் தாம் வாழும் நாட்டில் நிலைநிறுத்திக் கொள்வதில் கனடியத் தமிழர்கள் ஏனையவர்களுக்கு உந்துசக்தியாக உள்ளனர்.
தம் நாட்டின் பாராளுமன்றத்திற்கு முதற்தடவையாக ஒருவரை 2011இல் தெரிவு செய்த பெருமையும் கனடியத் தமிழர்களையே சாரும். அதேபோன்று 2015இலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கனடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்பினர்.


இருமுறையும் தமிழர்கள் அதிகம் வதியும் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதியிலேயே அவ்வரலாறு படைக்கப்பட்டது. முதலில் என்டிபி கட்சி சார்பிலும் பின்னர் லிபரல் கட்சி சார்பிலும் முறையே ராதிகா சிறிசபேசனும் கரி ஆனந்தசங்கரியும் தெரிவாகினர்.
அதேபோன்று மார்க்கம் நகரசபை கவுன்சிலராக லோகன் கணபதி முதன்முறையாக தெரிவாகி நீண்டகாலம் பணியாற்றி இன்று ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ளார்.
ரூச்பார்க் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ரொரன்ரோ பாடசாலைச் சபைக்கு தெரிவான என்டிபியின் முக்கிய பிரதிநிதியான நீதன் சான் பின்னர் கனடாவிலேயே பெரிய மாநகரசபையான ரொரன்ரோ மாநரசபைக் கவுன்சிலராக தெரிவு செய்து முதல் மாநகரசபைப்பிரதிநிதியை தெரிவு செய்த பெருமையையும் ஸ்காபுரோ ரூச்பார்க் தொகுதி மக்களே மீண்டும் தட்டிச் சென்றனர்.
லோகன் கணபதி அவர்களின் வெற்றி 124 இல் 76 ஆசனங்களைப் பெற்று பெரும்பான்மை ஆட்சியமைக்கும் பிசி எனப்படும் முற்போக்கு கன்சவேட்டிவ் கட்சியால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
அவ்வாறே அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 சதவீதத்தைப் பெற்று இலகுவாக பெரு வெற்றியை அவர் பெற்றார். அவர் சார்ந்த ஜோர்க் பிரதேசத்தில் கன்சவேட்டிக் கட்சி எல்லாத் தொகுதிகளிலும் பெரும் ஆதிக்கம் செலுத்தி இலகுவான வெற்றிகளைப் பெற்றுக் கொண்டது.
ஏனைய தமிழர்கள் கடும் போட்டியைக் கொடுத்தாலும் வெற்றி பெறுவார்கள் என்பதில் கன்சவேட்டிவ் கட்சிக்கு பெரும் நம்பிக்கை இருக்கவில்லை. ஸ்காபுரோ பகுதியில் உள்ள மூன்று தொகுதிகளைத் தவிர ஏனைய மூன்று தொகுதிகளிலும் கடும் போட்டியே நிலவியது. அதிலும் இறுதியாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட சில தொகுதிகளில் ஸ்காபுரோவில் தமிழர்கள் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளும் அமைந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு சில நாட்களே இருந்த நிலையில் விஜய் மற்றும் ரோசானுக்கு எதிராக சில தமிழர்களால் மைய ஊடகங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட விசமப் பிரச்சாரங்கள் அவர்கள் வெற்றி குறித்த சந்தேகத்தை மேலும் எழுப்பியிருந்தது.
ஆனால் அவ்வாறானவர்களின் முயற்சியால் துவண்டு போகாது அதை சவாலாக எடுத்து அத்தொகுதிகளின் மக்களும் வேட்பாளர்களும் தொண்டர்களும் ஓர்மத்துடன் இயங்கி விஜய் தணிகாசலம் என்ற இளையவனின் வெற்றியை ஈற்றில் 1000 பெரும்பான்மை வாக்குகள் என்ற நிலையில் சாதித்து அரசியல் மட்டங்களில் தமிழ் மக்களின் பலத்தை ஒரு காட்டமான செய்தியாக சொல்லியுள்ளனர் என்பதே இவ் வெற்றியின் மகுடம்.
அனைத்து தமிழர்களும் பெருவாரியான ஏனைய இனமக்களின் வாக்குகளையும் தமது வெற்றிக்காக பெற்றமை தமிழர்களின் அரசியல் வளர்ச்சியை சுட்டி நிற்கிறது. ரோசானின் வெற்றி வெறும் 81 வாக்குகளால் தவறிப் போனது.
தவிர 124 ஆசனங்களில் 76 ஆசனங்களைப் பெற்று முற்போக்கு கன்சவேட்டிவ் கட்சி டக் போட் தலைமையில் ஆட்சியமைக்கிறது. புதிய சனநாயக்கட்சி 40 ஆசனங்களைப்பெற்று வலுவான எதிர்கட்சியாகியுள்ளது.
இதுவரை 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி 7 ஆசனங்களை மட்டுமே பெற்று படு தோல்வியடைந்துள்ளது. 150 வருடகால வரலாற்றில் இதுவே அதுபெற்ற குறைந்த ஆசனம். உத்தியோகபூர்வ கட்சி அந்தஸ்திற்கான 8 ஆசனங்களையும் அது பெறத்தவறிவிட்டது. வரலாறாக 1923 இல் பெற்ற 21.8 சதவீத வாக்கிலும் குறைந்தளவையே அது இம்முறை பெற்றுள்ளது.
இம்முறை நாலாவது கட்சியான கிரீன் கட்சி எனப்படும் பசுமைக்கட்சியின் தலைவர் குவல்வ் தொகுதியில் இருந்து தெரிவாகி அக்கட்சியின் பாராளுமன்ற பிரவேசத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
தவிர எனைய மூன்று பிரதான கட்சிகளின் தலைவர்களும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தத்தில் கனடிய தமிழர்காளல் மட்டுமன்றி உலகம் எங்கும் உள்ள தமிழர்களால் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்பட்ட கனடிய தேர்தல் முடிவுகள் உலகளாவிய தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகம் தருவதாயுமே அமைந்துள்ளது.
















http://www.tamilwin.com/statements/01/184927?ref=ls_d_tamilwin

No comments:

Post a Comment