தொலைக்காட்சி!!

Thursday, June 7, 2018

இனி மனைவியுடையதை கணவன் பயன்படுத்தக்கூடாதாம்...நீதிமன்றம் ஆணை...எதை சொல்றாங்கனு தெரியுமா?

3 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கு ஒன்றில் ‘மனைவியின் டெபிட் கார்டை கணவன் பயன்படுத்தக் கூடாது’ என்ற ஸ்டேட் வங்கியின் வாதத்தை ஏற்று, நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்தவர் வந்தனா. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு கர்ப்ப கால விடுமுறையில் இருந்தபோது, நவம்பர் 14 தேதி தனது கணவரிடம் தன் டெபிட் கார்டையும் அதன் பின் நம்பரையும் கொடுத்து ரூ.25,000 பணம் எடுத்துவரச் சொல்லியிருக்கிறார். தான் கர்ப்ப கால மருத்துவ ஓய்வில் இருந்ததால் இவ்வாறு செய்திருக்கிறார்.
அன்று வந்தனாவின் கணவர் ராஜேஷ் குமார் ஏடிஎம் மையத்திற்குச் சென்று பணம் எடுக்க முயன்றபோது, பணம் கிடைக்காமலே கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிட்டது. இது குறித்து ராஜேஷ் தொலைப்பேசி மூலம் வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு தெரிவித்திருக்கிறார். அப்போது, 24 மணி நேரத்தில் எடுக்கப்படாத ரூ.25,000 மீண்டும் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால், ஒரு நாளுக்குப் பின்பும் பணம் வங்கியில் சேராததால் நேரடியாக வங்கிக்கே சென்று புகார் கடிதம் ஒன்றை அளித்திருக்கிறார் ராஜேஷ். ஆனால், அதற்கு வங்கி அளித்த பதிலில் பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்றும் ரூ.25,000க்கான பரிவர்த்தனை வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வங்கிக் கணக்குதாரரான வந்தனா தரப்பில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நடக்கும் சமயத்தில் பிரச்னையை சுமூகமாக தீர்க்கும் நோக்கில் மீண்டும் வங்கியின் வாடிக்கையாளர் புகார் அதிகாரியிடம் கடிதம் மூலம் முறையிட்டுள்ளார் வந்தனா. ஆனால், “ஏடிஎம் கார்டு பின் நம்பர் பகிரப்பட்டது விதி மீறல்.” என்று கூறி அந்த புகார் தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த ஏடிஎம் மையத்தில் இருந்த இயந்திரக் கோளாறால் பணம் கிடைக்காமல் இருந்ததா? போதிய பணம் இல்லாததால் பணம் கிடைக்கவில்லையா? என்று சோதிக்க தகவல் அறியும் மனு ஒன்றின் மூலம் விவரங்களைக் கோரியுள்ளார் வந்தனா. அவருக்குக் கிடைத்த பதிலில், ராஜேஷ் பணம் எடுக்கும் சமயத்தில் ஏடிஎம் மையத்தில் ரூ.25,000 க்கு அதிகமாகவே பணம் இருந்ததாக தகவல் அளிக்கப்பட்டது. பின், வங்கி சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் ஏடிஎம் மையத்தில் அப்போது அதிகப்படியான பணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ராஜேஷ் பணம் எடுக்க முயன்றபோது அவருக்குப் பணம் கிடைக்கவில்லை என்பது ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி காட்சியை சோதித்ததில் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், வங்கி தன்னிடம் இருந்த பரிவர்த்தனை ஆவணங்களை நீதிமன்றத்தில் காட்டி பணம் வழங்கப்பட்டுவிட்டது என்று சாதித்துள்ளது.
இந்த வழக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடந்து வந்திருக்கிறது. ஏடிஎம் இயந்திரத்தின் கோளாறினால் பணம் கிடைக்காததால் அந்தப் பணத்தை வங்கி திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது வந்தனா தரப்பின் இறுதி வாதமாக இருந்தது. டெபிட் கார்டு பின் நம்பரை மற்றொருவரிடம் சொன்னதே விதிமீறல் என்றும் இருந்தாலும் அந்த பரிவரித்தனையில் பணம் வழங்கப்பட்டதற்கான சான்று உள்ளது என்றும் பரிவர்த்தனை ஆவணங்களைக் காட்டியது.
இவற்றைக் கொண்டு கடந்த மே 29ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், “வந்தனா நேரில் சென்று பணம் எடுக்க முடியாத பட்சத்தில் கணவர் ராஜேஷ் குமாரிடம் தேவையான பணத்துக்கு காசோலையை கொடுத்திருக்கலாம் அல்லது பணம் எடுப்பதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கையொப்பமிட்டுக் கொடுத்து பணம் எடுத்துவரச் சொல்லியிருக்கலாம். இந்த வழிகளுக்குப் பதிலாக டெபிட் கார்டு பின் நம்பரைப் பகிர்ந்துகொண்டது வங்கி விதிகளை மீறியதாகிறது.” என்று கூறிய வழக்கை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

http://www.manithan.com/india/04/175331?ref=rightsidebar-lankasrinews

No comments:

Post a Comment