Saturday, June 2, 2018

ஜனாதிபதி மைத்திரியின் பொய்யும் புரட்டும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மறைந்த சோபித தேரரின் பிறந்த தின நிகழ்வில் ஆற்றிய உரை, கொழும்பில் மற்றொரு அரசியல் பூகம்பத்துக்கு வித்திட்டிருக்கின்றது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக தேசியக் கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளன என்று அடிக்கடி பெருமையாக இரு கட்சிகளின் தலைவர்களும் சொல்லிக் கொண்டாலும், இரண்டு கட்சிகளுக்கு இடையேயும் பெரும் புகைச்சல் இருந்தமை அவ்வப்போது வெளித் தெரிந்தது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர், புகைச்சல், புயலாகவே மாறிவிட்டது.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் உரையும் அதன் வெளிப்பாடு தான்.‘’100 நாள் வேலைத் திட்டத்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது போனது.
இதனைத் தயாரித்தவர்கள் யார் எனத் தெரியாது. அதுவே மிகப்பெரிய முட்டாள்தனம்.
உண்மையில் நான் பதவியேற்ற அன்றைய தினம் இரவே நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கூடியவாறு அந்தத் திட்டத்தினை தயாரித்திருக்க வேண்டும் என்று நான் அவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
அன்றே நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்’’ என்று ஜனாதிபதி மைத்திரிபால உரையில் தெரிவித்திருந்தார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, நூறு நாள் வேலைத் திட்டத்தை முன்வைத்துத்தான் அவரது பரப்புரை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கியவருக்கே தெரியாமல் தான், அவரது தேர்தல் பரப்புரையின் முக்கிய கோசமாக இடம்பிடித்த நூறு நாள் வேலைத் திட்டம் இருந்தது என்றால், அதனை அப்போதே அவர் வெளிப்படுத்தியிருக்கலாமே?
அது முட்டாள்த் தனமாகத் தயாரிக்கப்பட்டது என்றால், அதை நிராகரித்திருக்கலாம். இவை எவற்றையும் தேர்தலின்போது மைத்திரிபால ஏன் செய்யவில்லை?
ஜனாதிபதி பதவி மீதான ஆசைதான் அதைத் தடுத்தது என்று எண்ணிக் கொள்வதில் தவறில்லை.
தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சவுக்கு உலங்கு வானூர்தியில் அம்பாந்தோட்டை செல்ல யார் அனுமதி வழங்கினார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரி தனது உரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால, ‘’ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோல்வியடைந்த பின்னர் அவர் தங்காலை செல்வதற்காக இரு உலங்கு வானூர்திகளை நான் கொடுத்தேன்.
தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அரச உலங்கு வானூர்தியில் முன்னாள் தலைவர் ஒருவர் வீடு செல்ல அனுமதித்தது எந்த நாட்டிலாவது நடந்துள்ளதா?. ஆனால் நான் கொடுத்தேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி தெரிவித்த இந்த இரண்டு கருத்துக்களில் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிச் செல்லும் கடுப்பில், ஐக்கிய தேசியக் கட்சி மீது சீறிச் சினப்பதற்காக, மைத்திரிபால சிறிசேன பொய்களை அடுக்கி விட்டுள்ளார்.
விசாரணைகள் தாமதமடைவது தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையில் விசனம் தெரிவித்திருந்தார்.
உண்மையில், ஜனாதிபதிக்கு விசாரணைகள் துரிதமாக நடக்க வேண்டும் என்ற விருப்பம், – இதயசுத்தி இருந்திருக்குமானால், சட்டம் ஒழுங்கு அமைச்சராக பொன்சேகாவை நியமித்திருப்பார்.
அதற்கான வாய்ப்பு இரண்டு தடவைகள் வந்த போதும், மைத்திரிபால நேரடியாகத் தலையிட்டு, அதனைத் தடுத்திருந்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, மகிந்த அணியுடன் ஒட்டியுள்ளவர்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்குப் பதிலாக மைத்திரி தாமதப்படுத்தியிருந்தார்.
அவர்கள் மீளவும் தன்னுடன் வந்து சேர்வார்கள் என்ற நப்பாசையில் அவர் அதனை முன்னெடுத்திருந்தார்.
மறுபுறம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்துவதற்காக, ராஜபக்ச அன் கோ மீதான விசாரணைகளை ஆமை வேகத்தில் நகர்த்தச் செய்தார்.
இரண்டு தலைவர்களுமே தங்களின் அரசியல் நலன்களுக்காகச் செயற்பட்டு விட்டு, இப்போது ஒரு தலைவர் மற்றைய தலைவரை நோக்கிப் பந்தை எறிந்து எதுவுமே தெரியாத அப்பாவிப் பிள்ளை போன்று இருக்கின்றார்.
அரசியல் என்றாலே பொய்யும் புரட்டும்தான் என்பார்கள். இதற்கு மைத்திரிபால சிறிசேனவும் விதிவிலக்கில்லை.
- Uthayan

No comments:

Post a Comment