Thursday, June 14, 2018

தமிழர் தாயகத்தில் பெண்களிடம் பாலியல் இலஞ்சமும் கோரும் நுண் நிதி நிறுவனங்கள்! வெளியான பகீர்த் தகவல்

போருக்கு பின்னர் தமிழர் தாயகத்தில் நுண் நிதிக் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன்வாங்கிய பெண்களிடம் பாலியல் இலஞ்சமும் கோருவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளது.
போரினால் பேரழிவை சந்தித்து இன்னமும் அந்த அழிவுகளில் இருந்து மீள்வதற்கு போராடிவரும் வடக்கு கிழக்கை சேர்ந்த வறுமையில் வாடும் அப்பாவி குடும்பங்களை இலக்கு வைத்து கடன்வழங்கி வரும் நுன்நிதி கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் இவ்வாறான அடாவடித்தனங்கள் தொடர்பில் குறிப்பிட்டு ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபல சிறிசேனவிற்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த குற்றச்சாட்டை தெரிவித்திருக்கின்றார்.
போரினால் பேரழிவை சந்தித்து இன்னமும் அந்த அழிவுகளில் இருந்து மீள்வதற்கு போராடிவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் வறிய குடும்பங்களை சேர்ந்த பெண்களையே இலக்கு வைத்து நுன்நிதி கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன், ஸ்ரீலங்கா அரச தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதிக வட்டி அறவிடுவதுடன் குறித்த தவணைக்கு பணம் செலுத்த தவறுபவர்களுக்கு மேலதிகமாகவும் பணம் அறவீடு செய்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், கடன் வழங்கும் நிபந்தனைகளை இலகுவாக்கி போட்டி போட்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி கடன் வழங்குவதுடன் சில நிறுவனங்கள் நள்ளிரவை கடந்தும் பணியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிப்படை தன்மை இன்றி பொய்யும் புரட்டும் கூறி வழங்கிய பணத்தை அறவீடு செய்யும் போது அதி உச்ச அநாகரீகத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டும் சிவகரன், பெண்களுடன் தகாத வார்த்தை பேசுவதுடன் வீதிகளில் வைத்து அவமரியாதை செய்தும் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடன்வாங்கிய பெண்களிடம் நுன்நிதிக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் அதிகாரிகளும், பணியாளர்களும், பாலியல் இலஞ்சமும் கோருகின்றனர் என்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஸ்ரீலங்கா மத்திய வங்கியின் அனுமதியுடனேயே நுன்நிதிக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் இந்தப் பகல் கொள்ளையடிக்கும் வட்டி வீதத்தை அறவிடுவதுடன், கடன்வாங்கியவர்கள் மீது மிகவும் மோசமான அராஜகத்தையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது, வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பதன் ஊடாக, போரினால் அனைத்து உடமைகளையும் இழந்து வறுமையின் பிடிக்குள் சிக்குண்டு தவிக்கும் எமது மக்களை மாற்றான் மனப்பான்மையுடன் வஞ்சிக்கிறீர்கள் என்றே கருத வேண்டியுள்ளதாகவும் சிவகரன் ஸ்ரீலங்கா அரச தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இந்த ஆண்டின் வரவு செலவு திட்டத்தின் ஊடாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்று கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், அதுவும் வெற்று வார்த்தைகளாகவே போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கிளிநொச்சியில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் இணைந்து நடத்திய கூட்டத்தின் போது நுன்நிதி கடன்கள் தொடர்பில் தீர்வு காண்பதாக உறுதியளித்த போதிலும், தற்போது நாட்டின் நிதி அமைச்சர் வேடிக்கையான கதை சொல்வதாகவும் சிவகரன் கடுமையாக சாடியுள்ளார்.
ஒன்றரை லட்சம் கடன் பெற்றவர்களுக்கு வட்டி செலுத்த போவதாக அறிவித்துள்ள நிதி அமைச்சரின் கூற்று, நுண்கடன் பிரச்சினையால் பலர் நாளுக்கு நாள் தற்கொலை செய்துகொள்ளும் இக்கட்டான சூழ்நிலைக்கு காரணமான நுண்நிதி கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் தொடரலாம் என்பதுதானே அதன் அர்த்தம் என்றும் சிவகரன் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை மக்களுக்காக அரசாங்கமா? அரசுக்காக மக்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவர், மக்களின் செறிவுக்கு அதிகமாக மத்தியவங்கி வடகிழக்கில் அதிக கிளைகளை அமைப்பதற்கு நிதி நிறுவனங்களுக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கியது என்றும் வினவியுள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் புதிய நிதி நிறுவனங்கள் வடக்கு கிழக்கில் கிளைகளை திறப்பதிற்கு அனுமதிக்க வேண்டாம் என்றும் ஸ்ரீலங்கா அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ள மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின், நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடு மறு சீரமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

http://www.ibctamil.com/company/80/101927?ref=ls_d_ibc

No comments:

Post a Comment