Saturday, May 19, 2018

விடுதலைப் புலிகளை நினைவு கூரப்படுவதனை நான் ஏற்கவில்லை! மனோ கணேசன்


தமிழீழ விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரசகரும மொழி அமைச்சர் மனோ கணேசன் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்...
போரில் உயிர் நீத்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் கூறிக் கொண்டு பயங்கரவாதிகளை நினைவு கூர்வதற்கும், மாவீரர் நிகழ்வுகளை நடத்துவதற்கும் எவரேனும் செயற்பட்டால் அதனை நான் எதிர்க்கின்றேன்.
அதேவேளை, கடந்த 30 ஆண்டு கால போரின் போது வடக்கிலும் தெற்கிலும் உயிரிழந்த சாதாரண பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எவரும் சவால் விடுக்க முடியாது.
போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை செய்வோர் அவர்களின் உறவினர்கள் என்ற காரணத்தினால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது தார்மீகமானதல்ல.
போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதாகக் கூறிக் கொண்டு சில இடங்களில் புலிகளுக்கு நினைவஞ்சலி நிகழ்வுகளை நடாத்த சிலர் முயற்சிப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.
நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலி கொள்கைகளை ஏற்றுக்கொண்டதில்லை என மனோ கணேசன் கூறியதாக சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் மனோகணேசன் தனது முகப்புத்தக தளத்தில் மரணித்தோர் நினைவும், எதிர்காலமும் இந்த நொடியில் என் மனதில்… என்ற பதிவொன்றை நேற்றைய தினம் இட்டுள்ளார்.
அந்த பதிவில், கொடிய போரில் மரணித்த என் தாய்நாட்டு உறவுகளுக்கு என் அஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
(1) இறந்தோரில் கணிசமானோர் தமிழ் புலிகள் என சிங்களம் சொல்வதை ஒரு வாதத்திற்கு உண்மை என்று சொன்னாலும் கூட, அவர்கள் முதலில் இலங்கையர்கள்.
(2) அவர்களது அன்னையர், தந்தையர், மனைவியர், உறவினர்களுக்கு தம் இறந்த உறவுகளை நினைவு கூர (மனித) உரிமை உண்டு.
(3) அந்த போர் இரு நாடுகளுக்கு இடையில் நடந்த போர் அல்ல.
(4) அடுத்தது, புலிகள் ஆயுதம் தூக்க ஆரம்பித்தது, அரசியல் நோக்கங்களுக்காக என்பதும், அதே மாதிரியான அரசியல் காரணங்களாலேயே தெற்கில் ஜேவீபியும் ஆயுதம் தூக்கியது என்பதும் அடிப்படை உண்மைகள்.
(5) இரண்டு இயக்கங்களும் சட்டப்படி தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரசுக்கு எதிராகவே ஆயுதம் தூக்கின.
(6) தெற்கில் அது "கிளர்ச்சி" என்றும், வடக்கில் அது "பயங்கரவாதம்" என்றும் சொல்லப்பட்டது. இதன்மூலம் அப்போதே இந்த இரட்டை அளவுக்கோல் பாரபட்சம் ஆரம்பமாகியது.
(7) இரண்டு இயக்கங்களின் போராட்டங்களுக்கு எதிராகவும் தெற்கிலும், வடக்கிலும் அரச பயங்கரவாதம் நாடு முழுக்க, யுத்த களத்துக்கு வெளியேயும் தலை தூக்கி ஆடியது. (அந்த அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டவன் என்ற முறையில் அது எனக்கு நன்கு தெரியும்)
(8) ஜேவிபி தடை செய்யப்பட்டு, இன்று தடை நீக்கப்பட்ட ஒரு இயக்கம்.
(9) புலிகள் மீதான தடை இன்னமும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நீக்கப்படவில்லை.
(10) இதன் அடிப்படையில், ஜேவீ'பி, தன் இறந்த தோழர்களை முன்னிறுத்தி, மாவீரர் தினங்களை வருடத்துக்கு இரண்டு முறை கொண்டாடுகிறது.
(11) இதே உரிமைகளை தமிழரும், புலிகள் இயக்கமும் பெற வேண்டும். இதற்காக தமிழ் சமூகமும், புலிகள் இயக்கமும் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி அரசியல்ரீதியாக யோசிக்கப்பட வேண்டும்.
(12) வருடாவருடம், யுத்தம் நிறைவுக்கு வந்த இந்த மே மாதத்தில் நாடு முழுக்க பதட்ட நிலைமையை ஏற்படுத்தி அரசியல் செய்யும் நிலைமைகளை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பிலும் பொறுப்புள்ளோர் ஆவன செய்ய வேண்டும்.
(13) இதன் முதற்கட்டமாகவே, தெற்கத்திய தீவிரவாதிகளின் எதிர்ப்பின் மத்தியிலும், அதிகாரபூர்வ இராணுவ வெற்றி விழாவை நமது அரசு நிறுத்தியுள்ளது என்ற உண்மை தமிழ் தரப்பால் புரிந்துகொள்ளப்பட வேண்டும் என அந்த பதிவில் தெரிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/politics/01/183025?ref=home-top-trending

No comments:

Post a Comment