Tuesday, May 8, 2018

அதிகரிக்கும் வன்கொடுமைகள்: உங்கள் குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுங்க


சமீபகாலமாக இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளில் அதிகமாக பாதிக்கப்பட்டதும் உயிர்பலி ஏற்பட்டதும் சிறு குழந்தைகளுக்குத்தான்.
மழலை வாசம் மாறாத இந்த குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ய நினைப்பவர்கள் நிச்சயமாய் இதயமற்ற அரக்கர்களாகதான் இருக்க முடியும்.
அந்த வேதனை இன்னமும் நெஞ்சின் அடியில் உழன்று கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நமது குழந்தைகளை இது போன்ற விஷயங்களிலிருந்து எப்படி பாதுகாப்பது என்கிற பயம் அத்தனை பெற்றோருக்கும் இருக்கிறது.
நடந்த கொடுமைகளில் இருந்து பாடம் கற்று கொண்டு இப்போதாவது நாம் விழித்து கொள்ள வேண்டும், தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி சரியாக வெளியில் சொல்ல தெரியாத பிஞ்சு குழந்தைகள்தான் சில இரக்கமற்ற கோழைகளின் இலக்காக இருப்பதால் நம் குழந்தைகளுக்கு எந்த வயதில் இருந்து இதை தொடங்குவது என்கிற குழப்பம் ஏற்படும்.
அதை போக்கவும் சில முக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் தொடர்ந்து படியுங்கள்.
உங்கள் குழந்தைகளை மூன்றாம் நபரிடம் பழக விடும்போது கவனமாக இருக்க வேண்டும். நமது பிள்ளைகளிடம் நாமே எப்படி இதை சொல்வது என்கிற உங்களது மனோபாவத்தை மாற்றி சரியான தொடுதல் முறைகள் பற்றி உங்கள் குழந்தைகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஒரு நபரின் பார்வை மற்றும் தொடுதல் பற்றிய சரி தவறுகளை உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் விளக்கி கூறிவிட்டால், இது போன்ற சமயங்கள் ஏற்படும்போது குழந்தைகள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்பதால் நீங்களும் நிம்மதியாக இருக்க முடியும்.
உங்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ப விஷயங்களை தெளிவாக அவர்களுக்கு புரியும் வகையில் சொல்லி கொடுங்கள், அதே போல அவர்களுக்கு ஏதேனும் முறையற்ற முறையில் நடந்தால் உங்களிடம் திறந்த மனதோடு அதைப்பற்றி பேசும் வகையில் அவர்களிடம் மிருதுவாகவும் அன்பாகவும் நடந்து கொள்வது அவசியம்.
அவர்களே சொல்ல தெரியாத ஒரு விஷயத்தில் தடுமாறி கொண்டிருக்கையில், நாமும் பொறுமை இன்றி அவர்களிடம் நடந்து கொண்டால் பிள்ளைகள் தங்கள் கஷ்டங்களை பெற்றவரிடம் சொல்லாமல் மறைக்க தொடங்கி விடுவார்கள்.

இந்த சொல்லிக் கொடுக்கும் பயிற்சியை உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை புரிந்து நடக்கும் வயதில் இருந்தே ஆரம்பிப்பது நல்லது.
2 அல்லது 3 வயதுகளில் குழந்தைகள் நம் பேச்சை புரிந்து அதற்கேற்றாற்போல செயல்படும் நேரம், ஆகவே அப்போதிலிருந்தே இந்த பாடத்தை ஆரம்பித்து விடுங்கள்.
முதலில் குழந்தைகளின் உள்ளாடைகள் மூலம் மூடப்பட்டுள்ள பாகங்களை மூன்றாம் நபரோ வேறு யாரோ தொடுவது தவறு என்பதை சொல்லி கொடுங்கள்.
பெற்றோர் முன்பு சில சமயங்களில் மருத்துவர் போன்றவர் மற்றும் குளிக்கும்போது பெற்றோரே தொடும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் யாரேனும் தொட்டால் உங்களிடம் சொல்ல வைக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள்.

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பெற்றோர்தான் முதல் கரணம் என்பதால் பிள்ளை வளர்ப்பை கவனமுடன் செய்யுங்கள்.
குழந்தைகளுக்கான பாட புத்தகங்களை பயன்படுத்தி உடல் பாகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி கொடுங்கள். அவர்களின் வயதிற்கேற்ப பாலியல் விஷயங்களை படிப்படியாக சொல்வது அவசியம்.
நல்ல தொடுதல் கேட்ட தொடுதல் போன்ற விஷயங்களை குழந்தைகள் 2 முதல் 4 வயதிற்குள் பள்ளிக்கு செல்வதற்கு முன்பாகவே பழக்கி விடுவது நல்லது.
தனக்கு ஏதேனும் தவறாக நடந்தால் அது பற்றி குழந்தைகள் தெளிவான வார்த்தைகள் பேசும்படி அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். பாலினம் குறித்த பாகுபாடு இதில் வேண்டாம்.
ஆண் குழந்தை, பெண் குழந்தை இருவருமே இது போன்ற பாதிப்புகள் அடைவதால் இருபாலருக்கும் இதனை சொல்லி தருவது நல்லது.

அவர்களது வயதிற்கேற்றபடி நடந்து கொள்ள அவர்களை பழக்குவது மிக மிக அவசியம். சில சமயங்களில் குழந்தைகள் சிலரோடு பழக மறுக்கலாம், மடியில் அமரவோ தொட்டு பேசவோ விரும்பாமல் இருக்கலாம். அவ்வாறான குழந்தைகளை அவர்கள் விருப்பப்படியே நடக்க விட்டு விடுவது அவசியம்.
அதே போல வேறு உறவினரோ மூன்றாம் நபரோ இக்குழந்தைகளை அவ்வாறு உட்கார கேட்கும்போதோ அல்லது தொட்டு பேசும்போது குழந்தைகளுக்கு பிடிக்காவிடில் அவர்களை வலுவாக மறுத்து "நோ" சொல்ல சொல்லுங்கள். இது போன்ற பிரச்னைகளில் இது மிக முக்கியமான விஷயமாகும்.


http://news.lankasri.com/special/03/178137?ref=ls_d_others

No comments:

Post a Comment