Sunday, May 20, 2018

போர்க்குற்றச்சாட்டும் இராணுவமும் !!


கொழும்பில் அமைதி மாளிகை என்ற பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் திகதி பாதுகாப்புச் செயலர் கபில வைத்திய ரத்னாவினால் ஒரு பணியகம் திறந்து வைக்கப்பட்டது பலருக்கும் நினைவிருக்கலாம்.
அது ஒன்றும் ஆடம்பர மாளிகை அல்ல. இலங்கை இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம்.
இலங்கை இராணுவத்தில் நடவடிக்கை பணியகம் என ஒரு பிரதான பிரிவு உள்ளது. அதுவே இராணுவத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும் கையாளும் போர் நடவடிக்கைகளை கையாண்டதும் அப் பணியகம் தான். போருக்குப் பின்னரான இராணுவத்தினரின் நடவடிக்கைகளைக் கையாளுவதும் அந்தப் பணியகம் தான்.
அதற்கும் புறம்பாகவே இலங்கை இராணுவம் வெளிநாட்டுப் பணியகம் என ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது இதன் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மெர்வின் பெரேரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பொதுவாக இராணுவத்தினர் எல்லா பிரதான பணியகங்களுமே இராணுவத்தின் தலைமையகத்தில் தான் இயங்குவது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக வெளிநாட்டு நடவடிக்கப் பணியகம் மாத்திரம் இராணுவத் தலைமையகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு அமைதி மாளிகை எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பணியகத்தை ஆரம்பிக்கவுள்ள தகவலை இராணுவத் தளபதி லெப் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கடந்த பெப்ரவரி மாதமே வெளியிட்டிருந்தார்.
வெளிநாடுகளில் ஐ.நா. அமைதிப் படைகளில் இலங்கைப் படையினரை அதிகளவில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்தப் பணியகம் அமைக்கப்படவுள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ஐ.நா அமைதிப் படைக்கு அனுப்பப்டும் இலங்கைப் படையினர் கடுமையான மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அழுத்தங்கள் அதிகரித்த சூழ்நிலையிலேயே இந்தப் பணியகம் அமைக்கப்பட்டது.
போரில் ஈடுபட்டபோது எந்தவிதமான மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடவில்லை என்பதை, உறுதி செய்த பின்னரே இலங்கைப் படையினர் வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப் படையில் பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிபந்தனையை விதித்த ஐ.நாவே அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அவ்வாறு நடைமுறைப்படுத்தி இருந்தால் உரிய மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத 49 இலங்கைப் படையினர் லெபனானுக்கு அனுப்பப்பட்டிருக்கமாட்டார்கள்.
இன்னமும் அவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ஐ.நா எடுக்கவில்லை. அது பற்றிய கேள்விகளுக்கும் ஐ.நா உரிய பதிலை அளிக்கவில்லை. எனினும் மனித உரிமை அமைப்புகள் அதனை சும்மா விடுவதாக இல்லை. ஐ.நா. அமைதிப் படை நடவடிக்கை பணியகத்துக்கு தொடர்ந்து நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. இது இலங்கை இராணுவத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது. அதனால் தான் இது சம்பந்தமான பிரச்சினைகளை கையாள்வதற்காகவே அமைதி மாளிகை என்ற பெயரில் வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் திறக்கப்பட்டுள்ளதாக நம்பப்பட்டது. ஆனால் இராணுவத் தளபதி லெப் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அதற்கு மாறான தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் இலங்கை இராணுவம் மீது சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்காகவே அமைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
கடந்த 10ம் திகதி கொழும்பிலுள்ள வெளிநாட்டுச் செயலாளர்களை இராணுவத் தளம்பதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க சந்தித்திருந்தார். அதன்போது வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் தொடர்பாக சில தகவல்களை வெளியிட்டிருந்தார். அத்துடன் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் அவர் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையென்கிறார், அதனால் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்கிறார். போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள தயார் என்கிறார். அதற்கு வெளிநாடுகளில் தமக்கு போதிய ஆதரவு இல்லை என்பதாலேயே வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகத்தை அமைத்திருப்பதாக கூறுகின்றார்.
போர்க்குற்றங்களை இழைக்கவில்லை எனக் கூறும் அவர் சிலர் குற்றமிழைத்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதும் அந்தப் பழியை போட முடியாது என்கிறார். எது எவ்வாறாயினும் இலங்கை இராணுவம் போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கின்றது. அதிலிருந்து வெளியே வர முயற்சிக்கின்றது என்பதை மட்டும் அவரது கருத்தில் இருந்து உணர முடிகின்றது.
போர்க்குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த இராணூவத்தின் மீதும் சுமத்தப்படுவதால் ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக்கொள்வது தொடக்கம் வெளிநாடுகளில் பயிற்சி வாய்ப்புகளை இழக்கின்ற நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இராணுவம் எதிர்கொள்கின்றது. 9 ஆன்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இராணுவம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டபோதிலும் போர்க்குற்றச்சாடுகளில் இருந்து வெளியே வரத் திணறும் இராணுவமாகவே இருக்கின்றது.
ஒட்டுமொத்த இராணுவத்தின் மீதும் சுமத்தப்படுகின்ற போர்க்குற்றச்சாட்டுகளை தனிப்பட்ட சிலர் மீது சுமத்திவிட்டு தப்பித்து விடும் நோக்கிலேயே இப்போதைய நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இராணுவத்தில் ஒருசிலர் தவறு செய்திருக்கலாம் என இராணுவத் தளபதி அதனை அடிப்படையாகவே வைத்துக் கூறியிருக்கிறார். வெளிநாட்டு நடவடிக்கை பணியகத்தின் மூலம் போர்க்குற்றச் சாட்டுகளை எதிர்கொள்வதற்கான ஆதாரங்களுடன் அதனை முறியடிப்பதற்கே இராணுவம் முயற்சிக்கின்றது. எனினும் போர்க்குற்றச்சாட்டுகள் பொய்யென்று நிரூபிப்பதற்கு இராணுவம் எடுக்கின்ற முயற்சிகள் வெற்றிபெற வேண்டுமானால் நம்பகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை அரசாங்கம் செய்திருக்க வேண்டும்.
ஆனால் அரசாங்கம் அதனை இதுவரை செய்யவில்லை. சர்வதேச அழுத்தங்கள் இருந்த போதிலும் நம்பகமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் இராணுவம் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உள்ளக விசாரணைகளையாவது முன்னெடுத்திருக்க வேண்டும்.
2013ம் ஆண்டு இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியவைனால் நியமிக்கப்பட்ட ஒரு இராணுவ விசாரணைக்குழு நல்லிணக்க ஆணைக்குழுவில் அறிக்கையில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தியது. பின்னர் இராணுவத் தளபதியாக பதவியேற்ற மேஜர் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தலைமையிலான அந்த விசாரணைக்குழு முதற்கட்டமாக பொதுமக்களை இலக்கு வைத்து இராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என அறிக்கையைச் சமர்ப்பித்தது.
இரண்டாவது கட்டமாக சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தப்படுகின்றது என்று இராணுவம் கூறியதே தவிர அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா இல்லையா என்று கூட யாருக்கும் தெரியாது.
சனல்4 வெளியிட்ட வீடியோ உள்ளிட்ட போர்க்குற்ற ஆவணங்களில் காணப்படும் படையினரை இராணுவத் தலைமையினால் அடையாளம் காணுவது ஒன்றும் கடினமானதல்ல. உள்ளக விசாரணை மூலம் அதற்கமைய படையினரை அடையாளம் கண்டு இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அது இராணுவத்தின் மதிப்பை உயர்த்தியிருக்கும். அவ்வாறான ஒரு விசாரணையை முன்னெடுக்க எந்தவொரு இராணுவத் தளபதியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கு அரசியல் தலைமைகளும் இடமளித்திருக்கவில்லை.
ஒரு சில படையினர் செய்த தவறுகளாக காண்பித்து போர்க்குற்றச்சாட்டுகளை பொய்யானவை என்று நிரூபிக்கவே இப்போது இராணுவம் முயற்சிக்கிறது. ஆனாலும் இதனையும் கூட இராணுவத்தினரால் இலகுவாக செய்துவிட முடியாது.
ஏனென்றால் போரின் போது இடம்பெற்ற மீறல்களில் பல நன்கு திட்டமிடப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் இடம்பெற்றதாக வலுவான சந்தேகங்கள் உள்ளன. சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகள், உறுப்பினர்கள் காணாமல் போனது அதில் முக்கியமான விவகாரம். இதனை மூடி மறைப்பதில் ஒட்டுமொத்த அரசியல் இராணுவ கட்டமைப்பும் முன்னின்று செயற்படுகின்றது. அப்படியொரு சரணடைவு நடக்கவே இல்லை என்றே சாதிக்க முனைகிறது.
எங்காவதொரு கட்டத்தில் இதனை ஏற்றுக்கொண்டால் சங்கிலித் தொடராக கட்டளை அமைப்புகள் பதில்கூறவேண்டி இருக்கும். அவ்வாறான நிலையைத் தவிர்க்கவே ஒட்டுமொத்தமாக இத்தகையை நிகழ்வுகள் நடக்கவே இல்லை என்று நிரூபிக்க முயற்சிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு நடவடிக்கப் பணியகத்தின் மூலம் போர்க்குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக இராணுவத் தளபதி கூறியிருந்தாலும் அதனை எந்தளவுக்கு ஆதாரபூர்வமாக முன்னெடுப்பது என்பதில் சிக்கல்கள் உள்ளன. வீடியோ மற்றும் ஒளிப்படங்களாக உள்ள போர்குற்ற ஆதாரங்களுக்கு இதுவரையில் உரிய பதிலை அளிக்காத இலங்கை இராணுவம் எவ்வாறு ஒட்டுமொத்த இராணுவத்தையும் போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப் போகின்றது என்று தெரியவில்லை.
வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகத்தின் மூலம் போர்க்குற்றச்சாட்டுகளை மூறியடிக்கும் பணிகள் இராணுவத்தினால் எந்தளவுக்கு வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டி உள்ளது.

http://www.tamilwin.com/security/01/183133?ref=rightsidebar-article

No comments:

Post a Comment