Friday, April 27, 2018

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் -


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இப்போது நளினி 26 ஆண்டுகாலமாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தம்மை மனிதாபிமானத்தின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசுதான், நளினி விடுதலை குறித்து தீர்மானிக்கும் என தமிழக அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டது.
மேலும் நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா? மாநில அரசுக்கு உரியதா? என்பது குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனவும் தமிழக அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என கூறி அவரது மனுவை நிராகரித்தது.
இதனையடுத்து இதுதொடர்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என நளினி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

http://news.lankasri.com/india/03/177421?ref=ls_d_india

No comments:

Post a Comment