Friday, April 6, 2018

டோல்கேட் உடைப்பு,ஐ பி எல்லில் போராட்டம்,சாஸ்திரிபவனை செருப்பால் அடித்தது போன்றவற்றால் காவேரி வந்திடுமா


டோல்கேட் உடைப்பு,ஐ பி எல்லில் போராட்டம்,சாஸ்திரிபவனை செருப்பால் அடித்தது போன்றவற்றால் காவேரி வந்திடுமா என்கிறார்கள்...

கருப்பர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் எழுதப்படாத சட்டமாக பேருந்தில் அவர்களுக்கு இருக்கைகள் பின்புறத்தில் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன.முன்புறம் அமர அனுமதி கிடையாது. அப்போதும் வெள்ளையர்களுக்கு இடம் இல்லையெனில் அந்த இடத்தையும் விட்டு விட்டு எழுந்து நிற்க வேண்டும். கர்ப்பிணிப்பெண் ஒருவர் அது போன்ற சூழலில் வெள்ளையர்க்காக இருக்கை தர இயலாத சூழ்நிலையில் அவர் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டார். அரசு அவர்க்கு தண்டனை வழங்கியது.

இது போன்ற சம்பவங்களால் மார்டின் லூதர் கிங் இதனை கண்டித்து ஒரு மாபெரும் பேருந்து #BoycottBusStruggle என்ற புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டார். அது நாங்கள் சமமாக எங்கே வேண்டுமானாலும் பேருந்தில் அமரும் காலம் வரை கருப்பர்கள் இனி பேருந்திலே பயணிக்க மாட்டோம் என்பதான போராட்ட முறையாக இருந்தது. வெள்ளையரசு லட்சியம் செய்யவில்லை. யாருக்கு நட்டம் என நகைத்தனர். நாட்கள் ஓடி மாதங்களாகியும் கருப்பர்கள் வைராக்கியமாக பேருந்தை புறக்கணித்து நடந்தே சென்றனர்.

ஒரு கட்டத்தில் அரசு தனது போக்குவரத்து வருவாய் குறையும்போது சற்றே உணர ஆரம்பித்தது. 1955ல் ஆரம்பித்து 1956வரை ஓராண்டு நீடித்த இந்த போராட்டத்தில் ஒரு வயதான கிழவி நடப்பதை பார்த்து ஓட்டுநர் ஒருவன், ஏன் கிழவி நீயுமா நடக்கிறாய்? வா வந்து பேசாமல் பேருந்தில் ஏறு என்றானாம்... " இல்லை மகனே நான் எனக்காக நடக்கவில்லை என் அடுத்த தலைமுறைக்காக நடக்கிறேன்" என்ற கிழவியின் உறுதியில் வெள்ளை அரசு பணிந்தது. மார்டின் லூதர் கிங்கும் வெள்ளையரும் சமமாக பேருந்தில் அமர்ந்து செல்லும் புகைப்படங்கள் பத்திரிக்கைகள் வெளியிட அவை வரலாற்றை அலங்கரித்தன.

பறக்க இயலவில்லையெனில் ஓடுங்கள்,ஓட இயலவில்லையெனில் நடந்து செல்லுங்கள்,நடந்து செல்லவும் இயலவில்லையெனில் தவழ்ந்து செல்லுங்கள் ....ஆனால் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டே இருங்கள் என்ற மார்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளை தற்போதைய சூழலுக்கு அழகாக பொருத்தலாம்.
இலக்கை நோக்கி முன்னேறுவோம்...

#cauverymanagementboard

வரலாற்று தகவல்

No comments:

Post a Comment