Friday, April 20, 2018

கணவனுக்காக வருடம் முழுவதும் காத்திருக்கும் காதல் நாரையின் கதை


14 வருடங்களாக கால் உடைந்த தனது காதல் பெண் நாரையை காண்பதற்காக ஆண் நாரை ஒன்று வருடந்தோறும் 16 ஆயிரம் கிலோமிற்றர் பயணித்து காதல் வாழ்க்கையில் ஈடுபடுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்க மஞ்சள் நிற நாரைகள் ஆண்டு தோறும் ஐரோப்பாவில் உள்ள குரேஷியா நகரத்திற்கு வலசை வருகின்றன. அதில் ஒரே ஒரு நாரைக்கு மட்டும் அங்கு செல்வதற்கு மனிதர்களை மிஞ்சிய அழுத்தமான காரணம் ஒன்று இருக்கிறது.
தொடர்ந்து கடந்த 14 வருடங்களாக ஒரு ஆண் நாரை 16 ஆயிரம் கிமீ பயணித்து குரேஷியா நகரை வந்தடைகிறது. பறக்க முடியாத தன் காதலியைக் காணத்தான் இந்தப் பயணம்.
இதற்காகவே ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்திற்காக காத்திருக்கிறது அதன் பெண் நாரை.
போன வாரம் காதலித்து இந்த வாரம் ஒன்றாக வாழ்ந்து அடுத்த வாரம் இன்னொரு காதல் தேடும் மனித காதல் இல்லை இது.
காதலின் பெயரால் துரோகங்களும் வன்மங்களும் நிறைந்து கிடைக்கும் இந்த உலகில் இருந்து சற்று விலகி நாம் பறவைகள் உலகில் பயணிக்கலாம் வாருங்கள்.

1993ம் வருடம் வலசை வரும்போது மனிதர்களால் வேட்டையாடப்பட்டு காலில் காயங்களோடு இருந்திருக்கிறது இந்தப் பெண் நாரை.
காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு இரையாக இருந்த நிலையில் 71 வயது ஸ்டெஜ்பன் வோகிக். என்பவர் அதனைக் கண்டு சிகிச்சை செய்து காப்பாற்றிஇருக்கிறார். இருப்பினும் அதனால் பறக்க முடியாது என்ற நிலையில் அதற்கு புகலிடம் தந்து உதவியிருக்கிறார் இவர்.
இந்த நாரைக்கு மெலினா எனப் பெயரிட்டு அதற்குத் தேவையான உணவான மீன்களை 30கிமீ தூரத்திலிருந்து பிடித்துக் கொண்டு வந்து உணவளித்து வரும் ஸ்டெஜ்பன் வோகிக் ஒய்வு பெற்ற பள்ளி அலுவலர். மகன் ஆஸ்திரேலியாவில் வசிக்க மனைவியை இழந்த இவரின் தனிமைக்குத் துணையானது மெலினா.
14 ஆண்டுகளுக்கு முன் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த க்ளெபேடன் எனும் ஆண் நாரையுடன் இணை சேர்ந்த மெலினா இரண்டும் குடும்பம் நடத்திய பின் அந்த வருடம் அவர்களுக்கு சில குஞ்சுகள் பிறந்தன. குஞ்சுகள் வளரும் வரை காத்திருந்த க்ளெபேடன் அவைகள் பறக்க கற்றுக் கொண்டவுடன் அவைகளோடு தென்னாப்பிரிக்காவிற்கு பறந்து சென்று விட்டது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வருகையில் க்ளெபேடன் வரும் என்று வோகிக் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தன் காதலைத் தேடி க்ளெபேடன் வந்ததும் வோக் மட்டுமல்ல மெவினாவும் மகிழ்ச்சியடைந்தாள்.
அதன் பின் 14 வருடங்களாகத் தொடர்ந்து ஒவ்வொரு மார்ச் மாதமும் இவர்கள் இணைந்திருக்கின்றனர். 62 குஞ்சுகள் பெற்றிருக்கும் இந்த ஜோடி இன்னமும் காதலில் சலிப்படைவதில்லை என்கிறார் வோகிக்
ஒவ்வொரு வருடமும் தன் இணையும், குஞ்சுகளும் பறந்து போன பின் மெலினா சோகத்தில் ஆழ்ந்து விடும். ஏதேனும் ஒரு மரத்தில் அமர்ந்தபடியே அமைதியாக இருக்கும். எதுவும் சாப்பிடாது, தூங்காது. மூன்று நாட்களுக்குப் பின் மனதை தேற்றி கொண்டு அடுத்த மார்ச் மாதத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் என்கிறார் மெலினாவை மகள் போல வளர்த்து வரும் ஸ்டெஜ்பன் வோகிக்.

படிக்கும்போதே மனத்தைக் கரைக்கும் இந்தக் காதல் ஜோடியின் கதை சர்வ நிச்சயமாய் மனித இனத்திற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கலாம்.
வாழ்வில் பல காதல்களை சர்வ சாதாரணமாக "இதுவும் கடந்து போகும்" என்பதாய் உணர்வின்றி கடந்து போய்க்கொண்டிருக்கும் மனிதர்களுக்கிடையே
பறக்க இயலாத தன் இணைக்காக பரஸ்பரம் காத்திருக்கும் காதல் நாரைகளைப் பார்க்கையில் நாமும் பறவைகளானால் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.



http://news.lankasri.com/special/03/176868?ref=ls_d_others

No comments:

Post a Comment