Thursday, December 28, 2017

நடிகை கோவை சரளா


நகைச்சுவை என்பது சிரிப்பும், மகிழ்ச்சியும் தூண்டும் ஒரு கலை. அது எல்லோருக்கும் அமைந்து விடாது. அப்படி அந்த கலை ஒருவருக்கு அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றே கூறலாம்.

சினிமாவில் அன்று ஞாபகத்தில் வருபவர்கள் என். எஸ். கிருஷ்ணன்,
சந்திரபாபு,தங்கவேலு,நாகேஷ்,வி.கே.,....அதன் பின் சுருளி.......ஒய்.ஜி மகேந்திரன் ......இடையில் கவுண்டமணி செந்தில்...விவேக், வடிவேல்....இன்று சந்தானம்,பரோட்டா ......என ஆண்களில் பலர்!

பெண்களில் பெயர் சொல்லக்கூடிய ஒரு சிலரில் கதாநாயகியாக குணச்சித்திரமாக கலக்கிய சொந்தக்குரலில் பாடும் வல்லமை கொண்ட மனோரமாவை மட்டுமே உயர்த்திச்சொல்லலாம்!


இன்று மனோரமாவுக்கு  இணையான  நகைச்சுவை நடிகை கோவை சரளா.


கோவை சரளாவின் உண்மை பெயர் சரளா(55). இவர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் ஒரு மலையாளி குடும்பத்தில் 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி பிறந்தார்.
கோவை சரளா அவர்கள், இன்றுவரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும், இறக்க குணமும் நிறைந்த அவர், தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார். மேலும், அவர் பல ஏழைக் குழந்தைகள் படிப்பிற்கும், வயதானவர்கள் நலனுக்காகவும் பல உதவிகள் செய்து வருகிறார்.

சிறுவயதிலேயே மிகுந்த நகைச்சுவை திறன் கொண்டவர். தனது ஒன்பது வயதில் சினிமாவில் நுழைந்த இவரின் சாதனைகளை முறியடிக்க எவருமில்லை.
தென்னிந்திய மொழிகளில் 800 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டவர். இன்றும் ஓர் இளம் நடிகையைப்போல உற்சாகம் குறையாமல் வலம்வருபவர். அது அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிபடும்.

இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது ஆகிய விருதுகளை பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் ஒரி நீ பிரேம பங்கரம் கனு (2003) ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காக வென்றுள்ளார்.
இவர், நடிகை மட்டுமல்ல, சிறந்த பாடகியும் கூட....கேப்டன் விஜயகாந்த் மற்றும் பானுப்பிரியா நடித்த சிறையில் பூத்த சின்ன மலர் என்ற படத்திலும், இளைய தளபதி விஜய் மற்றும் லேடீஸ் சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்து வெளியான வில்லு திரைப்படத்திலும், பாடகியாக தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், சுந்தரி சௌந்தரி (சன் தொலைக்காட்சி), வந்தனா தந்தனா’ (கலைஞர் தொலைக்காட்சி), சபாஸ் மீரா (ஜெயா தொலைக்காட்சி), சகலகலா சரளா (விஜய் தொலைக்காட்சி), காமெடியில் கலக்குவது எப்படி (விஜய் தொலைக்காட்சி), செல்லமே செல்லம் (சன் தொலைக்காட்சி) போன்ற நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாகவும் சில ஆண்டுகள் கலக்கி வந்தார்.


ஒரு முறை கோவை சரளா திருமணமாகமல் தனியாக வாழ்வது குறித்து பல்வேறு வதந்திகள் வந்துகொண்டிருந்தன. இதற்கு முற்றுவுள்ளி வைக்க நினைத்த அவர் கூறியதாவது,
ஆமாம்! தனிமை தான் எனக்குப் பிடிச்சிருக்கு அதனால் தான் தனியா வாழ்ந்துட்டு இருக்கேன். என்னை நான் யார்னு உணர இத்தனிமை உதவுது. நான் யார்கிட்டயும் அதிகமாகப் பேச மாட்டேன். என்னை மதிச்சு பேசுறவங்க கருத்துக்கு மதிப்பு கொடுத்துக் கேட்பேன். 'கல்யாணம் செய்துக்கலை; வயசாகியும் ஓடியாடி நடிக்கிறாள்'னு பலவிதமாகச் சொல்றாங்க. அதையெல்லாம் பெருசா எடுத்துக்கறதில்லை.
நடிப்பின்மூலம் மக்களை மகிழ்விக்கிறதுதான் என் ஒரே நோக்கம். அதுக்காக நிறைய கஷ்டங்களைச் சந்திச்சிருக்கேன். எப்போ எனக்குக் கண்ணு சரியாகத் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாத நிலை வருதோ அப்போதான் வயசாயிட்டதா நினைப்பேன். அதுவரை நான் 18 வயசுப் பொண்ணுதான். அந்த உற்சாகத்தோடுதான் இரவு பகல் பார்க்காமல் உழைப்பேன். அதுக்காக, கோடிக்கணக்குல சொத்து சேர்த்துடலை. என் அடிப்படைத் தேவைக்கானதைதான் வெச்சிருக்கேன். ஆடம்பர வாழ்க்கையும் வாழ்ந்துட்டில்லை.
எல்லா ஆர்டிஸ்டுங்க மேலேயும் அன்பு வெச்சிருக்கேன். என்னைப் பிடிக்காதவங்க மீதும் மரியாதை வெச்சிருக்கேன். நிறையக் காயங்களைச் சந்திச்சதால், யாருடனும் நெருங்கிய நட்பா இருக்குறதில்லை அவ்வளவுதான். எனக்குள் இருக்கும் கவலைகளை வீட்டைத் தாண்டி வந்ததும் மறந்துடுவேன். ஷூட்டிங் முடிச்சு வீட்டுக்குள் நுழைஞ்சால், நான் ஒரு சாதாரண மனுஷி. வீட்டு வேலை, புக் படிக்கிறதுனு என் உலகில் இருப்பேன். சொந்தங்களோடு வருஷத்துக்கு ஒருமுறை கோயிலுக்குப் போறதோடு சரி. யாரையும் சாராமல் இருக்கப் பழகிட்டேன். ஷாப்பிங் போறதும் பிடிக்காது இது தான் நான் இப்படித் தான் இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

பிரபலமான அவரின் சில வசனங்கள்
என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம் – கரகாட்டக்காரன்
என்னை காரைக்குடி பார்ட்டியில கூப்பிட்டாகோ, தஞ்சாவூர் பார்ட்டியில கூப்பிட்டாகோ, அங்கெல்லாம் போகாம என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன் – கரகாட்டக்காரன்
சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய் – ஷாஜஹான்
தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது – ஷாஜஹான்
விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் (2001) - பூவெல்லாம் உன் வாசம், நந்தி விருது (2003) - ஒரி நீ பிரேம பங்கரம் கனு என்ற படங்களுக்கும் 2011 ஆம் ஆண்டி சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருதினையும் பெற்றுள்ளார்.
நகைச்சுவை இளவரசியாக திகழும் கோவை சரளா அவர்கள், தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது. 29 ஆண்டுகளாகத் திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது என்பது நிதர்சனத்திற்குரிய உண்மை.


http://www.manithan.com/cinema/04/155079?ref=ls_d_manithan

No comments:

Post a Comment