Sunday, December 10, 2017

69ஆவது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம்..


மனித உரிமைகளின் வரைவிலக்கணம், அடிப்படைகளை கிரேக்கர், உரோம காலத்தில் உருவானதாக சில ஆய்வாளர் கூறியுள்ளார்கள். ஆனால் 1878ஆம் ஆண்டு அன்றைய பபிலோனா நகரில் புதைபொருள் ஆய்வாளரால் கண்டு பிடிக்கப்பட்ட, கழிமண்ணால் உருவாக்கப்பட்ட ஓர் பீப்பா போன்ற பொருளில், மனித உரிமை அதிகாரப் பத்திரம் இருந்ததாகவும், இதையே “முதலாவது மனித உரிமை சாசனமாக” சில சரித்திர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கிறிஸ்துவுக்கு முன் 539ஆம் ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி முன்னைய பாரசீக (ஈரான்) போர் வீரர்கள் முன்னைய பபிலோனியனின் (ஈராக்) தலைநகரை முற்றுகையிட்டதாகவும், அங்கு பரம்பரையாக அடிமைகளாக இருந்த தேசிய வாதிகளை விடுதலை செய்ததாகவும், இரத்தம் இன்றி ஏற்பட்ட வெற்றியை தொடர்ந்து, பாரசீக அரசரான சைரஸ் பபிலோனுக்கு நவம்பர் 9ஆம் திகதி விஜயம் செய்ததாகவும், அன்று சைரசினால் ஓர் சாசனம் வெயிடப்பட்டதாகவும் இதையே “சைரஸ் மனித உரிமை அதிகாரப்பத்திரம்” (Cyrus Charter of Human Rights) என்று அழைப்பார்கள்.
இந்த கழிமண்ணாலான பீப்பா லண்டாம் நூதன சாலையில் இன்றும் உள்ளது.

எது எப்படியானாலும் “மனித உரிமையின்” வரைவிலக்கணம், முக்கியத்துவம் ஆகியவை ஐ.நா சபையின் உதயத்தின் பின்னரே நிறுவனமயப்படுத்தப்பட்டு, சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை சுதந்திரம், சமத்துவம், நீதி, கௌரவம், ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளதுடன், இவையாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.

ஐ.நா சபையின் அதிகாரப்பத்திரம் (U.N.Charter) 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி 50 அங்கத்துவ நாடுகளினால், சன்பிரான்சிஸ்கோ நகரில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை, உத்தியோகப்பூர்வமாக 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதியே நடைமுறைக்கு வந்துள்ளது.
காரணம் இத்தினத்தில் பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா, ரஸ்யா, சீனா (இன்றைய தைவான்) ஆகிய நாடுகள் ஐ.நாவின் அதிகாரப்பத்திரத்தை உறுதிப்படுத்தினார்கள். இத்தினமே உலகம் பூராகவும் ஐ.நா தினமாக கொண்டாடப்படுகிறது.

ஐ.நா அதிகாரப்பித்திரத்தின் 60/61ஆம் சாரத்துக்கு அமைய, ஐ.நா சமுக பொருளாதார சபை (Economic and Social Council) நிறுவப்பட்டது. இச்சபையினால் ஐ.நா அதிகாரப்பத்திரத்தின் 68ஆவது சாரத்துக்கு அமைய, 1946ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு நிறுவப்பட்டது.

ஆனால் மனித உரிமைகள் விடயங்களை ஆராய்வதற்கென அமைக்கப்பட்ட ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு, 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையின் 60/251 தீர்மானத்திற்கு அமைய, ஐ.நா மனித உரிமை சபையாக மாற்றம் பெற்றுள்ளது.

மனித உரிமை சபையுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் யாவும் 2006ஆம் ஆண்டு முதல் ஐ.நா பொதுச் சபையின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகிறது.

சர்வதேச மனித உரிமை பிரகடனம் - Universal Declaration of Human Rights - UDHR
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின எட்டு அங்கத்தவர்கவினால் உருவாக்கப்பட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம் (ச.ம.உ.பி) 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி, ஐ.நா பொதுச்சபை பாரிசில் சாளியோற் மண்டபத்தில் கூடியபோது நிறைவேற்றப்பட்டது.
இப் பிரகடனம் 30 சாரங்களை கொண்டது. இதன் முதலாவது சாரம் இப்பிரகடனத்தின் அடிப்படை தத்துவத்தையும், இதன் இரண்டாவது சாரம் ‘‘மனிதப் பிறவிகள் சகலரும் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் எல்லா உரிமைகளை எந்தப் பாகுபாடின்றியும் அனுபவிக்க உரிமையுடையவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் சாரங்களான மூன்றிலிருந்து 21 வரை (3-21) குடியுரிமை, அரசியல் (Civil and Political Rights) உரிமைகள் பற்றியும், அதனை தொடர்ந்து வரும் 22ல் இருந்து 27 வரையிலான சாரங்கள் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் (Economic, Social and Cultural Rights) பற்றியும், இருபத்தெட்டாம், இருபத்தொன்பதாம் (28,29) சாரங்கள் ஒவ்வொருவரும் சமூக, சர்வதேச அமைப்பு முறைக்கு உரிமையுடையவர்கள் என்றும் அத்துடன் சமூகத்தினுள் அவர்களது கடமையின் முக்கியம் பற்றியும் கடைசி முப்பதாவது (30) சாரம் ஓர் எச்சரிக்கையான முறையில் இப்பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள எந்த சாரங்களும், விடயங்களும், சுதந்திரங்களும் எந்த ஒரு நாட்டுக்கோ, குழுவுக்கோ, நபருக்கோ மாற்ற பிழையான முறையில் திரிவுபடுத்தவோ அழிக்கும் முயற்சியில் ஈடுபடவோ முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

இப்பிரகடனம் அங்கத்துவ நாடுகள் மீது சட்டரீதியாக எந்த அழுத்தங்களையும் கொடுக்கமுடியாத போதிலும், இப்பிரகடனத்தின் கொள்கையை எல்லா நாடுகளும் முழுமனதாக ஏற்பதன் மூலம் இப்பிரகடனத்தை ஓர் “வழக்கமான சர்வதேச சட்டத்திற்கு” (Customary International Law) ஏற்ற வலுவை கொண்டுள்ளதாக கூறமுடியும். தற்போதைய காலப்பகுதியில் சர்வதேச மனித உரிமை பிரமானங்கள் யாவும் இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை.

பிரகடனமும் மீள் பரிசீலினையும்
இப்பிரகடனம் இன்று தனது 69ஆவது ஆண்டினைக் கொண்டாடுகிறது. ஐ.நா அங்கத்துவ நாடுகள் ஓர் சில, இப்பிரகடனம் ஓர் பழமை வாய்ந்ததாகவும், இப்பிரகடனம் ஐ.நா. பொதுச்சபையினால் நிறைவேற்றப்பட்ட வேளையில் 58 நாடுகள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் தற்பொழுது அங்கத்துவ நாடுகள் பல மடங்காக கூடியுள்ளதாகவும், ஆகையால் இப்பிரகடனம் மீள் பரிசீலினை செய்யப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஐ.நா.வினால் உருவாக்கப்படும் சாசதனங்கள் அல்லது பிரகடனங்களுக்காக முன்னின்று பிரச்சாரங்கள் செய்யும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களிற்கு நல்ல பண உதவிகளை, அவ் சாசனங்கள் அல்லது பிரகடனங்களை முன் வைக்கும் நாடுகள் தாராளமாக வழங்குகின்றன.
இதற்கு நல்ல உதாரணமாக ‘‘றோம் சாசனம் எனக்கூறப்படும்- சர்வதேச குற்றவாளிகளுக்கான நீதிமன்றம் (International Criminal Courts?? - ICC), அத்துடன் சிறுபிள்ளைகள் விற்பனையும், விபச்சாரமும், ஆபாசபடங்களுக்கான கோட்பாட்டை மிகவும் குறைந்த விகிதத்திலேயே சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆதரவு தேடினார்கள். காரணம் இவற்றை பெரிதளவில் பல அரசாங்கங்கள் விரும்பவில்லை.

ஐ.நா அங்கத்துவ நாடுகள் மனிதஉரிமை அடிப்படை உரிமைகளையும் சர்வதேச மனித உரிமை சாசனங்களையும் எவ்வளவு தூரம் மதித்து செயலாற்றுகின்றார்கள் என்பதை தவணை முறையில் பரிசீலிப்பதற்காக பூளோக தவணை மீளாய்வை (Universal Periodic Review - UPR) நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் 193 ஐ.நா அங்கத்துவ நாடுகளின் மனித உரிமை நிலைகள் பரிசீலிக்கப்படுகிறது. இதனது மூன்றாவது சுற்று தற்பொழுது நடைபெறுகிறது.

ஐ.நா மனித உரிமை மீறல் கண்காணிப்பு
ஐ.நா சபையின் மனித உரிமை மீறல்கள் பற்றிய கண்காணிப்பு பலவிதப்பட்டது. ஐ.நா கோட்பாடுகளையும், உடன்பாடுகளையும் ஏற்ற நாடுகளை உடன்படிக்கை சபை (Treaty bodies) கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

மனித உரிமை குழு, சிறார்களின் உரிமைக்கான செயற்குழு பொருளாதார, சமூக, கலாச்சார செயற்குழு சித்திரவதைக்கு எதிரான குழு பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை களையும் குழு வெளிநாட்டு வேலையாளர்களுக்கான குழு ஆகியவை இதில் அடங்கும்.

இந்த கண்காணிப்பு முறை தவணைமுறையிலான அரசாங்கங்களின் அறிக்கை இச்செயற்குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும். பல அரசாங்கங்கள் உண்மைக்கு புறம்பான விடயங்களை அறிக்கையில் கூறுவதுடன் அதை நியாயப்படுத்துவதும் உண்டு.

இச்செயற்குழுவின் அங்கத்தவர்கள் அரச பிரதிநிதிகளை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு உண்மைகளை ஆராய்வதுண்டு. இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களும் அரச அறிக்கையின் பொய்களை எடுத்துக்கூறி அறிக்கை சமர்ப்பிப்பதும் உண்டு. இவ் உடன்படிக்கை சபை ஐ.நா மனித உரிமை சபை, மனித உரிமை ஆணையாளர் கண்காணிப்பின் கீழ் இயங்குகின்றது.
ஐ. நா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் பதவி 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இவ் ஆணையாளர் ஐ.நா. செயலாகத்தின் கீழ் இயங்குவதுடன் தமது வேலைத் திட்டங்களை ஐ.நா. பொதுச் சபைக்கு சமர்ப்பிக்கும் அதேவேளை, ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்.

எல்லா ஐ.நா அங்கத்துவ நாடுகளின் மனித உரிமை நிலைப்பாடுகளை மனித உரிமை சபை தனது செயற்குழுக்கள் (Working Group), விசேட பதிவாளர் (Special Rapporteur), நாட்டுக்கான பதிவாளர் (Country Rapporteurs) விசேட பிரதிநிதிகள் (Special Representatives) அத்துடன் சுதந்திரமான நிபுணர்கள் (Independent Experts) மூலமாக கண்காணிப்பது வழக்கம்.

இவர்கள் யாவரும் தமது அவதானங்களையும் கண்டறிந்தவற்றையும் மனித உரிமை சபைக்கு சமர்ப்பிப்பார்கள். இதில் விசேட பிரதிநிதிகளும், சுதந்திரமான நிபுணர்களும் ஐ.நா செயலாளரினால் நியமிக்கப்பட்டவர்கள்.
ஐ.நா மனித உரிமை சபை நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், ஜெனிவா ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு செயற்திட்டங்களை மேற்கொண்டிருந்த வேளையில், அதன் உதவி அமைப்பாக செயற்பட்ட ஐ.நா மனித உரிமை உப-ஆணைக்குழு, 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், ஆலோசனை குழு என்ற பெயர் கொண்ட அமைப்பாக, ஐ.நா. மனித உரிமை சபைக்கு உதவியாக ஆலோசனைகளை வழங்குகிறது.

இவற்றின் அடிப்படையில், சர்வதேச மட்டத்தில் ஸ்ரீலங்காவின் மனித உரிமை நிலைகளை இங்கு குறித்தான் நீங்கள் அறிய வேண்டுமென்ற நியதியில்லை. சர்வதேசத்தை திருப்தி படுத்துவதற்காக மறுபட்ட ஸ்ரீலங்கா அரசுகள் தம்மால் இயன்றவற்றை தொடர்ந்து சர்வதேசத்திற்கு அமோதித்து வருகிறார்கள். ஆனால் நடைமுறை என்று வரும் வேளையில் ஸ்ரீலங்கா அரசு அவர்களுடன் ‘ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். எவ்வளவு காலத்திற்கு இப்படியாக காலத்தை கடத்த போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அரசியல் மயப்படுத்தல்
ஐ.நா மனித உரிமை சபையும் முன்னை மனித உரிமை ஆணைக்குழு போன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி அண்மைக்காலங்களில் பலமாக அடிபடுகிறது. இதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பதை ஆராய நாம் பல விடயங்களை கவனத்தில் கொள்ள வெண்டியுள்ளது.

உலக நாடுகளில் இராணுவ ஆட்சியும், முடியாட்சியும், சர்வாதிகாரமும் தவிர்ந்த ஏனைய நாடுகளில் ஜனநாயகம் மற்றும் மோசடி தேர்தல் மூலம், அரசியல் கட்சிகளின் ஊடாக அரசாங்கங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. இவ்விதமாக ஓர் அரசு உருவானதும், தமக்கு வேண்டிய சாதகமான நபர்களை தூதுவர்களாகவும், ஸ்தானிகர்களாகவும், பிரதிநிதிகளாகவும் ஐ.நா உட்பட வெளிநாட்டில் உள்ள தூதுவராலயங்களுக்கும் நியமிக்கப்படுகின்றார்கள்.

இவ் இராஜதந்திரிகள் இருவகையை சேர்ந்தவர்கள். ஒன்று இராஜதந்திர வேலையை தொழிலாக (Career Diplomats) கொண்டவர்கள், மற்றைய பிரிவினர் அரசியல் நியமனம் பெற்றவர்கள். உண்மையில் வளர்ச்சி பெறும் நாடுகளில் உள்ள இராஜதந்திர வேலையை தொழிலாக செய்பவர்களும் கூட அரசியல் செல்வாக்கு இல்லாமல் பெரிய பதவிகளை அடையவோ, முக்கிய நாடுகளில் வேலை செய்யவோ முடியாது. ஆகையால் வளர்ச்சி பெறும் நாடுகளில் இருந்து வரும் எந்த இராஜதந்திரியாக இருந்தாலும் இவர்கள் அரசியல் பின்னணி உள்ளவர்களே.

இப்படியாக நியமிக்கப்படும் இராஜதந்திரிகள் அதன் அரசாங்கங்களின் பேச்சாளர்களாக தமது அரசியல் தலைவர்களினால் தமது நாடுகளின் வெளிநாட்டு அமைச்சு மூலமாகவோ, இல்லையேல் அது சம்மந்தப்பட்ட இலாகாக்கள் மூலமாக கொடுக்கப்படும் கட்டளைகளை நடைமுறைப்படுத்துகிறார்கள். ஆகையால், இவர்கள் ஐ.நா வில் பங்கு கொள்ளும் சகல விடங்களும் அரசியல் மயப்படுத்தப்படுகிறது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவ் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை சபையையும் ஓர் அரசியல் அங்கமாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் நாடுகளிடையேயான பிராந்திய நட்புறவு, மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட அரசாங்கங்கள் இடையேயான கூட்டணி, அத்துடன் பயங்கரவாததிற்கு எதிரான போரணி கூறி ஐ.நா. மனித உரிமை கண்டனங்களையும் வழிமுறைகளையும் ஏற்க மறுப்பது போன்ற விடயங்கள் இன்று ஐ.நாவின் மனித உரிமை வழிமுறைகளை நகர முடியாமல் தடுத்து நிறுத்தியுள்ளது. விசேடமாக 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதியின் பின்னர், அரசாங்கங்களின் கைகள் மனித உரிமைக்கு எதிராக பெரிதாக ஓங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருக்க, செல்வாக்கு பெற்ற நாடுகள் தமது செல்வாக்கை பாவித்து தமது நாடுகளிலும் தம்முடனான நேச நாடுகளிலும் எவ்வித மனித உரிமை மீறல்களையும் பரிசீலிக்கமுடியாது தடுத்து வருகின்றனர். சில நாடுகள் தமது நாட்டில் நடப்பவை ‘‘உள்நாட்டு “விடங்கள் என்றும் இதனால் தாம் எந்த வித ஐ.நாவின் கட்டளைகளை ஏற்கப்போவதில்லையென வெளிப்படையாகவே கூறிவருகின்றனர்.

ஐ.நாவும் சுயநிர்ணய உரிமை போராட்டமும்..
உலகில் மனித உரிமை மீறல்கள் பெருமளவில் கூடி வருவதற்காக முக்கிய காரணங்களில் ஒன்று, சுயநிர்ணய உரிமை போராட்டங்கள் மீதான அரச அடக்கு முறை.

ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாடும், பொருளாதார சமூக கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாடுகளின் சாரம் ஒன்று கூறுவதாயின், “எல்லா மக்களும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.

அவர்கள் தமது பொருளாதார, சமூக, கலாச்சார முன்னேற்றத்துக்காக தமது அரசியல் நிலைப்பாட்டை சுதந்திரமாக தீர்மானித்து கொள்ளலாம்”.
காலப்போக்கில் இச்சாரம் பலவீனமடைந்தமைக்கான முக்கிய காரணம் என்னவெனில், ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர அங்கத்தவர்களான - பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஸ்யா போன்ற நாடுகளுக்கு இச்சாரம் பெரும் தொல்லையாக அமைந்துள்ளமையே.

காரணம் அமெரிக்காவில் - அலஸ்கா, காவாய், பேரோறிக்கோ போன்றோ மக்களுடைய சுயநிர்ணய உரிமை போராட்டம், இதேவேளை வட அயர்லாந்துடைய போராட்டம் இன்றும் ஒழுங்காக தீர்க்கப்படவில்லை.
ஸ்கொட்லாந்தின் தடுமாற்று நிலையும், வேல்ஸ் மக்களில் ஒரு பிரிவினரின் விடுதலை நோக்கமும், பிரித்தானியாவே ஓர் குழப்ப நிலையில் கொண்டுள்ளது. பிரான்சில் கோசிக்கா மற்றும் பிரித்தானிய மக்களுடைய அரசியல் உரிமைப் போராட்டம், சீனா ரஸ்யாவில் செஸ்னியா, தீபெத், ஊர்யூர் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டங்கள், ஐ.நா வின் நிரந்தர அங்கத்துவ நாடுகளென கூறப்படுபவர்களுக்கு பெரும் முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டன.

இந்த ரீதியில் எந்த விதமான சர்வதேச சட்டங்களும் சுயநிர்ணய போராட்டங்களுக்கு நடைமுறையில் சாத்வீகமாக அமையுமா என்பது பெரும் ஐயப்பாடே! சில காலங்களுக்கு முன் சுயநிர்ண உரிமை போராட்டங்களின் நிலை வேறாக பார்க்கப்பட்டது.

அரசசார்பற்ற நிறுவனங்கள் (NGOs)

இப்படியான இறுக்கமான நிலைப்பாடுகளுக்குள்ளும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ‘‘பெயர் சொல்லி தலைகுனிய வைக்கும்‘‘ (Naming and shaming) நுட்பத்தை ஐ.நா மட்டத்தில் திறம்பட செய்கிறார்கள். ஆனால் விதிமுறைகளை அறவே தெரியாத அரசசார்பற்ற நிறுவனங்களும், ஐ.நா.விற்கு செல்பவர்கள, எல்லாம் தாங்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களென கூற ஆரம்பித்துள்ள காரணத்தினால், ஸ்ரீலங்கா போன்ற வன்முறை அரசுகள் பாரிய நன்மைகளை அடைந்துள்ளனர்.
தற்பொழுது பெரும் திராளன மொழித் திறன், ஆளுமை அனுபவம் ஏட்டு கல்வி அற்ற ஈழத் தமிழர்கள் ஐ.நா. சென்று வந்ததும், தமது முகநூல்களில் தாங்களே ஐ.நா. மனித உரிமைகள் யாவற்றையும் கையாளுவதாக “முழு பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கின்றனர்”. இவர்களின் கற்பனை கதைகளை நம்புபவர்களும் உண்டு.

இதேவேளை, சில அரசாங்கங்கள் ஐ.நா வழிமுறைகளை பிழையான முறையில் பாவித்து தமது சொந்த அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஐ.நா அந்தஸ்தும் பெற்றுக் கொடுத்துள்ளார்கள். இவர்களை ஐ.நா வட்டத்தில், அரசாங்க அரசசார்பற்ற நிறுவனம் (Governmanet Non- Governmental Organisation - GONGO) கொங்கோ என்று கேலியாக அழைப்பார்கள்.

இக் கொங்கோக்கள் அரச கொள்கைகளை மறைமுக பிரதிபலிப்பதுடன், மற்றைய அரசசார்பற்ற நிறுவனங்கள் இவர்களது நாடுகள் மீது முன் வைக்கும் பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு கபடமாக பதிலும் கூறுகிறர்கள்.
இப்படியான கொங்கோ அங்கத்தவர்கள் புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள். 2012ஆம் ஆண்டின் பின்னர் பல தமிழ் அமைப்புக்கள் இவ் அடிப்படையிலேயே ஐ.நா மனித உரிமை சபையில் வேலை திட்டங்களை மேற்கொள்கின்றனர். முன்னாள் ஜனதிபதி, மீண்டும் 2020ஆம் ஆண்டு பதவிக்கு வரும்வேளையில், யாவும் நிச்சயம் மற்றம் அடையும்.
ஸ்ரீலங்கா (முன்னைய இலங்கை) 1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடாக அனுமதிக்கப்பட்டது.
ஐ.நாவின் சில உடன்படிக்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்ற பொழுதும் - மனித உரிமை விடயத்தில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட அரசாங்கங்களின் கூட்டணியிலேயே கைகோர்த்து நின்று சர்வதேச ரீதியாக தம்மை நியாயப்படுத்தி வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment