Friday, December 22, 2017

நம்ப முடியுமா?- 400 மொழிகள் பேசும் 12 வயது சிறுவன்!


பல மொழிகள் பேசும் சிறுவன் புதிதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கே நமக்கு கண்ணைக் கட்டுகிறது. ஆனால், சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் மஹமூத் அக்ரம், 400 மொழிகளைக் கற்றிருக்கிறார்.
மொழிகளின் மீதான ஆர்வத்தால் பள்ளிக்குச் செல்வதையும் நிறுத்தி விட்டு, இன்னும் இன்னும் என புதிய மொழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே அக்ரம் ரொம்ப சுறுசுறுப்பு. பல நாடுகளில் உளவியல், மொழி ஆராய்ச்சி சார்ந்து வொர்க் பண்ணிட்டிருந்த எனக்கு 16 மொழிகள் தெரியும்.
வருஷத்துக்கு ஒருமுறை சென்னைக்கு வருவேன். பையன் ஒன்றாம் வகுப்பு படிச்சுட்டிருந்த சமயம், நான் லீவில் வீட்டுக்கு வந்திருந்தேன்.
கம்யூட்டர்ல டைப் பண்ணிட்டிருந்தப்போ, 'எனக்கும் இங்கிலீஸ் டைப்பிங் சொல்லிக்கொடுங்க'னு கேட்டான். அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தேன். அடுத்த ஆறு மணி நேரத்திலேயே டைப் ரைட்டிங் ஹையர் கிரேட் லெவலுக்கு ஸ்பீடா டைப் பண்ணினான்.
அதைப் பார்த்து பிரமிச்சுட்டேன். அக்ரமின் திறமையைத் தெரிஞ்சுக்கிட்டது அந்த நிமிஷம்தான்'' என்கிறார் அக்ரமின் தந்தை மொழிப்பிரியன்.
அடுத்த நாள் அரபிக் மொழியில் டைப் பண்ண கத்துக்கொடுத்தேன். நாலு நாளிலேயே நல்லா டைப் பண்ண ஆரம்பிச்சுட்டான். நான் மறுபடியும் வெளிநாடு போயிட்டேன்.
அடுத்தடுத்த மொழிகளை கத்துக்கொடுக்காம வெளிநாட்டுக்கு போயிட்டீங்களே'னு போனில் பேசும்போதெல்லாம் கேட்பான்.
அதனால், இந்தி, மலையாளம் உள்ளிட்ட சில மொழிகளைக் கத்துக்க மெட்டீரியலை மெயிலில் அனுப்பினேன். அதையும் முடிச்சுட்டதா சொன்னான். சில கேள்விகளைக் கேட்டு டெஸ்ட் பண்ணினேன். சரியா பதில் சொல்லிட்டு, 'இன்னும் வேற மொழிகள் கத்துக்கணும்'னு சொன்னான்.
வீட்டுல இன்டர்நெட் இணைப்பு கொடுத்து, ஸ்கைப் வழியே சொல்லிக்கொடுத்தேன். எட்டு வயசிலேயே, அவனாக ஆன்லைன்ல சர்ச் பண்ணி படிக்க ஆரம்பிச்சு, ஒரே வருஷத்தில் 200 மொழிகளைக் கத்துகிட்டான்" என நம் கண்களை விரியச் செய்கிறார் மொழிப்பிரியன்.

பையனின் மொழித் திறமையை உலகுக்கு தெரியப்படுத்த 2014-ம் வருஷம் பஞ்சாப்பில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சிக்கு அழைச்சுட்டுப் போனேன். அங்கே ஒரு நிறுவனத்தின் பெயரை நிகழ்ச்சியினர் 50 மொழிகளில் எழுதச் சொல்ல, அக்ரம் சரியா எழுதினான். 'வேர்ல்டு யங்கஸ்ட் மல்டி லாங்குவேஜ் சயின்டிஸ்ட்' என்கிற அவார்டு கொடுத்தாங்க.
தொடர்ந்து நம் நாடு மற்றும் வெளிநாடுகளில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் விருதுகளையும் பட்டங்களையும் வாங்கினான்.
2015-ல் ஐந்தாம் வகுப்பு முடிச்சதுமே, 'எனக்கு ஸ்கூல் போக விருப்பமில்லை. தொடர்ந்து நிறைய மொழிகளைக் கத்துக்கிட்டு, லிங்விஸ்டிக்ஸ் பேராசிரியர் ஆகணும்'னு சொன்னான்.
இஸ்ரேல் நாட்டில் இருக்கும் ஒரு மொழி கற்பிக்கும் பாடசாலையில் படிக்க விண்ணப்பிச்சோம். அவங்களின் ஹிப்ரூ (Hebrew) மொழியை அக்ரம் ஓரளவுக்குத் தெரிஞ்சு வெச்சிருந்ததால், அங்கே படிக்க சீட் கிடைச்சுது.
பிறகு, மத்திய அரசின் 'நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்' மூலமாக இந்திய சி.பி.எஸ்.சி சிலபஸில் இப்போ ஏழாவது படிக்கிறான்" என்கிற மொழிப்பிரியன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கே நிரந்தரமாகக் குடியேறியிருக்கிறார்.
இப்போது, மொழிப்பிரியனும் மஹமூத் அக்ரமும், ஆன்லைன் வாயிலாக மொழிப் பயிற்சி வகுப்புகளை எடுக்கின்றனர். பள்ளிகளுக்குச் சென்று மொழிப் பயிற்சி குறித்து விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
புதிதாக ஒரு மொழியைக் கற்க எளிய வழிமுறை என்ன?
ஒரு வயசுக் குழந்தை, தன் பெற்றோர் பேசுறதை கூர்ந்து கவனிச்சு அப்படியே திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கும். படிப்படியாக தன்னைச் சுற்றி இருக்கிறவங்க பேசறதைக் கவனிச்சு அந்த வார்த்தைகளை மனசுல பதிச்சுக்கும். பிறகு, மத்தவங்க கேள்விக்குப் பதில் சொல்ற அளவுக்கு முன்னேறிடும்.
மெச்சூரிட்டி வந்ததும் கிராமர்படி பேசும். புதிய மொழியைக் கற்கவும் இதுவே அடிப்படை. எந்த மொழியாக இருந்தாலும் தொடர்ந்து எழுத்து மற்றும் பேச்சு வழியே பயன்படுத்திட்டே இருந்தால்தான் மறக்காது.
தொடர்ந்து பல மொழிகளைக் கற்கும் அக்ரமின் அதீத ஆர்வம், எப்போதாவது உங்களுக்கு அச்சத்தை உண்டாக்கியிருக்கா?
பையனின் 8 வயசு வரைக்கும் அந்தப் பயம் எங்களுக்கு இருந்துச்சு. அப்புறம்தான் அவனின் ஐ.க்யூ லெவல் 160 எனத் தெரிஞ்சு, இது பயப்படும் விஷயமில்லேனு பெருமைப்பட்டோம். ஐ.க்யூ லெவலைத் தக்கவெச்சுக்க ஆரோக்கியமான சிறுதானிய உணவுகளைச் சாப்பிடுறது, கணிதப் பயிற்சிகளைக் கொடுக்கிறோம்.
ஞாபகத்திறன், கிரியேட்டிவிட்டி, புரிந்து கொள்ளுதல், யோசித்தல் போன்ற திறன்கள் அக்ரமிடம் அதிகமாக இருக்கு. அதுக்காக, எந்த நேரமும் படிப்பு, பிராக்டீஸ்னே இருக்கிறதில்லை. சில மணி நேரத்திலேயே நல்லா புரிஞ்சுப் படிச்சுடுவான் என்கிறார் மொழிப்பிரியன்.

சிறுவன் அக்ரம் "சின்ன வயசுல அப்பா கணனியில் டைப் பண்றதைப் பார்த்ததும், பொண்ட் மாற்றி பல மொழிகளை டைப் பண்ண முடியும்னு தெரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து ஆன்லைனில் பல மொழிப் பேசும் மக்களின் வீடியோக்களைப் பார்த்தேன். அந்த மொழிகளைக் கத்துகிட்டா, அவங்க பேசுறதைப் புரிஞ்சுக்கலாமேனு கத்துக்க ஆரம்பிச்சேன்" எனப் புன்னகையுடன் பன்மொழி ஆர்வம் குறித்துப் பேசுகிறார் மஹமூத் அக்ரம்.
பாடசாலை போறதை ஏன் நிறுத்திட்டீங்க?
தொடர்ந்து பாடசாலை போய்கிட்டே, நிறைய மொழிகளைக் கத்துக்க நேரம் கிடைக்கறதில்லை. அதனால், பாடசாலை போறதை நிறுத்திட்டேன். ஆனால், கரஸ்ல படிச்சுட்டு தான் இருக்கேன். சில சமயம் பாடசாலை நண்பர்களை விட்டுப் பிரிகின்ற கவலை வரும். பக்கத்து வீட்டு நண்பர் மற்றும் தம்பி, தங்கையோடு தினமும் விளையாடுவேன்.
பல நூறு மொழிகளைக் கத்துக்கும்போது மறதி பிரச்சினை வரலையா?
கத்துகிட்ட 400 மொழிகளிலும் டைப் பண்ணுவேன்; படிச்சு எழுதுவேன். இதில், 46 மொழிகளை முழுக்க பேசவும், எழுதவும், படிக்கவும் தெரியும். கற்கும் மொழிகளை டச் விட்டுடாமல் பிராக்டீஸ் பண்றதால், படிச்சது நினைவில் நிற்கும். தினமும் காலையில் 5 - 8 மணி வரை லாங்குவேஜ் கற்க ஒதுக்குவேன். அப்புறம், கரஸ்ல படிப்புக்கான ஆன்லைன் வகுப்பு. அப்போ என் சந்தேகங்களை டீச்சர்ஸ்கிட்டே கேட்டுப் புரிஞ்சுப்பேன்.
உங்க எதிர்கால லட்சியம் என்ன?
என் குழந்தைப் பருவத்திலேயே திருவள்ளுவர் காலத்து தமிழ் - பிராமி எழுத்துகளைச் சொல்லிக்கொடுத்த பிறகுதான் தற்போது புழக்கத்தில் இருக்கும் தமிழை அப்பா சொல்லிக்கொடுத்தார். அதனால், சங்க இலக்கியங்கள்மீது எனக்கு ஆர்வம் இருக்கு.
நம் சங்க இலக்கிய மொழியை வேற மொழிக்கு டிரான்ஸ்லேட் பண்ற முயற்சியில் கவனம் செலுத்துறேன். இதனால், நம் தமிழ் மொழியின் சிறப்பை பிற மொழிக்காரங்களுக்குப் புரிய வைக்க முடியும். எதிர்காலத்துல லிங்விஸ்டிக்ஸ் பேராசிரியர் ஆகணும்.
நம் தாய்மொழியைத் தவிர்த்து, ஆங்கிலம், இந்தி, உருது, அரபி, ஸ்பானீஸ், பிரெஞ்சு, சைனீஸ் என ஏழு மொழிகளைக் கத்துக்கிட்டா உலகின் எந்த மூலைக்கும் போய் பிழைச்சுக்கலாம் என்கிறார் இந்த 400 மொழி வித்தகர்.
- Vikatan

No comments:

Post a Comment