Tuesday, August 15, 2017

வேடனின் வில்லும் - நரியின் ஆசையும்!

அடர்ந்த காடு ஒன்றிலே ஒரு நரி இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. அதன் சக்தியைக் கொண்டு வேட்டையாடி உண்ணக் கூடிய உணவு எதுவும் நீண்ட நேரமாக அதற்குக் கிடைக்கவில்லை. பசியோடு அங்கும் இங்கும் அலைந்த நரி நடுக் காட்டிலே ஒரு அற்புதக் காட்சியைக் கண்டது.மிகப்பெரிய யானை ஒன்றை அம்பு எய்து கொல்வதற்கு ஒரு வேடன் மறைந்து இருந்து தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தான். ஆனால் அவன் உயரத்துக்காக ஏறி இருந்த இடம் ஒரு பாம்புப் புற்று. புற்றிலே இருந்த நாக பாம்பு கோபத்தோடு வெளியே வந்து வேடனைக் கடிக்கத் தயாராகின்றது.
வேடனை யானை கவனிக்காதது போல பாம்பையும் வேடன் கவனிக்கவில்லை! என்ன நடக்கப் போகின்றது என்ற ஆவலோடு நரி இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றது.
திடீரென்று வேடனின் வில்லில் இருந்து புறப்பட்ட கூரிய அம்பு யானையின் நெற்றியைத் துளைக்கின்றது. பெருத்த ஓலத்துடன் யானை விழுந்து மடிகின்றது. யானை விழுந்து தன் புற்று அதிர்ந்த அடுத்த கணமே பயம் அதிகமாக நாகமும் வேடனின் காலில் கடித்து விடுகின்றது.
கீழே குனிந்து பார்த்தான் வேடன். கொடிய பாம்பு கடித்து விட்டது. ஆத்திரத்தோடு தன் கூரிய வாளை எடுத்து பாம்பை வெட்டிக் கொன்றான். ஆனால் பாம்பின் விடம் வேடனையும் கொன்று விட்டது.
இப்போது நரியின் முன்னால் மூன்று இரைகள்;. வாழ்க்கையில் தன்னால் வேட்டையாடிக் கொல்ல முடியாத ஒரு யானை. காட்டிலே எந்த மிருகத்துக்கும்; சாதாரணமாக கிடைக்காத மனித உடல்! மற்றது ஒரு பாம்பு! இந்த மூன்றும் எனக்கா? என்று நினைக்கவே நரிக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை!
துள்ளிக் குதித்தது நரி! மறுகணமே கவலை அதனை ஆட்கொண்டது. இவ்வளவு உணவையும் நான் எப்படி யாரும் எடுத்துவிடாதபடி பாதுகாத்து உண்டு முடிக்கப் போகின்றேன் என்ற துக்கம் நரிக்கு வந்தது. யாராவது பங்குக்கு வந்துவிட்டால் எப்படிக் காப்பாற்றிக் கொள்வேன் என்று வருந்தியது நரி!
நரி ஒரு கணக்குப் போட்டது! இனி நான் இரைதேடி எங்கும் அலையத் தேவையில்லை! இந் யானையை ஒரு மாதம் வைத்துச் சாப்பிடலாம்! வேடனுடைய உடல் ஆறு நாட்களுக்குப் போதும்! இந்தப் பாம்பும் மூன்று நாட்கள் உண்ணப் போதுமானதாக இருக்கின்றதே!
சரி! இவை எல்லாம் இருக்கட்டும். இப்போது தொடக் கூடாது! இன்னும் ஒரு உணவு இருக்கின்றது. அது வேடன் கையில் இருந்த வில்லு. அந்த வில் வளைக்கப்பட்டு ஏதோ ஒரு மிருகத்தின் தோலினால் செய்த நாரினாலே தானே கட்டப்பட்டு இருக்கின்றது. இது தெரியாதவனா நான்? அதை ஏன் வீணாக்க வேண்டும்? தோலும் சுவையானது தானே?
இப்போது மாலை ஆகி விட்டது. இன்றைக்கு அந்தத் தோலைச் சாப்பிட்டு முடிப்போம் என்று நினைத்த நரி இறந்து கிடந்த வேடனின் கையில் இருந்த வில்லை வாயினால் கவ்வி இழுத்து எடுத்து அதன் தோல் நரம்பைக் கடித்தது. மறுகணமே வளைக்கப்பட்டிருந்த மூங்கில் வில் தோல் அறுந்து நிமிர்ந்து நேராகிக் கொண்டது.
நேராகிக் கொண்ட வில் நிமிர்ந்த வேகத்தில் நரியின் முகத்திலும் அடித்து வாயையும் கிழித்து தன் கூரான முனையினால் நரியின் தொண்டையையும் துளைத்தது. உதிரம் பெருக்கெடுக்க நரி நிலத்தில் விழுந்து கிடந்து அழுது துடித்தது. அதனால் வலி பொறுக்க முடியவில்லை! சற்று நேரத்தில் நரியின் உயிரும் பிரிந்தது!
இந்தக் கதை விவேக சிந்தாமணி என்ற நீதி நூலிலே காணப்படுகின்றது. பேராசையால் ஏற்படும் விளைவை மனிதர்களை உதாரணம் காட்டிக் காயப்படுத்தாமல் விலங்குகளையும் வேடனையும் வில்லையும் வைத்துக் கதை பின்னி படிப்போர் மனங்களிலே ஆழப்பதியுமாறு செய்துவிட்டுப் போனார்கள் எம் முன்னோர்கள்.
கரி ஒரு திங்கள் ஆறு கானவன் மூன்றுநாளும்
இரிதலைப் புற்றில் நாகம் இன்று உணும் இரை ஈதென்று
விரிதலை வேடன் கையில் வில்குதை நரம்பைக் கவ்வி
நரியனார் பட்ட பாடு நாளையே படுவர் மாதோ.
( விவேக சிந்தாமணி 92 வது பாடல் )
(5.4.2014) வெளியான தமிழர் தகவல் சஞ்சிகையில் இடம்பெற்ற எனது கட்டுரை இது!

Rasiah Gnana

No comments:

Post a Comment