Sunday, August 20, 2017

விலைமாது என பட்டம் கட்டிய குடும்பம்: அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்

வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாகச் சென்று உறவினர்களால் அவமானப்படுத்தி தூக்கி ஏறியப்பட்ட இலங்கை பெண் ஒருவரைப் பற்றி சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது சாதனைப் பெண்ணாக வாழ்ந்து வரும் Beatrice Fernando என்ற இலங்கைப் பெண் தொடர்பிலேயே இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பெண் தன் வாழ்க்கை அனுபவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் 12 சகோதரர்களுடன் 13ஆவதாக பிறந்த Beatrice Fernando (பெர்னாண்டோ) தொழில் வாய்ப்பைத் தேடி லெபனானுக்கு பணிப்பெண்ணாக சென்றார்.
லெபனானில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் பெர்னாண்டோவின் கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டு அவரை ஒரு அடுக்கு மாடிக் கட்டடத் தொகுதியிலுள்ள செல்வந்த பெண்ணுக்கு பெர்னாண்டோவை விற்றுள்ளார்கள்.
அந்த வீட்டில் அதிக வேலை செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு பெர்னாண்டோ தள்ளப்பட்டார்.
மேலும், வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள முடியாத வகையில், பெர்னாண்டோ அந்த பெண் செல்வந்தரிடம் அடிமை வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இவ்வாறு அடிமை வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் விதி பெர்னாண்டோவின் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது.
தனது 8 வயது மகனின் தங்க கைச்சங்கிலியை பெர்னாண்டோ திருடி விட்டார் என அந்த வீட்டின் உரிமையாளரான செல்வந்த பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.
பின்னர் பெர்னாண்டோவை அவர்கள் கடுமையாக தாக்கியும் உள்ளார்கள்.
இது தொடர்பில் பெர்னாண்டோ பின்வருமாறு தெரிவித்தார்.
“நான் விழித்து பார்த்த போது எனது கழுத்து பகுதியில் இரத்தம் வடிந்திருந்தது. என் உடம்பு உடைந்து போய்விட்டதோ என்பது போல் உணர்ந்தேன். படுக்கைக்கு தவழ்ந்து சென்றேன். என் நிலை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். வீட்டிற்குச் சென்று விடலாம் என எண்ணினேன்.
ஆனால் வெளியே தப்பிச் செல்ல எனக்கு வழியே இல்லை. அடுத்தமுறை விழித்து பார்க்க மாட்டேன் இறந்து விடுவேன் என எண்ணினேன்.
இருப்பினும் “வேறு ஒருவருடன் மகள் ஓடிவிட்டாள்” என எனது அம்மா நினைத்து விடுவாரோ என அஞ்சி, கடவுள் இருக்கிறார் என எண்ணிக்கொண்டு பொறுமையாக அடிமை வழ்வை அனுபவிப்போம் என நினைத்தேன்.
பின்னர் தாங்க முடியாத கொடுமைகளால் இங்கிருந்து தப்பிச் செல்லலாம் என முயற்சி செய்தேன். கடவுளை பிரார்த்தித்தேன். என் வாழ்க்கைக்கு உதவி செய்யுங்கள் என கடவுளை மன்றாடினேன்.
இந்த நிலையில் மூன்றாவது மாடியில் பெல்கனியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது என் தாய் மொழியில் ஒரு பெண் என்னை கீழிருந்து அழைப்பது போல் உணர்ந்தேன். உடனே எட்டிப்பார்த்தேன், அப்போது “ஏன் இங்கு அடிமை வாழ்க்கை வாழ்ந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய்” என அந்தப் பெண் கேட்டார்.
இதன்போது கீழே குதித்து விடலாமா? இறந்து விடுவேனா? கடவுள் இருக்கிறார் நடப்பவை நடக்கட்டும் என எண்ணி கீழே குதித்து விட்டேன்” என பெர்னாண்டோ கூறினார்.
கீழே விழுந்து கிடந்த பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 21 நாட்களின் பின் கண் விழித்தார். 21 நாட்கள் அவர் கோமா நிலையில் இருந்ததாக குறிப்பிட்டார்.
இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்த எவரும் உயிர் பிழைத்ததில்லை. ஆனால் நீங்கள் உயிர் பிழைத்தது ஆச்சரியம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த பெர்னாண்டோ “ஆம் எனக்கு இது மறுபிறவிதான் நான் புதிய வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க கடவுள் கொடுத்த புதிய வாழ்வே இது” என பெர்னாண்டோ கூறினார்.
இருப்பினும் பெர்னாண்டோவுக்கு பக்கவாதம் ஏற்பட்டது. மூன்று மாத சிகிச்சையின் பின்னர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரின் உதவியுடன் நாடு திரும்ப ஏற்பாடுகள்
செய்யப்பட்டன. அந்த நிலையில் அவர் ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.
அதன்போது தன் நிலை குறித்து குடும்பத்தினருக்கு கடிதம் ஒன்றை அவர் அனுப்பி வைத்தார். அதன் பின் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
வீடு திரும்பிய பெர்னாண்டொவின் நிலை குறித்து, அவரது உறிவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். எவ்வாறாயினும் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டமையினால் தான் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என பல வதந்திகள் பரப்பப்பட்டன.
ஆனால் பெர்னாண்டோ தன் கஷ்ட வாழ்க்கை தொடர்பில் உள்ளூர் ஊடகங்களில் தெரிவிப்போம் என குறிப்பிட்டார்.
இதுவே அவருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியது. உடன் பிறந்த 12 சகோதரர்களும் பெர்னாண்டோவை விபச்சாரி எனக் கூறி குடும்பத்தில் இருந்தே அவரை தூக்கி எறிந்தனர்.
பின்னர் பெர்னாண்டோ நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின் அவர் ஒரு தொழிலை பெற்றார். பின் ஒருவருடன் காதல் வயப்பட்டார்.
பெர்னாண்டொ தன் உறவினர்கள் பற்றியும் தன் வாழ்க்கை அனுபவங்கள் பற்றியும் குறித்த நபரிடம் பகிர்ந்து கொண்டார். அவரும் பெர்னாண்டோவுக்கு ஆதரவாக இருந்தார்.
இருவரும் 1989ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று Saugus என்ற நகரில் வாழ்ந்து வருகின்றனர்.
அங்கு சென்ற பெர்னாண்டோ தன் வாழ்க்கை அனுபவம் தொடர்பில் புத்தகம் ஒன்றை எழுதி அமெரிக்காவிலுள்ள கல்லூரிகளிலும் தன் அனுபவங்கள் பற்றி உரையாற்றியுள்ளார். ஊடகங்களுக்கும் பல நேர்காணல்களை கொடுத்துள்ளார்.
அனுபவத்தால் என்னை பலப்படுத்திக் கொண்டேன். மனதில் எனக்கு தைரியம் இருந்ததால் எதையும் சமாளிக்க, சாதிக்க முடியும் எண்ணி இந்த நிலையை அடைந்தேன்.
நாம் எடுக்கும் முடிவில் திடமாக இருந்தால் எதனையும் சமாளித்து சாதனை புரிய முடியும் என பெர்னாண்டோ அனைவருக்கும் எடுத்துக்காட்டாக தன் வாழ்க்கை பாடத்தை தெளிவுபடுத்தியுள்ளார் என குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
http://news.lankasri.com/women/03/131068?ref=rightsidebar-manithan

No comments:

Post a Comment