Friday, July 21, 2017

கேண்டீனில் பாத்திரம் கழுவியவர் இன்று பல ஹொட்டல்களுக்கு அதிபர்: சாதனை தொழிலதிபரின் கதை

சாகர் ரத்னா சங்கிலி உணவகங்கள் இன்று 200 கோடிகள் வரை வர்த்தகம் செய்கிறது. இதன் நிறுவனர் பெயர் ஜெயராம் பானன் (64).
ஜெயராம் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள உடுப்பியில் பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜெயராமின் தந்தை ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
பள்ளியில் ஜெயராம் படித்து வந்த நிலையில், தனது 13ஆவது வயதில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்தார்.
பிறகு வீட்டிலிருந்து வெளியேற முடிவு செய்து தனது தந்தையின் பர்சில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மும்பைக்கு சென்றார்.
அங்குள்ள ஒரு கேண்டீனில் ஜெயராமுக்கு மாதம் 18 ரூபாய் சம்பளத்தில் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது.
தனது பணியை திறமையாக செய்ததால் ஜெயராம் சர்வராக உயர்ந்தார். பின்னர் மேலாளராக அவர் உயர்ந்தார்.
அந்த கேண்டீனில் 8 ஆண்டுகள் பணிபுரிந்த ஜெயராம் பிறகு சொந்தமாக தொழில் தொடங்க முடிவெடுத்தார்.
மும்பையில் அதிகளவில் உணவகங்கள் இருந்ததால் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் 2000 ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் கேண்டீன் நடத்தும் உரிமத்தை ஜெயராம் பெற்றார்.
அங்கு மூன்று சமையல்காரர்களுடன் தரமான உணவை சமைத்து ஜெயராம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க தொழில் சூடு பிடித்தது.
பிறகு தொழிலில் கிடைத்த லாபமான 5000 ரூபாய்களை வைத்து கடந்த 1986ல் உணவகத்தை ஜெயராம் தொடங்கினார்.
இதற்கு சாகர் என்று பெயரிட்டு இட்லி, தோசை, சாம்பார் போன்ற தென்னிந்திய உணவுகளை வழங்கினார்.
தொழில் நன்றாக வளர்ந்தது. பின்னர் 1991ல் ஜெயராம் வுட்லேண்ட்ஸ் என்ற உணவகத்தை விலைக்கு வாங்கினார்.
உணவகத்தின் பெயரை மாற்றி சாகர் ரத்னா என பெயர் சூட்டினார். சாகர் ரத்னா வேகமாக வளர்ந்தது.
இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இவரின் உணவகங்கள் உள்ளது. மேலும், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் உணவகங்கள் உள்ளன.
2000-ம் ஆண்டில் சாகர் ரத்னாவின் வர்த்தகம் 12 கோடி. 2005-ல் அது 25 கோடியாக மாறி, இன்று சாகர் ரத்னா சங்கிலி உணவகங்கள் 200 கோடியில் வர்த்தகம் புரிகின்றன.
http://news.lankasri.com/entrepreneur/03/129116

No comments:

Post a Comment