Wednesday, July 12, 2017

அவுஸ்திரேலியாவில் உலகை வியக்கவைத்த ஈழத்தமிழரின் விசித்திர சாதனை

அவுஸ்திரேலியா நாட்டில் ஈழத்தமிழ் பொறியியலாளர் ஒருவர் படைத்துள்ள சாதனையொன்று அந்த நாட்டில் மிகவும் பேசப்படும் விடயமாக விளங்குவதோடு ஈழத் தமிழரையும் உலகளவில் பெருமைக்குள்ளாக்கியிருக்கிறது.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத் தமிழரான சண் குமார் என்பவரே தனது பொறியியல்துறையில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அவுஸ்திரேலியா நாட்டின் "CREATIVE" எனும் பொறியியலாளர்கள் குழும சஞ்சிகையானது இந்த 2017ம் ஆண்டுக்கான "புதுமுயற்சி மூலம் சாதனை படைத்த பொறியியலாளர்" (The Most Innovative Engineer for 2017) என்ற உயர்ந்த கௌரவத்தை அவருக்கு வழங்கியுள்ளது.
இதற்கென அந்த நாடு முழுவதிலுமிருந்து சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட பொறியிலாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் முப்பது பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த முப்பது பேரில் ஒருவராக ஈழத் தமிழரான சண் குமார் அவர்களுக்கும் இந்த தேசிய விருது கிடைத்திருக்கிறது.
அவரது சாதனை!
அடுக்கு மாடி கட்டடங்களை நிர்மாணிக்கும் பாரம்பரிய முறை அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலரது கடினமான உழைப்பின் மத்தியில் பல வருடங்கள் எடுத்துக் கட்டி முடிக்கப்படும். இது விடயத்தில் சண் குமார் அவர்கள் மேற்கொண்ட புதிய முயற்சி இந்த நிர்மாணிப்பு நடவடிக்கையின் உழைப்பை சரிபாதியாகக் குறைத்து இலகுவான முறையில் அடுக்கு மாடி கட்டடங்களை கட்டியெழுப்புவதில் பெருவெற்றி கண்டிருக்கிறது.
அதாவது, ஒரு அடுக்கு மாடி கட்டிடத் தொகுதியின் ஒவ்வொரு தளத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ள அலுவலகங்கள், வீடுகள், மண்டபங்கள் போன்றவற்றை தேவைக்கேற்றவாறு தரையில் வைத்து சரியான அளவுகளில் தனித்தனியாக கட்டிமுடித்து விட்டு, குறிப்பிட்ட அடுக்கு மாடி தொகுதியில் அவை எங்கெங்கு அமைய வேண்டும் என்ற திட்டத்தின்படி கிறேன் மூலம் தூக்கிச் சென்று அவற்றை சரியான இடங்களில் இறக்கி வைத்து பொருத்துவதன் மூலம் தொடர்ந்து கட்டிடத்தை நிர்மாணித்துக்கொண்டு செல்வது. இது பொறியியல் துறையில் Prefabricated construction method என அழைக்கப்படுகின்றது.
இதே போன்றதொரு மாதிரியில் அமெரிக்காவில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தாலும் அதற்கு நீண்ட வருடங்கள் எடுத்திருந்தன.
சண் குமார் அவர்களின் திட்டமிடலில் கட்டப்பட்ட கட்டிடம் மெல்பேர்ன் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. La Trobe tower என அழைக்கப்படும் இதுதான் அவுஸ்திரேலியாவிலேயே "முன் தயார் செய்யப்பட்ட கட்டிட நிர்மாணிப்பு நிபுணத்துவம்" மூலம் கட்டப்பட்ட அதி உயர்ந்த கட்டிடம் ஆகும்.
நாற்பத்தைந்து மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தை வெறும் பத்தொன்பது மாதங்களில் கட்டி முடித்திருக்கிறார்கள். இந்த கட்டத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு முதலில் முற்றாக மறுப்பு தெரிவித்த மெல்பேர்ன் நகர கவுன்ஸில், இந்த திட்டம் நகரின் மையத்தில் பெரும் சத்தத்தை ஏற்படுத்தப் போகிறது, போக்குவரத்து நெரிசலை உண்டாக்கப் போகிறது என்று காரணம் கூறி திருப்பி அனுப்பிவிட்டது.
ஆனாலும் சண் குமார் அவர்களின் குழு விக்டோரிய அரசாங்கத்திடம் மேன்முறையீடு செய்து பெற்றுக்கொண்ட அனுமதியின்படி இந்தக் கட்டிடம் கனகச்சிதமாக கட்டிமுடிக்கப்பட்டது.
பின்னர் இதனை மேற்பார்வையிட வந்திருந்த மெல்பேர்ன் நகர கவுன்ஸில் அதிகாரிகள் மிகுந்த ஆச்சரியமடைந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/property/01/151747

No comments:

Post a Comment