Friday, July 21, 2017

நாடற்றவர்கள் பிரித்தானிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாமா? பிரிட்டனில் வெளியாகிய முக்கிய தீர்ப்பு

ஒரு குழந்தை அல்லது இளைஞர், எந்தவொரு நாட்டின் தேசிய அடையாளத்தையும் கொண்டிருக்காமல் நாடற்றவராக (Stateless) இருப்பவர் எனின், அவர்களுக்கு பிரித்தானிய பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கலாமா? என்ற குழப்பம் இருந்து வருகின்றது.
இதற்கு விடையளிக்கும் வகையில் அண்மையில் MK (A CHILD BY HER LITIGATION FRIENDCAE) V SSHD [2017] EWHC 1365 (ADMIN) எனும் வழக்கு இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பலராலும் உற்று நோக்கப்படுகின்றது.
பின்வரும் இணைப்பில் வழக்கின் முழுவிபரங்களையும் பார்க்கலாம்.
http://www.bailii.org/ew/cases/EWHC/Admin/2017/1365.html
இந்த வழக்கு ஐக்கிய இராச்சியத்தில் 14 நவம்பர் 2010ல் பிறந்த குழந்தையைப் பற்றியது. குழந்தையின் இரண்டு பெற்றோரும் இந்திய பிரஜைகள் (Indian Nationals).
குழந்தை 08 மார்ச் 2016 அன்று பிரித்தானிய பிரஜையாகப் பதிவதற்குரிய விண்ணப்பத்தை பந்தி 3 of Schedule 2 of British Nationality Act 1981 கீழ் மேற்கொண்டது.
மேற்குறிப்பிட்ட இந்த பிரிவின் கீழ், ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த ஒரு குழந்தை அல்லது ஒரு இளைஞர் பின்வரும் விடயங்களை திருப்பதிப்படுத்தும் பட்சத்தில் பிரித்தானியப் பிரஜையாகப் பதிவு செய்ய முடியும்
குழந்தை நாடற்றவராக இருக்க வேண்டும் மற்றும் எப்பொழுதுமே நாடற்றவராக இருந்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் மேற்கொள்ளும் பொழுது 22 வயதுக்கு உட்பட்டவராக இருந்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் மேற்கொள்ளும் பொழுது ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு மேல் வசித்திருக்க வேண்டும்.
http://www.legislation.gov.uk/ukpga/1981/61/schedule/2
இதனடிப்படையில் குழந்தை விண்ணப்பத்தை மேற்கொண்ட பொழுது, உள்விவகார அமைச்சின் செயலாளர் அந்த விண்ணப்பத்தை மறுத்திருந்தார்.
இந்த மறுப்புக்கு எதிராக Judicial Review ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அந்த வழக்கு பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதை விசாரித்த நீதிபதி பின்வரும் விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார்.
“இந்த மாதிரியான விண்ணப்பங்களுக்கு ஒருவர் அவருடைய தேசியத்தைக் (Nationality) கொண்டிருக்காவிடில் அவர் நாடற்றவராக கருதப்படவேண்டும்.
அவர் தேசியத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கான அவருடைய திறமை இந்த விடயத்தில் பொருத்தமற்றது என தீர்ப்பில் தெரிவித்திருந்தார். (பத்தி 36)
அத்துடன், குழந்தை விண்ணப்பம் மேற்கொண்டபொழுது ஒரு நாடற்றவர் மற்றும் அவருக்கு இந்தியர் என்ற தேசியம் கிடையாது. ஆகயால் அவர் பிரித்தானியப் பிரஜையாக பதிவு செய்வதற்கு தகுதியுடையவர் என்று நீதிபதி இறுதியில் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு ஒரு முக்கியம் வாய்ந்ததாகும். குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் பிறந்த நாடற்ற குழந்தைகள் இந்த மாதிரியான சூழ்நிலைகளில் விண்ணப்பம் மேற்கொள்ளும் பொழுது இந்த வழக்கை கருத்திற்கொள்வது சிறந்தது.
இந்த வழக்கு இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெற்றோர்களுடைய குழந்தைகள், விடயத்தில் எவ்வாறு இருக்கப் போகின்றது? என்பதுதான் மிக முக்கியமான கேள்வி.
இலங்கை குடியுரிமைச் சட்டத்தின் பிரகாரம், குழந்தை இலங்கைக்கு வெளியில் பிறந்தால், அவர்களுடைய பெற்றோர் ஒருவர் இலங்கை பிரஜையாக இருக்கும் பட்சத்தில்,
ஒருவருடத்திற்குள் குழந்தையினுடைய தேசியத்தைப் பதிவு செய்வதன் மூலம் தேசியத்தை உறுதி செய்து கொள்ள முடியும்.
ஒருவருடத்திற்கு மேற்பட்டால், குற்றப்பணம் அறவிடப்பட்டு, பின்னர் பதிவினை மேற்கொள்ளலாம். இவ்வாறு பதிவதற்குரிய விண்ணப்பங்களை மேற்கொள்வதற்கு பல ஆவணங்களை இலங்கை அரசு எதிர்பார்க்கின்றது.
பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகத்தினுடைய இணயத்தளத்தில், தேவையான ஆவணங்களைப் பட்டியலிட்டுள்ளார்கள். பின்வரும் இந்த இணைப்பில் அந்த ஆவணங்களுடைய முழு விபரங்களைப் பார்வையிடலாம்.
http://www.srilankahighcommission.co.uk/index.php?option=com_content&view=article&id=32&Itemid=56
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம், குழந்தை பிறந்த பொழுது பெற்றோர்கள் இருவர்களிடமிருந்த கடவுச்சீட்டுக்கள் (Passports) சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அது Highlight பண்ணப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பல இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பெற்றோர்கள் விசா இல்லாமல் கடவுச்சீட்டுக்கள் இல்லாமல் வாழ்கின்றார்கள். அதிலும் குறிப்பாக, இலங்கையில் இருந்து வந்து அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டு கடவுச்சீட்டு இல்லாமல் பல பெற்றோர்கள் வசிக்கின்றார்கள்.
இவ்வாரு இருக்கையில், அவர்களுக்கு இங்கு பிறந்த குழந்தைகளின் தேசியத்தைப் பதிவு செய்வதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம். அவர்கள் இலங்கை தேசியத்தை உறுதிப்படுத்துவதற்கு விண்ணப்பித்து பெற்றோர்களுக்கு கடவுச்சீட்டு இல்லாத காரணத்தால் அவர்களுடைய குழந்தைகளின் பதிவுரிமை மறுக்கப்பட்டிருக்கலாம்.
அல்லது பெற்றோர் தஞ்சம் கேட்ட காரணத்தால் இலங்கை தூதரகத்திற்குச் சென்று பதிவு செய்வதற்கு தயங்கி பதியாமலேயே இருக்கலாம்.
இவ்வாறான குழந்தைகள் தொடர்ச்சியாக 5 வருடங்கள் வசித்த பின்னர் பிரித்தானியப் பிரஜையாக பதிவதற்கு விண்ணப்பிக்கலாமா என்ற கேள்விக்கு, மேற்குறிப்பிட்ட இந்த வழக்கு மிகவும் சாதகமான ஒரு பதிலையே கொடுக்கின்றது என்றே தோண்றுகின்றது.
அத்துடன், அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட ஒருவருடைய குழந்தை விடயத்திலும், இது ஒரு முக்கிய விடயமாகவே பார்க்கப்பட வேண்டும். அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டவர் பொதுவில் இலங்கைக் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க மாட்டார்.
அவர்கள் பொதுவில் குழந்தைகளை தங்களுடைய விசாவின் கீழ் தங்கி வாழ்பவராக உள்விவகாரத் திணைக்களத்தில் பதிவு செய்வார்கள்.
இந்த மேற்குறிப்பிட்ட வழக்கின் பின்னணியில், அவர்கள் பிள்ளைகளுக்கு 5 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானிய பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கக் கூடியதாக இருக்குமா என்ற கேள்வி எழுகின்றது.
ஏனெனில், அவ்வாறான பெற்றோர்கள் முதலில் இலங்கைத் தூதரத்திற்கு செல்வது கேள்விக்குறியான விடயம்.
இரண்டாவது, அவர்களுக்கு கடவுச்சீட்டுக்கள் இருக்காது. அதற்கும் மேலாக, பாதுகாப்புத் தேடி தஞ்சம் கேட்ட நாட்டினுடைய தூதரகத்திற்கு சென்று அவர்களுடைய விபரங்களை கொடுப்பது சாத்தியமற்ற விடயம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவர்களுடைய குழந்தைகள் நாடற்றவர்களாக இருக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்களா? என்று நோக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு இந்த நாட்டில் இருப்பதற்கு விசா இருந்தாலும், அவர்கள் இலங்கைத் தூதரகத்தில் பதியாவிட்டால் நாடற்றவர்களாக கருதப்படலாமா? அத்துடன் 5 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானிய பிரஜாவுரிமைக்கு விண்ணபிக்கலாமா என்ற கேள்வியும் எழுகின்றது.
இவ்வாறான கேள்விகளுக்கு பதில்கள் தெளிவில்லாமல் உள்ளது. ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சூழ்நிலைகளை வைத்து, தகுந்த சட்ட ஆலோசனை மூலம் நாங்கள் இந்த வினாக்களுக்கு பதில் காணலாம்.
அல்லது, உள்விவகார அமைச்சுக்கு அனைத்தையும் விளக்கி விண்ணப்பங்களை மேற்கொள்வதன் மூலமும் அதற்குரிய பதில்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கே வரமுடியும்.
இருப்பினும், இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதை ஒருவர் நோக்க வேண்டும். குறிப்பாக, எல்லா நாட்டு உயர்ஸ்தானிகராலயமும் இவ்வாறு பதிவு செய்வதை மறுக்கும் பொழுது அதனை உறுதிப்படுத்தி ஆவணங்கள் தருவார்கள் என்று உறுதியாக நம்ப முடியாது.
அவ்வாறு ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் உள்விவகார அமைச்சு குறிப்பிட்ட நாட்டு தூதரகத்திலிருந்து உறுதிப்பாட்டை பெற்றுத் தாருங்கள் என்று விண்ணப்பதாரர்களை கோரலாம்.
அவ்வாறு கோரும்பொழுது அதனை எந்தவகையில் உறுதிசெய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது.
இதற்கான பதில்களை நடைமுறையில் இவ்வாறான விண்ணப்பங்களை மேற்கொள்வதன் மூலமே கண்டுகொள்ள முடியும்.
இந்த வழக்கு அடிப்படையில் ஒருவர் விண்ணப்பங்களை மேற்கொள்ளும் பொழுது உள்விவகாரத் திணைக்களம் அவர்களுக்கு முன்னால் உள்ள ஆதாரங்களை வைத்தே முடிவெடுக்கும் என்பது யதார்த்த உண்மை.
முடிவுகள் சாதகமாகவும் அமையலாம். முடிவுகள் நேர்மறையானதாக இருந்தால், நீங்கள் Judicial Review செய்து மீள் பரிசீலனை செய்யக் கோரலாம்.
அது நீதிபதிக்கு முன்னால் செல்லும் பொழுது, நீதிமன்றமும் தனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களை பார்வையிட்டு அத்துடன், இலங்கைக் குடியுரிமைச் சட்ட நிபுணர்களுடைய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அவற்றையும் ஆராய்ந்தே முடிவெடுக்கும்.
அத்துடன், இவ்வாறான ஒரு வழக்கின் பின்னர், உள்விவகாரத் திணைக்களம் எவ்வாறான ஒரு கொள்கை மாற்றத்தை அறிமுகப்படுத்துகின்றார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அத்துடன், பிரித்தானிய பிரஜாவுரிமை சட்டத்தில் பிரித்தானிய அரசாங்கம் ஏதாவது மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கலாம் என்பதே சட்டவாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
தகவல் Jay Visva Solicitors.
http://www.tamilwin.com/uk/01/152716

No comments:

Post a Comment