Monday, July 10, 2017

ஒருவேளை உணவுக்கு திண்டாடியவர் இன்று சாதனை தொழிலதிபர்! யார் தெரியுமா?? (படங்கள் இணைப்பு)

இந்தியாவின் கொல்கத்தாவில் இருக்கும் முக்தி குழுமம் இன்று விருந்தோம்பல், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறையில் கலக்கி வருகிறது.

முக்தி குழுமத்தின் தலைவர் பெயர் ராஜ்குமார் குப்தா (70) ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குப்தா சிறுவயதில் ஒருவேளை சாப்பாட்டுக்கே சிரமப்பட்டுள்ளார்.

குப்தாவின் தந்தை செய்து வந்த தொழில் சோபிக்காமல் போனது. இதையடுத்து கடந்த 1960களில் பிழைப்பு தேடி குப்தா பஞ்சாபிலிருந்து கொல்கத்தா வந்தார்.

அங்கு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேற்பார்வையாளராக மாதம் ரூபாய் 150 சம்பளத்தில் பத்து வருடங்கள் வேலை பார்த்தார் குப்தா.

பின்னர், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சில பொருட்களை செய்து தரும் தொழிலை தொடங்க நினைத்து அங்கு தான் செய்து வந்த வேலையை குப்தா ராஜினாமா செய்தார்.

பிறகு, நண்பர்களிடம் 5000 ரூபாய் கடன் வாங்கி 150 சதுர அடியில் ஒரு சிறு அலுவலகத்தை க்ளைவ் சாலையில் குப்தா ஆரம்பித்தார்.

தனது நான்கு ஆண்டுகளின் கடுமையான உழைப்புக்கு பின்னர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரிய ஆர்டர்கள் குப்தாவை தேடி வந்தன.

அப்போது ஒருநாள் தனது வீட்டருகே நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது காலியான இடத்தை குப்தா பார்த்தார்.

நேர்மை, உண்மை, நம்பிக்கை ஆகியவையே என் வெற்றிக்கு காரணம் - ராஜ்குமார் குப்தா அந்த இடத்தை வாங்கி அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்கலாம் என நண்பர்களிடம் குப்தா கூற, அவர்கள் இந்த பகுதியில் அடுக்குமாடி வீடுகளை யாரும் வாங்க மாட்டார்கள் என கூறியுள்ளனர்.

ஆனால், மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தி கொண்டு 1.25 லட்சத்துக்கு அந்த இடத்தை வாங்கி அங்கே ஒரு குடியிருப்பைக் கட்டினார்.

ஆரம்பத்தில் விற்பனை மந்தம் என்றாலும், குப்தா அறிவித்த அதிரடி சலுகைகள் சிலவற்றால் எல்லா குடியிருப்புகளும் விற்று தீர்ந்தன.

அதிலிருந்து ரியல் எஸ்டேட் தொழிலில் வெற்றிகளை குவித்து வரும் குப்தாவுக்கு சொந்தமாக ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல், பல்திரை அரங்கு, பல ரியல் எஸ்டேட் திட்டப்பணிகள் இன்று உள்ளன.

கடந்த 2003ல் பொழுதுபோக்கு துறையில் கால்பதித்த குப்தா முக்திவேர்ல்ட் என்ற பல்திரை அரங்கை, உணவக வசதியுடன் தொடங்கினார்.

அகங்காரம் இல்லாமல் பணிவுடன் உழையுங்கள். தோல்விக்கு அகங்காரமே முதல் காரணம் - ராஜ்குமார் குப்தா இங்கு லண்டன் பாரிஸ் மல்டிப்ளக்ஸ் என்ற அரங்கும் கோல்டுப்ரிக் என்ற பல உணவு வகைகள் கிடைக்கும் உணவகமும் உண்டு.

பல துறையில் இன்று சாதித்து கொண்டிருக்கும் குப்தா தனது கடின உழைப்பால் மிக பெரிய கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.

குப்தா வெற்றிகளை மட்டும் சந்திக்கவில்லை! பல தோல்விகளையும் சந்தித்துள்ளார். 1990களில் விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சி ஏற்பட்டபோது குப்தா தனியார் விமான சேவையைத் தொடங்க முயன்றார்.

ஆனால், அது பல்வேறு காரணங்களால் முடியாமலே போனது. தொண்டு செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட குப்தாவுக்கு ஏழை குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும் என்பதே பெரும் கனவாகும்.

சமூக சேவைக்கு நேரம் செலவிட முடியவில்லை என்ற வருத்தமும் அவருக்கு உண்டு. அவரது ஆர்வத்தை அவரது மகள் நிறைவேற்றுகிறார்.

நகரில் குடிசைப்பகுதிகளில் வாழும் சுமார் 300 குழந்தைகளின் கல்விக்காக தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றும் அவர் நடத்துகிறார்.

ஓய்வு பெறும் வயதை அடைந்தாலும் குப்தா இன்னும் தனது உழைப்பை நிறுத்தவில்லை. அவரது கனவுகள் இன்னும் பெரிதாகவே உள்ளன!

09 Jul 2017
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1499601468&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment