Thursday, June 22, 2017

களமும் காதலும்!

சங்க காலப் புறநானூறு போல இந்தக் கவிதையும் ஒரு கால வாழ்வியலின் முழு வடிவமாக நான் மறைந்த பின்பும் நிலைத்து நிற்கும். எனவே புலி ஆதரவு புலி எதிர்ப்பு இரண்டையும் விலக்கி விட்டு என் தமிழுக்காகவாவது இந்தக் கவிதையை எல்லோரும் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம். இது ஒரு முழுமையான இலக்கியம்.
இரா. சம்பந்தன்
களமும் காதலும்!
போர்முகத்து நிலப்பரப்பு வயலின் ஓரம்
புதுநிலவு சிறுகுடிசை தென்னந் தோப்பு
ஏர்முகத்து மாடுகளும் பசுவும் கன்றும்
எழில்தென்றல் சிறுவண்டின் பாடல் மண்ணில்
வேர்முகத்து மரவள்ளிக் கூட்டம் வேலி
விளைந்திட்ட பயிற்றைகளும் பாவற் காய்கள்
நீர்முகத்து சலசலத்து ஓடும் ஆற்றின்
நெடுங்கரையில் அவனுடனே அவளும் கூட!
வான்நின்று வீழ்ந்தவொரு குண்டின் பாகம்
வைத்திட்ட காயமதோ காலில் வேறு!
மீன்நின்று துள்ளுமிரு விழியாள் கண்ணில்
மெல்லியதோர் சிறுபனிப்பு மறைத்துக் கொண்டாள்
ஏன்நின்று போர்புரிய வேண்டும் இங்கே?
எதிரிகள்தான் அழிந்தாரே நெஞ்சம் கேட்க
வேன்நின்று எரிகின்ற இடத்தைப் பார்த்து
விடுதலைக்கு நாளதிகம் இல்லை என்றாள்!
செங்குருதி கால்வடிந்து புதரில் பாய்ந்து
சிவந்தமணல் புண்மீதும் ஒட்டிக் கொள்ளும்
திங்களொளி வெளிச்சத்தில் காலைப் பார்த்து
திருந்திநடை பயிலவினி முடியா தென்றான்
பொங்கிவரும் சிரிப்போடு அவளைப் பார்த்துப்
போய்விடுநீ என்னுயிரே என்றான் ஐயோ!
உங்களினை இந்தநிலை விடுத்து நானும்
எப்படித்தான் தளம்திரும்பிப் போவேன் என்றாள்!
தேடிவந்து குண்டுமழை பொழியப் போறார்
தீரமுடன் போராடக் காலும் இல்லை!
ஓடிவந்து கைதுசெய்து விட்டால் பின்னர்
ஓன்றுமில்லை வாழ்க்கையிலே சாவே மிஞ்சும்!
நாடிவந்து சுற்றிவளைத் திட்டால் என்ன
நடுவயலில் செய்வீர்கள் வாங்கோ இந்தக்
கூடிவந்து மீன்சிரிக்கும் ஆற்று நீரில்
குதித்துமெல்ல அடுத்தவிடம் போவோம் என்றாள்!
எல்லையிலே எதிரியினை வீழ்த்தா வீரன்
எழுத்துவடி வாகாத மொழியின் தேசம்
கொல்லையிலே மணம்பரப்பாத் துளசி சின்னக்
குழந்தையிடம் பிறக்காத மழலைப் பேச்சு
முல்லையிலே தேன்சுவைக்காத் தேனி தீட்டின்
முனையேனும் பளபளக்காக் கத்தி இரண்டு
கல்லிடுக்கில் வாழ்வமைக்காத் தேரை எல்லாம்
காணுமொரு பயனில்லை கண்ணே போநீ!
வெடிவிழுந்த பனைவடலித் தோப்புக் குள்ளே
வேகவைத்த சோறுகொண்டு அம்மா தேடும்
கொடிவிழுந்த கழுத்தோரம் தடவி ஆமி
கொன்றுவிட்ட அத்தானை அக்கா தேடும்
முடிவிழுந்த தலையோடு ஐயா என்னை
முச்சந்தி ஒழுங்கைவரை வந்து பார்க்கும்
இடிவிழுந்து போனாலும் உங்கள் பிள்ளை
இதயமதைப் பிளக்காது என்றும் சொல்லு!
ஈழநிலம் எங்களுடைய இனிய தேசம்
இங்கவிழும் செல்லெமக்கு இதழில் முத்தம்
ஆழநிலப் பங்கரெங்கள் அன்பு வீடு
அருகிருக்கும் ஆயுதமே மனைவி மக்கள்
வேழநிகர் தலைவனெங்கள் தெய்வம் அன்னான்
வீரவுரை தாமெக்கு வாயில் சோறு
தாழநிலம் வாழுவதா தமிழன் சாதி
தைரியத்தை இழக்காதே போடி என்றான்
கட்டியொரு முத்தமிட்டாள் கன்னி தானும்
காதலனாம் வேங்கையவன் கன்னம் தன்னில்
எட்டியொரு அடிவைத்தாள் எழுந்து போக
எங்கிருந்தோ அவள்நெஞ்சில் குண்டு பாயும்!
பட்டியது திறந்ததுபோல் பகைவர் கூட்டம்
பகைதீர்க்க ஓடிவரும் பதைத்தாள் பாவை
சுட்டுவிடு எனையம்மா என்றான் ஆனால்
சொன்னமொழி கேட்கவவள் உயிரோ டில்லை!
கணநேரம் யோசித்தான் கடமை வீரன்
கருவிகளும் ஆயுதமும் கண்ணில் தோன்றும்
மணம்வீசும் தாய்நாட்டு மண்ணை யல்ல
மாவீரர் கைதவழ்ந்த எதையும் பின்னால்
பிணமாக்கி எனையழித்து மாற்றான் கொள்ளும்
பெரும்பிழையை விடமாட்டேன் என்றே கூறித்
தணலாகிப் புகையாகித் தானும் சேர்ந்து
தமிழ்வேங்கை வெடித்திட்டான் எதுவும் இல்லை!
இரா. சம்பந்தன்

No comments:

Post a Comment