Thursday, June 15, 2017

அன்றே மகிந்தவிற்கு எச்சரிக்கை விடுத்த ஞானசாரர் : ஆபத்தில் நாடு! இக்கட்டில் அரசு

தற்போது நாட்டில் குறுகிய காலத்தில் மிகவும் பிரசித்தமான பெயரைப் பெற்றுள்ள பிரதான நபர் பொதுபலசேனாவின் ஞானசார தேரர். அவருக்கு கைது ஆபத்து தொடர்ந்து வருகின்றது.
இப்போதைய அரசின் நிலைப்பாட்டின் அடிப்படையில், அவர்மீது கை வைப்பதும், விட்டுவிடுவதும் இரண்டுமே ஆபத்தான செயல் என்று கூறி விடலாம்.
இந்தக் கூற்றினை வலுப்படுத்திக் காட்டுகின்றது இப்போதைய அரசின் இழுபறி கொண்ட நகர்வுகள்.
இன்றைய நிலையில் ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்துள்ள ஞானசாரர் தீவிர மதவாதத்தையும், இனவாதத்தையும் வெளிப்படையாகவே கக்கிவரும் ஒருவராக வர்ணிக்கப்பட்டு வருகின்றார்.
ஆனாலும் அவரின் விடயத்தில் தீர்வு காண அரசு ஆமைவேகத்தில் நகர்ந்து வரும் விடயமானது, அரசின் பின்புலங்களோடு ஞானசாரர் செயற்பட்டு வருகின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.
இதனை ஒரு சில அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர். அதாவது அரசு தரப்பில் உள்ள முக்கிய அமைச்சர் (கள்) ஞானசாரருக்கு உதவி வருவதாக தெரிவிக்கபட்ட போதும் அந்த விடயம் தொடர்பில் பெரிதாக பேசப்படவில்லை.
அதேபோல ராவணபலய, சிங்கலே, சிஹல ராவய, என பௌத்த அடிப்படைவாத அமைப்புகள் பல காணப்பட்டபோதும் இவை அனைத்திற்கும் தலைமை தாங்கும் பொதுபல சேனாவின் வளர்ச்சி என்பது வியப்பிற்குரியது.
அரசியல் கட்சி அல்லாத ஓர் அமைப்பு இத்தகைய வளர்ச்சி பெற்று பெரும்பான்மை மக்களிடையே முக்கியத்துவம் பெற்றுவருவதற்கு முக்கிய காரணம் நாட்டில் இன்றும் இனவாதம் மற்றும் மதவாதம் போன்றன முற்றாக அழிக்கப்படவில்லை என்பதனையே காட்டுகின்றது.
அளுத்கம சம்பவத்தில் பொதுபல சேனாவிற்கு நேரடியான தொடர்புகள் இருந்தன என்று மகிந்த ஆட்சியில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும் விசாரணைகள் நடத்தப்பட்டதாக அறிய முடியவில்லை. அதே நிலையே இன்றும் நீடிக்கின்றது.
குறிப்பாக மகிந்த ஆட்சி காலத்தில் அளுத்கம விவகாரத்தினால் அப்போது ஞானசாரருக்கும், ஆட்சி தரப்பில் உள்ள அமைச்சர்கள் சிலருக்கும் கருத்து முரண்பாடுகள் தோன்றியன.
இதனால் “துள்ளிக் கொண்டு இருக்கும் அமைச்சர்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அடக்காவிட்டால் நாம் அடக்க வேண்டிய நிலை வரும் என மகிந்தவிற்கே எச்சரிக்கை விடுத்தார் ஞானசாரர்.
இந்த விடயமானது மகிந்தவின் ஆட்சி காலத்திலேயே அரசாலும் அடக்க முடியாத அசுர வளர்ச்சியை பொதுபல சேனா பெற்று விட்டதனை உணர்த்தி விட்டது.
மகிந்தவிடம் இருந்து ஆட்சி கைவிட்டுப் போவதற்கு பொதுபல சேனாவும் ஓர் காரணம் என்பதும் ஒரு தரப்பினரின் கருத்து. அதேபோல் பொதுபல சேனாவை சாதாரண அமைப்பு எனக் கருதி ஒதுக்கி விட முடியாது.
சிங்கள, பௌத்த மக்களிடையே கனிசமான ஆதரவினை கொண்டுள்ள ஓர் அமைப்பு இது என்பதோடு, இன, மத வாதக் கொள்கைகளை தீவிரமாக பரப்பி அது சிங்கள மக்களிடத்தில் கடுமையான தாக்கத்தினையும் ஏற்படுத்திவிட்டது.
2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவு பெற்றதைத்து தொடர்ந்து, பௌத்த தேசியவாதத்திற்கு முற்று முழுதான தலைமைத்துவம் தனக்கும், தன் குடும்பத்தாருக்குமே சாரும் என பெரும்பான்மை மக்களிடையே தன்னை உருவகப்படுத்திக் கொண்டார் மகிந்த ராஜபக்ச.
எனினும் அதனை சவாலாக மாற்றியது மட்டுமல்லாது, மகிந்தவின் அதிகாரத்திற்கும் பொதுபலசேனா போட்டியாக மாறிவிட்டது. என்றாலும் மகிந்தவும் அவர்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
அதேபோன்று இப்போதும் ஆட்சியாளர்களுக்கு கடும் சவாலாக பொதுபலசேனா அமைப்பு மாறிவிட்டது. இப்போது சகித்துக் கொண்டு வரும் நல்லாட்சி நீண்ட காலத்திற்கு இதனை சகித்துக் கொள்ள முடியுமா என்பது மிகப்பெரியக் கேள்வி.
அப்படி சகித்துக் கொண்டு செல்லுமானால், கூடிய விரைவில் பௌத்த, சிங்கள பேரினவாதத்திற்கு தலைமைப்பொறுப்பினை பொதுபலசேனா இலகுவாக பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்படும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது.
இதற்கான தீர்வினை அரசு எந்தவகையில் பெற்றுக் கொடுக்கப்போகின்றது என்பது சிக்கலாக கேள்வி.
இந்த நிலையில் இனவாதம் பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தமை என்ற ரீதியில் ஞானசாரரைக் கைது செய்வது அரசுக்கு முடியாத காரியம். காரணம் அப்படி செய்யும் போது ஞானசாரர் பக்கம் இருக்கும் பௌத்த அமைப்புகள் கலகத்தை விளைவிக்கக் கூடும்.
அது ஆட்சியாளர்களுக்கும் எதிரியாக மாறிவிடும். அதனை அண்மையில் அமைச்சர் ராஜித தெளிவாக கூறினார். ஞானசாரர் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது.,
நீதிக் கட்டமைப்புகளால் நாட்டில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு பெற்று விட முடியாது என்பதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒளிந்துள்ள ஒருவரை இலகுவில் கைது செய்ய முடியாது என்றார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.
இதன் மூலம் இந்த பிரச்சினையை அரசு வேறு வகையில் கையாள முயற்சி செய்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.
ஆனால் இதேநிலை சில மாதங்களுக்கு முன்பும் ஏற்பட்டது. அப்போது பொதுபலசேனா உட்பட பௌத்த அமைப்புகளோடு ஓர் பேச்சுவார்த்தையை நடத்தி, அமைதி ஏற்பட்டு விட்டதனைப் போன்று கூறப்பட்டதே தவிர தீர்வு கொடுக்கப்படவில்லை.
இதுவும் அரசுக்கு இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையினையே காட்டுகின்றது. எது எவ்வாறாயினும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டியது அரசின் முக்கிய தேவை.
பல பொலிஸ் குழுக்கள் ஞானசார தேரரை கைது செய்ய நியமித்துள்ளதாகவும், அரசு தெரிவித்து வரும் அதே சமயம் மற்றொரு பக்கத்தில்.,
முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டே வருகின்றது. இந்த சம்பவங்களுக்கும், ஞானசாரருக்கும் தொடர்பு உள்ளது என்பதனை பலர் வெளிப்படையாக கூறிவருகின்றனர்.
ஆனாலும் இந்த விடயத்தில் தீர்வு காணப்படவில்லை. ஒரு வகையில் ஞானசாரரைக் கைது செய்தால் இந்த பிரச்சினைகள் முற்றாக தீர்ந்து விடுமா? அடுத்து இனவாதம் அடக்கப்பட்டுவிடுமா?
அல்லது பொதுபலசேனாவை தடை விதிப்பதாலோ, இந்தப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ள முடியுமா என்பதும் இப்போதைக்கு கேள்விக்குறியே.
ஆனாலும் இந்த விடயத்தில் அரசின் அதீத அமைதிக் கொள்ளை நாட்டுக்கு பாதகமாக அமையுமே தவிர சாதகத்தினை தருமா என்பதும் அரசின் நகர்வுகளைப் பொறுத்தே தெரிய வரும்.
மேலும், நாட்டில் இவ்வாறு இனவாதத்தினை தொடரவிடுவது நாட்டுக்கு ஆபத்தாகவே அமையும் என்பதே அரசியல் அவதானிகளின் கூற்றாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment